செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களின் திருமணம்

பரிசம் முடித்த பிறகு பெரியோர்களால் நாள் குறிக்கப்பட்டடு பத்திரிகை அச்சடிக்கப்படும். முதலில் குலதெய்வங்களுக்கு பத்திரிகை சமர்ப்பிக்கப்படும். பிறகு ஊர் மக்களுக்கு அழைப்பிதழ் தட்டில் வைத்து வெற்றிலை பாக்குடன் தரப்படும். மைத்துனர்களுக்கு அழைப்பிதழ், வெற்றிலை பாக்குடன் இணைந்து பணம் வைத்து அழைப்பார்கள். இதற்கு "சுருள் வைப்பது" என்று பெயர்.

பெண், மாப்பிள்ளை வீடுகளில் வெள்ளை அடிக்கப்பட்டு தலைவாசலில் குலைவாழை கட்டுவார்கள். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டப்படும். திருமணம் பெண்வீட்டிலோ அல்லது மாப்பிள்ளை வீடிலோதான் நடக்கும். பெரும்பாலும் பெண்வீட்டில் தான் நடக்கும். (மண்டபத்தில் நடத்துவதில்லை. நாங்கள் மண்டபத்தில் தான் நடத்தினோம் என்று நினைக்காதீர்கள். நான் எழுதியுள்ள நடைமுறை பழங்காலத்தில் இருந்து பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கபட்ட வழக்கமாகும்)

சாலியர் திருமணம் வேத முறைப்படி பிராமணப் புரோகிதரைக் கொண்டு நடத்தப்படும். காப்புகட்டுதல், நாட்கால் நடுதல், ஹோமம் வளர்ப்பது, தகப்பனாரால் தாரைவார்ப்பது எல்லாம் நடக்கும்.

காப்புக் கட்டுதல் :- திருமணம் நடக்கும் முன்பு மணமக்கள் சாப்பிடக் கூடாது. விரதமே. அந்த விரதத்தின் படி மஞ்சளில் நனைத்த நூலில் விரல் மஞ்சள் கட்டப்பட்டிருக்கும். தாலி கட்டி முடிந்த பிறகு காப்பு கழற்றப்படும்.

நாட்கால் நடுதல்:- இதற்கு பெரும்பாலும் ஆலமரக் கிளையின் ஒரு கம்பு பயன்படும். அதன் மேல் நவதானியம் மஞ்சள் துணியில் கட்டப்பட்டிருக்கும்.

இதற்கு மேல் சில பழக்கங்கள் நமது இனத்தில் கடைப்பிடிக்கப் பட்டுவந்து பிறகு கைவிடப்பட்டது. அம்மி மிதித்தல், அருந்ததி நட்சத்திரம் காணல், சப்தபதி மந்திரம் சொல்லி அடியெடுத்து வைப்பது போன்றவை. இன்னும் சில இடங்களில் கடைப்பிடிக்கப் படுகிறது.

இதன் பின் மணமக்களின் பெற்றோர்களால் திருநீறு பூசி அட்சதையிட்டு ஆசிர்வதிக்கப்படுவர். பிறகு வீட்டில், ஊரில் உள்ள பெரியவர்களால் மேற்படி முறையில் ஆசீர்வாதம் நடக்கும். அனைவருக்கும் விருந்து நடைபெறும். சம்பந்தி வீட்டாரை அழைத்துவருவார்கள் - விருந்துக்கு.

அதாவது திருமணம் பெண் வீட்டில் நடந்தால் மாப்பிள்ளை வீட்டாரையும், மாப்பிள்ளை வீட்டில் நடந்தால் பெண்வீட்டாரையும் அழைத்து வந்து விருந்து பரிமாறப்படும்.

நடு வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி, சமையல் செய்த சாதம் பருப்பு காய்கறிகள் ஒன்றாக கலந்து பிசையப்பட்டு, அதை ஒன்பது உருண்டைகளாக உருட்டப்பட்டு, அவற்றில் குழி செய்து நெய் ஊற்றி விளக்குப் போடுவார்கள். இந்த விளக்குகள் தலைவாழை இலையில் வைக்கப்பட்டிருக்கும். இதற்கு "பூதப்படி கட்டுதல்" என்று பெயர். இதன் பின்னரே அனைவருக்கும் விருந்து நடக்கும்.

பிறகு நல்ல நேரம் பார்த்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு மறுவீடு அழைத்து வருவார்கள். தீபாவளி, ஆடி மாத அழைப்பு எல்லாம் மாப்பிள்ளைக்கு உண்டு.

இனி மாயவரம் சாலியர் திருமணச் சடங்குகள் பற்றி சொல்ல விரும்புகிறேன்

**
நம் குலப்பெண் ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar