திங்கள், 12 டிசம்பர், 2016

சாலியரும் தறி ரகங்களும்

40,60,80,100 ஆம் நம்பர் நூலில் நெய்யும் துணிகள் நைஸ் வேட்டி என்பார்கள். இந்தத் துணி நெய்யும் தறி நைஸ்த்தறி எனப்படும். 20, 26 ரக நூல் நெய்யும் தறிகள் கைத்தறி எனப்படும்.

பாவு இழையின் நெருக்கத்தையும் , கலக்கமாய் இருப்பதையும் பண் என்பார்கள். அதாவது ஒரு அங்குலத்துக்கு 44 இழைகள் இருந்தால் 44 இழைப் பண்ணில் நெய்தது எனப்படும்.
இந்த அளவைச் சரிபார்க்க தற்போது ஊடைக் கண்ணாடி பயன்படுத்தப் படுகிறது.முற்காலத்தில் இதற்கு முக்கால் துட்டு அல்லது காலணா வைத்து அதன் மேல் இருக்கும் நூல் எண்ணப்படும். முக்கால் துட்டு 1 அங்குல விட்டமுடையது.

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மாயவரம் சாலியர் திருமணம் 3

நலுங்கு

ஒரு பெரிய தாம்பாளத்தில் சாதம் வைத்து மனையில் மாப்பிள்ளையை உட்கார வைத்து பெண், மாப்பிள்ளை எதிரில் நின்று சாதத் தட்டை மாப்பிள்ளையிடம் கொடுப்பார். அதை மாப்பிள்ளை முக்காலியில் வைப்பார். தட்டில் உள்ள சாதத்தை எடுத்து 4 பகுதிகளாகப் பிரித்து, மற்ற காய்கறிகள், அப்பளம் வடை , லட்டு, பாயாசம் எல்லாவற்றையும் நான்கு சாதத்திலும் வைப்பார். புரோகிதர் மாப்பிள்ளையிடம் ஒரு பகுதியை தொட்டு "இது அரதேசி, பரதேசிக்கு" சொல்லச் சொல்வார். பின் அடுத்த பாகத்தை தொட்டு "இது குருவுக்கு" என்றும் அடுத்த பாகத்தை தொட்டு "எனக்கு" என்றும் நான்காவது பாகத்தை என் மனைவிக்கு என்று சொல்வார்.

பிறகு தன் பாகத்தில் கொஞ்சம் எடுத்து மாப்பிள்ளை சாப்பிடுவார். மனைவி பாகத்தில் கொஞ்சம் எடுத்து மனைவிக்கு கொடுத்து சாப்பிடச் சொல்லுவார். இது முடிந்து பெண், மாப்பிள்ளைக்கு சந்தனம் பூசிவிடுவது ; மாப்பிள்ளை, பெண்ணுக்கு சந்தனம் பூசுவது ; பரஸ்பரம் பன்னீர் தெளிப்பது ; வெற்றிலை போடுவது ; இருவரும் பூப்பந்து உருட்டுவது என்ற நலுங்கு சடங்கு நடக்கும்.பிறகு புரோகிதர் மாப்பிள்ளையின் மடியில் ஒரு பட்டுத்துணியை போட்டு அதன் மேல் ஒரு சங்கு பாலாடையை வைத்து, அதையே குழந்தையாக பாவித்து , மாப்பிள்ளையிடம் நான் "முத்து வியாபாரத்துக்கு போகிறேன். குழந்தையை பால் புகட்டி பார்த்துக்கொள் "என்று பெண்ணிடம் சொல்லச் சொல்லுவார். பெண்ணின் புடவைத் தலைப்பில் சங்கை வைத்து மாப்பிள்ளை தூளி ஆட்டுவது போல ஆட்டுவார்.

புரோகிதர் குழந்தைக்கு தாலாட்டு பாடுவார். மேளக்காரர் நாதஸ்வரம் வாசிப்பார். இதன் பின் மதிய விருந்து நடக்கும். அடுத்து ஊஞ்சலில் அமரவைத்து ஆடுவார்கள். பின் பெண் மாப்பிள்ளை ஊர்வலமாகப் போய் பெண் வீட்டில் பெண்ணை விட்டு வருவார்கள்.பெண் வீட்டிலிருந்து சீதனமாக, பாத்திரங்கள், பலகாரங்கள், பழம், சர்க்கரை, வெற்றிலை, பூ, கட்டில், மெத்தை, தலையணை, கண்ணாடி, பீரோ எல்லாம் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பார்கள். ஆடிப்பாக்கு, பதினெட்டாம் பாக்கு, கார்த்திகை பாக்கு என்று அவ்வப்போது பாக்கு வைத்து விருந்து தருவது உண்டு.

பெண், மாப்பிள்ளை வீட்டுக்கு வரும்போது ஒரு கூடையில் மூன்று தேங்காய் ஒரு சீப்பு பழம், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள் குங்குமம் கொண்டு வருவார். இதற்கு பெண் அழைத்து போவது என்று பெயர். மூன்று அல்லது ஐந்து பேர் சென்று பெண்ணைக் கூட்டி வருவார்கள்.

பெண்ணும் மாப்பிள்ளையும் பார்வதி பரமேஸ்வரராக காட்சியளிப்பார்கள். பெண்ணுக்கு தலைமுதல் கால் வரை ஆபரணங்களை சூடியிருப்பார்கள். புடவை பிராமண பாணியில் மடிசார் வைத்து கட்டியிருப்பார். வந்திருக்கும் விருந்தினர்களும் கச்சம் வைத்து வேஷ்டி கட்டி சட்டை போடாமல் துண்டு போட்டிருப்பார்கள்.