செவ்வாய், 29 நவம்பர், 2016

சோழர்கால சாலியர்கள் 2

முற்கால சோழர்களின் தலைநகரமாக பூம்புகாரும் #உறையூரும் இருந்தது. பிற்கால சோழர்களின் தலைநகரமாக தஞ்சாவூர், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவை இருந்தது.

உறையூரில் சாலியர்கள் அரண்மனையின் உள்ளாலைப் பகுதியில் வாழ்ந்தனர். அங்கு நெய்யப்பட்ட புடவைகள் மிகவும் புகழ்பெற்றவையாக விளங்கியது.

உறையூரில் நெய்யப்பட்ட ஒரு முழுப் புடவையையும் ஒரே தேங்காய் மூடியில் அடைத்து விட முடியும் அளவுக்கு மென்மையாக இருந்ததாக சோழர் வரலாறு தெரிவிக்கிறது. (இன்றளவும் பலராமபுரம் வேட்டி, புடவைகள் மேற்படி காரணங்களுக்காகவே புகழ் பெற்றது).இங்கு நெய்யப்பட்ட ஆடைகள் பாம்பின் சட்டை போன்றும், புகை போன்றும், பாலின் ஆவி போன்றும் மென்மையான ஆடைகள் உற்பத்தி யானது குறித்த செய்திகள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன.

உறையூரில் நடந்த அகழ்வாய்வில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட தொட்டிகள் கிடைக்கப்பட்டன. இவை சாயம் நனைக்கும் தொட்டிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இவை கி.பி 2 முதல் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.


சோழர்கள் ஆட்சியில் நில உரிமையும் பொருள் வளமும் கொண்டிருந்த நெசவாளர்கள் சமூக உயர் மதிப்பைப் பெற்றிருந்தனர். முக்கிய நிகழ்வுகளில் சங்கு முழக்கும் உரிமையும் பல்லக்கில் உலா வருவதும் கொடி பிடித்தலும் இக்காலத்தில் உயர் மதிப்பீட்டின் குறியீடுகளாயிருந்தன. இம்மூன்று உரிமைகளையும் சாலியர்கள் பெற்றிருந்தனர். வீடுகளுக்கு வெள்ளையடிக்கவும் இரண்டடுக்கு மாடி கட்டவும், இலச்சினைகள் தாங்கவும் சில வகையான ஆடைகளை அணியவும் உரிமை பெற்று உள்ளனர். இந்த விஷயங்கள் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளன.

கி.பி 985 இல் முதலாம் ராஜராஜன் அரியணை ஏறினார். அந்த காலகட்டத்தில் பாலாடை போன்ற மென்மையான ஆடைகள் பொது மக்களுக்கும், பட்டாடைகள் மன்னர் குடும்பத்தினருக்கும் சாலியர்கள் நெய்து கொடுத்தனர். தஞ்சை பெரிய கோவிலில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களில் இடம்பெறும் மன்னர் குடும்பத்தினர் கட்டியுள்ள பட்டாடைகள் நமது உழைப்பு என்பது நமக்குப் பெருமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar