செவ்வாய், 29 நவம்பர், 2016

நாச்சியார் அம்மன்

சில பதிவுகள் முன்பு குலதெய்வங்கள் பற்றி எழுதுகையில் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி சொல்லியிருந்தேன். அப்படியென்றால் என்ன என்று நண்பர் முத்துராமன் சித்தா என்பவர் கேட்டார்.

அதற்கு பதில் சொல்லும் விதமாக இதைச் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் சில மாதம் முன்பு ஒரு பிரபல ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது ராஜபாளையத்துக்கு தினமும் போய் தறிகளைப் பார்க்கும் வேலை. அப்போது அறிந்த வரலாறு இது.

ராஜபாளையத்தில் ஒருசில குடும்பங்களில் குலதெய்வம் நாச்சியாரம்மன் வழிபாடு உண்டு. அந்த வரலாறு இதுதான் .....

நமது இனத்தில் வடக்கிலிருந்து வந்த காரணத்தால் குழந்தைத் திருமணம் என்ற பழக்கம் இருந்தது. அது தான் சாஸ்திர சம்மதமான திருமணமும் கூட. (விரிவஞ்சி விளக்கமாக சொல்லவில்லை) பிற்பாடு ராஜாங்க சட்டத்தை அனுஷ்டிக்கும் முறையில் அப்பழக்கம் கைவிடப்பட்டது.

நாச்சியாரம்மாவுக்கும் சிறு வயதிலேயே திருமணம் நடந்தது. கால சூழ்நிலை காரணமாக கணவனானவர் (அவரும் சிறுவர் தான்) இறந்து விட , இந்தக் குழந்தையும் கணவருடன் உடன் கட்டை ஏறும் படி வற்புறுத்தப்பட்டது. பாவம்... சிறு குழந்தை தானே!!! மாட்டேன் என்று மறுத்தது குழந்தை.

ஆனால் பிறந்த வீட்டு வழியினர் கட்டாயப்படுத்தி இறங்கச் சொன்னார்கள். பிடிவாதமாக மறுக்கவே, சிதையில் தூக்கிப்போட முயன்றார்கள். தூக்கிவந்து எறியப் போகும் சமயம் குழந்தை நாச்சியாரம்மன் கணவன் வீட்டாரை வாழ்த்திவிட்டு, பிறந்த வீட்டாரை திட்டி விட்டு தன்னை வைத்து வணங்கும் படி சொல்லியபடியே நெருப்பில் விழுந்தது

குழந்தை நெருப்பில் விழுந்த சில நிமிடங்களில் அது கட்டியிருந்த பாவாடை மட்டும் நெருப்பிலிருந்து தெரித்து வந்து வெளியில் விழுந்தது. அந்தப் பாவாடையை எடுத்துவந்த வீட்டார்கள் அதையே நாச்சியாரம்மனாகக் கருதி இன்றளவும் வணங்கி வருகிறார்கள்.

இந்தச் சம்பவத்தில் கிடைக்கப் பெற்றது பாவாடை துணி. சில வழிபாடுகளில், சில குடும்பங்களில் சேலையாக இருந்து வழிபடப்படும்.

சேலைக்கார அம்மன் என்பதற்கு விளக்கம் புரிந்ததா முத்துராமன் சித்தா ஜீ ?




**
ஸ்ரீ கோச்சடை கருப்பசாமி, முத்தையா சாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar