ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

சத்திரப்பட்டி சாலியர் முளைக்கொட்டு திருவிழாவும் அதன் வரலாறும்

 
_________________________
வடக்குத்தெரு செல்வமுளை மாரியம்மன்

 சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து தர்மமும், சத்திரம் அமைத்து அன்னதானமும் ,  செழிப்புற்று இருந்த சத்திரப்பட்டி கிராமத்தில், மாணிக்கவாசகர் என்கிற ஒரு சிறந்த பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் சத்திரப்பட்டியில்  இருக்கின்ற துரைமடம் விநாயகர் கோவிலில் நாள்தோறும் சென்று வணங்காமல் உணவு அருந்தியது இல்லை. 

 அப்படிப்பட்ட சிறந்த  பக்தராகிய மாணிக்கவாசகர் அவர்களின் கனவில் ஒருநாள் அம்பிகை தோன்றி,  தான் ஒரு குறிப்பிட்ட முருங்கை மரத்தில் பாலிகையாக வீற்றிருப்பதாக சொல்லி,  அந்த தன்னுடைய உருவத்தை கனவில் காட்டினார். தன்னை வணங்கும் படியும் கூறினார்.  அந்த குறிப்பிட்ட முருங்கை மரத்தில் பால் வடியும் என்றும்,  அதுவே தான் இருக்கும் மரம் என்றும் அடையாளம்  கூறினார்.

     மறுநாள் அந்த மரத்தை கண்டறிந்த மாணிக்கவாசகர் முருங்கை மரத்திலேயே அம்மனின் குழந்தை வடிவ சிலா ரூபத்தை வடிவமைத்தார்.
 குழந்தை ரூபத்தில் இருக்கும் அம்மன் என்பதால்,  சாலியர்களின் குலத்தொழிலான நெசவுத்தொழில் செய்யும் கைத்தறியில்,  தொட்டில் கட்டி வருடம் முழுவதும் அம்மன் இருப்பார். வருடத்தில் முளைக்கொட்டு திருவிழா கொண்டாடப்படுகின்ற ஐந்து நாட்கள் மட்டுமே நின்ற கோலத்தில் காட்சி தருவார். மாணிக்கவாசகரே அம்மனுக்கு பூஜை முறையையும்,  வழிபாட்டு முறைகளையும் முறைப்படுத்தி வகுத்திருக்கக் கூடும்.

அதுவரை எந்த படிப்பு வாசனையும் இன்றி இருந்த மாணிக்கவாசகர், அம்மனின் அருள் பெற்று பாடல்களை இயற்றும் அளவிற்கு புலமை பெற்றார்.  இன்றளவும் அவர் இயற்றிய கும்மி பாடல்கள் தான் முளைக்கட்டு திருவிழாவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மாணிக்கவாசகரின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இன்றளவும்  வடக்குத் தெருவில் அவருடைய ஜீவ சமாதியும் , ஆலயமும் உள்ளது. 

செல்வ முளைமாரி அம்மன் வேண்டியதை அருளும் கருணைக் கடல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2019ஆம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா

 சுமார் 500 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும்  சிறப்பான முளைக்கொட்டு திருவிழா, இந்த ஆண்டு ஆகஸ்டு 4 ஆம் தேதி (ஆடி 19) முளைத் தாண்டுதல் என்கின்ற கொட்டகைக்கு காலூன்றும் நிகழ்வோடு துவங்கியது.

 முளை தாண்டியது  முதல் அனைத்து தெருக்களிலும் தாய்மார்கள்  கும்மியடித்து அம்மனை  போற்றும் நிகழ்வு தினசரி நடைபெற்றது.  மறுநாள் ஆடி இருபதாம் தேதி முளைப்பாரிக்கு என தானியம் ஊற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது . 

      ஆகஸ்ட் 13-ஆம் தேதி (ஆடி 28) செவ்வாய்க் கிழமை முளைக்கொட்டு திருவிழா விமரிசையாக தொடங்கியது.

 அன்று இரவு ஊரின் அனைத்து வீதிகளிலும் 4 தெருக்களின் சப்பரங்கள் வீதி உலா  வந்ததன.  மறுநாள் காலை புதன்கிழமை வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்  வீதிகளில் ஊர்வலம் வந்து,  ஒவ்வொரு தெருக்களிலும் இருந்த கொட்டகைகளில் அம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து பொங்கலிடும் வைபவம் உட்பட பல்வேறு நேர்த்திக்கடன்கள் நமது  இன மக்களால் செலுத்தப்பட்டன. 

அன்று மாலை  மேளதாள வாத்தியங்களுடன் முளைப்பாரிகள் வீதி உலா வந்து,  மாணிக்கவாசகர் நாள்தோறும் வணங்கிய துரைமடம் விநாயகர் கோவில் அருகில் உள்ள பொது கிணற்றில் கரைக்கப்பட்டது. 
அன்று நமது சாலியர் இனத்தின் பெருமைக்குரிய ஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தால் , நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்று இரவு வழக்கம் போல் சப்பரங்களில் அம்மன் வீதி உலா  நடைபெற்றது. 

 மறுநாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி (ஆடி 30) மாலை ஒவ்வொரு தெருக்களிலும் அமைக்கப்பட்ட கொட்டகைகளில் கிளாரிநெட் இசை நிகழ்ச்சிகள்  விமரிசையாக நடைபெற்றது.  நடுத்தெரு கிழக்கு பகுதியில் வரன் தேடும் வைபவம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

 அன்று இரவு சுமார் 9 மணியளவில் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம்,  சங்கரபாண்டியபுரம் 3 ஊர் சாலியர் இளைஞர் பேரவையின் சார்பாக,  நமது சாலியர் இனத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா  நடுத்தெரு விழா கொட்டகையில் நடைபெற்றது . நமது பெருமதிப்புக்குரிய தாசில்தார் உயர்திரு ஆனந்தராஜ் அவர்கள் (ஸ்ரீவில்லிபுத்தூர்) அவர்கள் பரிசளித்து,  குழந்தைகளை கௌரவித்து,  வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்கள்.
 அதை தொடர்ந்து அனறு இரவு 4 சப்பரங்களில் அனைத்து வீதிகளிலும் அம்மன் உலா நடைபெற்றது.  ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி (ஆடி 31)  வெள்ளிக்கிழமை காலையில் சப்பரங்கள் இறக்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது. 

அன்று மாலை அனைத்து தெருக்களிலும்
அமைக்கப்பட்டிருந்த விழா கொட்டகைகளில்,  அம்மனின் ஊஞ்சல் ஆட்டு விழாவும் குத்துவிளக்கு பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.

பின் குறிப்பு சாலியர் மலர் பத்திரிக்கைக்கு நான் எழுதிய கட்டுரையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம். 

 - அடியேன் saliya maharishi gothira saliyar.

மாத்தூர் கருப்பசாமி



         
மதுரையை அரசாளும் ஸ்ரீமீனாட்சி தேவி, பாண்டிய மன்னனின் மகளாகப் பிறந்து வளர்ந்த காலம்... இவளின் அண்ணன்மார்களாக கோச்சடை முத்தையாவும் கருப்பசாமியும் மானிடப் பிறவி எடுத்து வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், சகோதரிக்குத் திருமணம் என்பதை அறிந்த இந்த சகோதரர்கள், அவளது திருமணத்தை முன்னின்று நடத்த விரும்பினர். எனவே, பாண்டியன் கோட்டைக்குக் காவலாளிகளாக வேலைக்குச் சேர்ந்தனர். மீனாட்சிதேவியின் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியில், கோச்சடை முத்தையா மதுரையிலேயே தங்கி விட்டார். கருப்பசாமி தன் குதிரையில் ஏறி, தெற்கு நோக்கிப் பயணித்தார்!

வழியில், (மதுரையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கும் டி.சுப்புலாபுரத்தை நெருங்கியபோது) கருப்பசாமிக்கு தாகம் எடுத்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அருகிலிருந்த கிணற்றில் (ஆசாரி குலத்தைச் சேர்ந்த) அழகிய பெண் ஒருத்தி தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவளிடம் சென்று குடிக்கத் தண்ணீர் கேட் டார். தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்த அந்தப் பெண், 
கருப்பசாமியை வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்துக் கொண்டே நின்றாள். கையில் இருந்த வாளி கிணறில் விழுவதைக்கூட அவள் உணரவில்லை! ஆனால்... கருப்பசாமி தனது சக்தியால், அந்த வாளியை அந்தரத்தில் அப்படியே நிறுத்தி
வைத்தார். இதைப் பார்த்து அந்தப் பெண் ஆச்சரியம் அடைந்தாள்.

''இனி, ஒரு கணம் கூட உங்களைப் பிரிந்து இருக்க முடியாது. என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்'' என்று கருப்பசாமியிடம் வேண்டினாள்.அதற்கு, ''நானொரு நாடோடி; திக்கு- திசையின்றி ஓடிக் கொண்டிருப்பவன். என்னைத் தொடர்ந்து உன்னால் வர முடியாது'' என்று கூறிவிட்டு, குதிரையைக் கிளப்பினார் கருப்பசாமி.
ஆனால், தன் நிலையில் இருந்து சற்றும் மாறாத அந்தப் பெண், கருப்பசாமியைப் பின்தொடர்ந்து ஓடினாள். இதில் நெகிழ்ந்து போன கருப்பசாமி, அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார். கூடவே, அந்தப் பெண் ஆசையுடன் வளர்த்த நாயும் ஓடியது. சிறிது நேரத்திலேயே, இந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவியது. அந்தப் பெண்ணின் அண்ணன்மார் ஏழு பேரும், தங்கையை அபகரித்துச் சென்ற கருப்பசாமியைக் காவு வாங்குவதற்காக ஆவேசத்துடன் குதிரையில் ஏறிப் புறப்பட்டனர்.

இதையறிந்த கருப்பசாமியும் அந்தப் பெண்ணும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலையடிவாரத்தில் மாவூத்தில் உள்ள உதயகிரிநாதரிடம் சென்று அடைக்கலம் கேட்டனர். அவர், மலை மீது வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கத்திடம் சென்று சரணடையும்படி பணித்தார்.

அதன்படி இருவரும் சுந்தர மகாலிங்கத்திடம் சென்றனர். அவரோ, ''நீங்கள் இங்கெல்லாம் இருக்க முடியாது. காலாங்கரையில் உள்ள அம்மச்சி அம்மனிடம் செல்லுங்கள். அவள் அடைக்கலம் தருவாள்'' என்று அருளினார். இதையடுத்து இருவரும் அம்மச்சி அம்மன் முன்னே நின்றனர். அவள், ''என் தங்கையான வயக்காட்டு அம்மனைப் போய் பாருங்கள்'' என்றாள். இருவரும் வயக்காட்டு அம்மனிடம் சென்றனர்.

''நீங்கள் இருவரும் என் பார்வையில் உள்ள நத்தக்கூர் மேட்டுக்குச் சென்று தங்குங்கள். எவராலும் உங்களை நெருங்க முடியாது!'' என்றாள் வயக்காட்டு அம்மன்.

மகிழ்ச்சியடைந்த இருவரும் நம்பிக்கையுடன் நத்தக்கூர் மேட்டுக்குச் சென்று தங்கினர். ஆனால், இவர் களுடன் வந்த நாய்... வழியில், திசைமாறி வேறு எங்கோ சென்று விட்டது!

இந்த நிலையில்... அந்தப் பெண்ணின் அண்ணன்மார் ஏழு பேரும் ஊர் ஊராகச் சென்று தங்கள் தங்கையைத் தேடி வந்தனர். ஓரிடத்தில்... தங்கை ஆசையாக வளர்த்த நாய், காட்டுக்குள் இருந்து ஓடிவருவதைக் கண்டனர். நாயைப் பின்தொடர்ந்து, கருப்பசாமி தங்கியிருந்த நத்தக்கூர் மேட்டை வந்தடைந்தனர்.

அவர்கள் ஆக்ரோஷத்துடன் வருவதைக் கண்ட கருப்பசாமி, 'சண்டையைத் தவிர வேறு வழியில்லை!' என்பதை உணர்ந்தார். கையில் வாளைத் தூக்கினார். இதையடுத்து நடந்த சண்டையில், சகோதரர்கள் ஏழு பேரும் கருப்பசாமியின் வாளுக்கு பலியானார்கள். தன் கண் முன்னே சகோதரர்கள் இறந்ததைக் கண்டு, துடிதுடித்துப் போன அந்தப் பெண், தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாள்.

இதைக் கண்டு கருப்பசாமி கலங்கினார். 'இவளுக்காகத்தானே இவர்களைக் கொன்றோம். கடைசியில் இவளே நம்மை விட்டுப் போய்விட்டாளே!' என்று கதறியவர், தனது வாளைத் தரையில் ஊன்றி, அதில் பாய்ந்து தன் னையே மாய்த்துக் கொண்டார்.

சிறிது நேரத்திலேயே, அங்கு பிணந்தின்னி கழுகுகள் வட்டமடித்தன. இதையடுத்து ஊரே திரண்டு நத்தக்கூர் மேட்டுக்கு வந்தது. அங்கு... கோரமான நிலையில், ஒன்பது பேர் செத்துக் கிடந்ததைப் பார்த்து, மொத்த கிராமமே கதறி அழுதது. கிராமத்தாரே பிணங்களை எடுத்துச் சென்று எரியூட்டினர்.

அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த... பிறவியிலேயே பேச முடியாத ஐந்து வயதுச் சிறுமி ஒருத்திக்கு அருள் வந்தது. முதல் முறையாக வாய் விட்டுப் பேசியவள், கருப்ப சாமி மற்றும் அவருடன் வந்த பெண்ணின் பூர்வீகத்தை விவரித்தாள். அத்துடன், ''நானும் (கருப்ப சாமி) கம்மாளச்சி அம்மனும் இங்குதான் குடியிருக்கிறோம். நீங்கள், இதே இடத்தில் எங்களுக்குப் பிடிமண் எடுத்து வைத்து கோயில் கட்டுங்கள்; ஆண்டுக்கு ஒரு முறை எங்களை வழிபடுங்கள். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஊரையும் மக்களையும் செழிப்புறச் செய்கிறோம்'' என்றாள்.

பிறவியில் இருந்தே பேசும் சக்தியற்ற சிறுமி பேசுவதைக் கண்டு பிரமித்த ஊர்மக்கள், அவளது அருள்வாக்கைக் கேட்டு மெய் சிலிர்த்தனர். கிராம முக்கியஸ்தர்களான நல்லாம்பிள்ளை தேவரும் கண்டியத் தேவரும் இணைந்து, கருப்பசாமிக்கும் கம்மாளச்சி அம்மனுக்கும் சிறியதாகக் கோயில் ஒன்று எழுப்பி, வழிபடத் துவங்கினர்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலுக்கு வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது மாத்தூர் கிராமம். இதன் வடக்கு எல்லையில் இருக்கிறது நத்தக்கூர்மேடு. ஊருக்கு ஒதுக்குப்புறமாக... கண்மாய்க் கரையில், தென்னந்தோப்புக்கு மத்தியில் உள்ளது மாத்தூர் கருப்பசாமி கோயில்.

கருவறையில் தலையில் உருமா (தலைப்பாகை) கட்டிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறார் கருப்பசாமி. இவருக்கு வலப் புறம் கம்மாளச்சி அம்மன். கோயிலைச் சுற்றி ஐந்து இடங்களில் பலிபீடங்கள் உள்ளன. கோயிலின் முகப்பில் நல்லாம்பிள்ளைத் தேவர், கண்டியத் தேவர் ஆகிய இருவருக்கும் ஒரு சேர அமைந்த சிலைகள் இருக்கின்றன. கருப்பருக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்போது இவர்களுக்கும் பூஜை உண்டு.

சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், பட்டியக்கல் முதலிய ஊர் சாலியர்களில் ஒரு தாயாதிமார்கள் மாத்தூர் கருப்பசாமியைக் குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். 

இவர்தான் என் குலதெய்வம்🙏🙏🙏

Saliya Maharishi

சத்திரப்பட்டியும் சாலியர்களும்



முன்குறிப்பு:- 
சாலியர் முதலாக குடியேறிய பகுதி தெற்கில் ராமலிங்கபுரத்தை அடுத்து சமுசிகாபுரமே. அந்த காலகட்டத்தில் சத்திரப்பட்டி முதலில் உருவாகி இருக்கவில்லை. 
கிபி 1600களின் இறுதி 1700களின் தொடக்கத்தில் மதுரையை தலைநகராக அமைத்து ராணி மங்கம்மாள் ஆட்சி செய்தார். அவர் பல சீர்திருத்தப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதியாக சாலை அமைப்பு. 

மதுரையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை மிக நீண்ட சாலையை நிறுவினார். அதே கால கட்டத்தில் மற்றொரு பிரிவாக சமுசிகாபுரத்தை கடந்து செல்லும் மங்கம்மாள் சாலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்பொழுது இருக்கும் வன்னியம்பட்டி சாலை - ஸ்ரீவில்லிபுத்தூர் வரை. 

சாலை அமைக்கையில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அந்தப் பகுதியின் பெருந்தலைக்கட்டு கொண்ட இனத் தலைவர் மூலம் பேசி பணி தொடர்ந்தார். அதே கால கட்டத்தில் தான் மேற்படி சாலையின் கிழக்கே சத்திரப்பட்டி வளர்ந்து வந்தது. (பெயர் கிடையாது)

சாலை அமைத்த ராணி, சாலையின் ஓரங்களில் கால்நடைகள் குடிக்க தண்ணீர் தொட்டிகளையும், கடந்து செல்லும் யாத்திரீகர்கள் இளைப்பாற சாத்திரங்களையும் அமைத்தார். 

அதில் ஒரு சத்திரம் மங்கம்மாள் சாலையின் ஓரம் அமைந்த ஊரில் அமைக்கப்பட்டது. பிறகு இதன் காரணம் கொண்டு சத்திரப்பட்டி என்ற பெயர்  ஏற்பட்டது. மேற்படி சத்திரம் அந்த இடத்தின் பெரிய இனக்குழுவான சாலியர் பொறுப்பில் இருந்ததாம். அதற்கு முன் சமுசிகாபுரம் என்றுதான் அழைக்கப்பட்டது. 

பொதுவாக ஊர் பெயர் அமைக்கும் போது காரணப் பெயர் கொண்டுதான் வைக்கப்படும். பாதுகாப்பு காவல் கொண்ட ஊர் என்றால் "புரம்". படை வீரர்கள் அல்லது வேட்டை சமூகம் வாழும் ஊர் "பாளையம்". மிகச் சிறிய ஊராயின் "பட்டி" என முடியும். 

சத்திரம் இருந்த சிறிய ஊர் சத்திரப்பட்டி. பிறகு காலப்போக்கில் சத்திரம் மறைந்து விட்டது.

காஞ்சிபுரம் சாலியர் தெரு

பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரத்தில் , நமது நமது சாலியர்கள் வாழ்ந்ததன் அடையாளமாக ஷேக் பேட்டை என்ற இடத்தில்  "சாலியர் தெரு" என்ற பெயரில் இன்றும் ஒரு தெரு உள்ளது.  இது தற்போதைய காஞ்சி நகரத்தில் முக்கியமான பகுதியும் கூட.  இது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயமும் கூட

தேசியக்கொடியும் பத்மசாலியரும்

நம் நாட்டில் முதலில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி நம் பத்மசாலியர் சமூகத்தை சார்ந்த திரு. கோட்ட வெங்கடாசலதி அவர்களால் பறக்கவிடப்பட்டது என்பதனை பெருமையுடன் நினைவு கூருவோம். வரலாற்றில் தடம் பதித்த நாம் பெருமை கொள்வோம்.


Saliya Maharishi

அறுவையர்

'அறுவை’ என்ற பெயரால் தமிழில் துணி குறிப்பிடப்பட்டுள்ளது. அழகர் மலையில் காணப் படும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக் காலத்திய தொல் தமிழ் (பிராமி) கல்வெட்டில் ‘அறுவை வணிகன்’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் துணி வணிகத்தின் தொன்மையை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. இளவேட்டனார் என்ற சங்க காலக் கவிஞர் ‘அறுவை வணிகர்’ என்ற அடை மொழியினால் குறிப்பிடப்பட்டுள்ளார். 

சாலியர் குலத்தை அறுவையர் குலம் என்றும் பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடவியார் என்பதும் சாலியரின் பட்டமேயாகும்

சத்திரப்பட்டி சாலியர் முளைக்கொட்டுத் திருவிழா



பல நூற்றாண்டுகளாக நமது சத்திரப்பட்டியில் கொண்டாடப்பட்டு வரும் முளைக்கொட்டு திருவிழா இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஆடி 13 (29.7.18) அன்று முளைத்தாண்டுதல் என்னும் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முளைப்பாரி வளர்ப்பு நிகழ்ச்சி பக்தியுடன் தொடங்கிற்று. அதைத் தொடர்ந்து அடுத்து வந்த நாட்களில் சத்திரப்பட்டியின் நான்கு தெருக்களிலும் முளைக்கொட்டு வாசலின் முன்பு தாய்மார்களின் கும்மிப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

7.8.2018 அன்று முளைக்கொட்டு திருவிழா இனிதே துவங்கியது. அன்றிரவு அம்மன் சப்பர வீதியுலா ஒவ்வொரு தெருவின் சார்பிலும், அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. முளைக்கொட்டு விழாவின் அனைத்து தெரு மின் விளக்கு உபயம் சத்திரப்பட்டி ஆறுமுகா குரூப் முதலாளி உயர்திரு ஆறுமுகம்  ஐயா அவர்கள். 

அதைத் தொடர்ந்து மறுநாள் காலை முளைப்பாரி வீதி உலா வந்து அந்தந்தத் தெருக்களில் பந்தலில் அம்மன் முன்  சமர்ப்பிக்கப்பட்டு வணங்கப்பட்டது.  தொடந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து பல்வேறு நேர்த்திக்கடன்களும் மக்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

       அன்று மாலை பேண்ட் வாத்திய கச்சேரியுடன் முளைப்பாரி விதி உலாவந்து சத்திரப்பட்டி துரைமடம் விநாயகர் கோவில் அருகிலுள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது.  அன்று முழுதும் சத்திரப்பட்டியில் விழாவைக் காணவரும் பக்தர்களுக்காக சதுரகிரி காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தின் மூலம் அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்றிரவு அம்மன் சப்பர வீதி உலா நடைபெற்றது. 

மறுநாள் வியாழனன்று இரவு நடுத்தெரு விழாப்பந்தலில் வைத்து நமது ஏழூர் சாலியர் மகாஜன சங்கத்தின் சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இரவு அம்மன் அலங்காரச் சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

-சாலியர் மலர் பத்திரிக்கைக்காக அடியேன் எழுதிய கட்டுரை. 26 ஆகஸ்ட் 2018 இல்

கைத்தறித் துணிகளில் அச்சுப்பதித்தல்



துணிகளில் உருவங்கள் அல்லது ஓவியங்கள் பதிக்கும் தொழில்நுட்பமும் வழக்கில் இருந்துள்ளது. கி.பி. 1001ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் கல்வெட்டில் அச்சுத்தறி என்ற சொல்லாட்சி இடம்பெற்றுள்ளது.
 இதில் அச்சு என்பது அச்சிடலையும் தறி என்பது துணியையும் குறிக்கிறது.

நெசவு தொழில்நுட்பம்


சோறு வடித்த கஞ்சித் தண்ணீரைப் பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்குப் பசையாகப் போடுவதையும் நறுமணப் புகையூட்டுவதையும் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் சாயங்கள் துணிகளுக்குத் தோய்க்கப்பட்டன.
 குசும்பா எனப்படும் சிவப்பு நிற மலரிலிருந்து சிவப்பு நிறச்சாயம் தயாரிக்கப்பட்டது. தொடக்கத்தில் துணி தயாரிப்புடன் இணைந்திருந்த சாயமேற்றல் பின்னர் தனித்ததொரு தொழிலாக உருவெடுத்தது.

சிவப்பூட்டியோர் என்றழைக்கப்பட்ட சாய மேற்றுவோர் மீது வரி விதிக்கப்பட்ட செய்தியை 1223 ஆம் ஆண்டு திருவொற்றியூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது

சாலியரும் கைக்கோளரும்

நெசவு என்ற தொழிலுக்கு சாலியர் என்ற பெயர் மட்டுமே பழங்கால கல்வெட்டுகளில் உள்ளது. 

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான கல்வெட்டுக்களில் கூட நெசவுத் தொழிலுடன் தொடர்புடையதாக கைக்கோளர் சமூகம் குறிப்பிடப்படவில்லை. 

சுந்தரபாண்டியனின் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் இவர்கள் மீதான தறிஇறை (நெசவுத் தொழிலுக்கான வரி) குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் நெசவுத் தொழிலுடன் இச்சமூகத்தைத் தொடர்புபடுத்தும் பழமையான கல்வெட்டாகும். இதுபோன்ற வரியுடன் கைக்கோளர்களைத் தொடர்பு படுத்தும் பதினான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு சம்புவராயர் ஆட்சிக் காலத்தியதாகும்.