வெள்ளி, 5 ஜனவரி, 2024

சுந்தரபாண்டியம் சாலியர் பொங்கல்

 1.6.2022 புதன்கிழமை சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாரி அம்மன் கோவிலில் மேளதாளம், சப்பரம், முளைப்பாரிகளுடன் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 
- Saliya Maharishi

சத்திரப்பட்டி தெற்குத்தெரு சாலியர்பொங்கல் திருவிழா



                                  சத்திரப்பட்டி தெற்கு தெரு கிழக்கு பகுதியில் அருள் புரிந்து வரும் கண்ணனூர் மாரியம்மன் கோவில் -  உக்ரசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஞாயிறு (17.04.2022) அன்று காலையில் தொடங்கியது. 

          முதல் நிகழ்ச்சியாக,  காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலா வந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்தனர். அன்று மாலையில் அக்னிசட்டி எடுத்து சத்திரப்பட்டி தெருக்களில் அம்மன் அருள் நிறைக்கப்பட்டது. 

               இரவு பக்தர்களுக்காக வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள் வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,  சத்திரப்பட்டி புதுத்தெரு ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவில் அருகில் கொண்டு  சென்று கும்மிப் பாடல்களுடன் கொண்டாடப்பட்டது. (முன்னதாக முந்தைய பத்து நாட்களுக்கு முன்பு முளை தாண்டுதல் நிகழ்ச்சியுடன் முளைப்பாரிகள் வளர்ப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன) 

                  புதுத் தெருவிலிருந்து கரகம் எடுக்கப்பட்டு,  தெற்கு தெரு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்மனின் விக்ரகம் அருகில் வைக்கப்பட்டது. அத்துடன் அன்றைய நாள் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. 

                திங்கட்கிழமை (18.04.2022) காலையில் அக்னிச்சட்டி வீதி உலா வந்தது. மாலை சுமார் 4 மணி அளவில் முளைப்பாரிகள் வீதிகளில் வலம் வந்து துரைமடம் விநாயகர் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பக்தியுடன் கரைக்கப்பட்டன. 

      கரகம் மீண்டும் கோவிலிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு,  புதுத்தெரு பழனி ஆண்டவர் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பக்தியுடன் கரைக்கப்பட்டது.           இரவு அலங்கார சப்பரத்தில் அம்மன் ஊரிலுள்ள அனைத்து தெருக்களிலும் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.  செவ்வாய்க்கிழமை காலையில் சப்பரம் இறக்கியதுடன்  பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.   செவ்வாய்க்கிழமை இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

நன்றி -  புகைப்படங்கள் உதவி:- வஷ்ய கணபதி டீ ஸ்டால் கண்ணன் மற்றும் அம்மன் புகைப்படம் தெற்குத் தெரு அனிதா 

- Saliya Maharishi

பத்மசாலியர் அன்னதானம்

சாலியர்கள் பொதுவாகவே தாங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் அன்னதானத்தை மிகச் சிறப்பாக செய்வது ஆண்டாண்டு காலமாக வழக்கம். இங்கு மட்டுமல்ல, ஆந்திராவிலும் கூட... சென்ற வாரம் அஹோபிலம் சென்ற போது அங்கு அடியேன் எடுத்த புகைப்படம்... 
ஸ்ரீமத் அஹோபில அகில பாரத பத்மஷாலிய நித்ய அன்னதான சத்ர சங்கம்)

சாலியர்களின் பூர்வீக குலதெய்வம்


மேலத்திருமாணிக்கம் அரிய மாணிக்கவல்லித் தாயார். ஏழூர் சாலியர்களின் குலதெய்வம். செப்புப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்ட ஏழூர் சாலியர்களின் குலதெய்வம் இவள். 
எப்படி செல்வது :- மதுரை அருகிலுள்ள கல்லுப்பட்டியில் இருந்து பேரையூர் சென்று, அங்கிருந்து எழுமலை என்ற ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறினால் மேலத்திருமாணிக்கம் என்கிற ஊரை அடையலாம். அங்கு தான் இந்த ஆலயம் உள்ளது. 

பேரையூரில் எழுமலை செல்லும் பேருந்து கிடைக்கவில்லையென்றால், தேனி அல்லது உசிலம்பட்டி செல்லும் வண்டியில் ஏறி, சின்னக் கட்டளை என்கிற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து T.ராமநாதபுரம் செல்லும் பேருந்தில் ஏறினாலும் மேலத்திருமாணிக்கம் என்கிற ஊரை அடையலாம்.

தேவி வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலம். விநாயகர், கருப்பசாமி, காலபைரவர், வராஹி முதலிய தெய்வங்கள் இந்த ஆலயத்தில் பரிவார தேவதைகளாக அருள் புரிகிறார்கள். தாயாருக்கு சிம்ம வாகனம் எதிரிலேயே உள்ளது.

நாயக்கர் ஆட்சிக்கால ஜாதிப்பிரிவுகள்

 
***************************
நாயக்கர் காலத்தில் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என்று இரு பிரிவுகளாகச் சாதிகள் பிரிந்து பூசல் விளைவித்தன. எனினும், நாயக்க மன்னர்கள் இவற்றை வளரவிடவில்லை. நாயக்கர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து இக்காலத்தில் தமிழகம் வந்து குடியேறினர். கம்மவார். ரெட்டியார். நாயக்கர், தேவாங்கர், கோமுட்டி, சாலியர், நாவிதர் , சக்கிலியர், வண்ணார். ஒட்டர், பிராமணர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்து இங்குக் குடியேறினர். இக்குடியேற்றங்கள் தமிழர்களால் எதிர்க்கப் படவில்லை. 
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரப் பகுதியிலிருந்து சௌராட்டிரர்கள் தமிழகத்தில் குடியேறினர். இவர்களைப் பட்டுநூல்காரர் எனத் தமிழர் குறிப்பிட்டனர். 

ஆதாரம் 

CULTURAL HERITAGE OF TAMIL NADU 

UNIT-III 

Modem Period: Nayaks - Marathas Poligars Nawabs - Art and
Architecture.
Saliya Maharishi

மதுரை சாலியர் சத்திரம்

நமது ஏழூர் சாலியர் சத்திரம் மதுரை மடத்தில் புதிய தொலைபேசி எண் மாற்றப்பட்டுள்ளது. 

கீழ்க்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளலாம். 

0452-4984700

Saliya Maharishi

பட்டீஸ்வரம் ஸ்தல புராணத்தில் சாலிய மகரிஷி

    

          கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் தலத்தில் ராமபிரானை வந்து வணங்கிய மகரிஷிகளுள் சாலியர் என்பவரும் ஒருவர். பட்டுத் தொழில் எனப்படும் நெசவுத் தொழில் செய்து வந்த குலத்தைச் சார்ந்தமையால் இவர் பட்டுச் சாலிய மகரிஷி என அழைக்கப்பட்டார்.

       பட்டு நெசவுத் தொழில் செய்து வருபவர்களுக்கு ஒரு தோஷம் எப்போதுமே இருந்து வந்தது. அதாவது எண்ணற்ற பட்டுப் புழுக்களைக் கொன்று, இந்தத் தொழில் செய்து வருகிறோமே என்கிற தோஷம் தான். தொழில் நிமித்தமாக நெசவாளர்களுக்கு இருக்கும் இந்த தோஷத்தைப் போக்க எண்ணினார் சாலிய மகரிஷி. 

        தமது மூவகையான தோஷங்களையும் போக்கிக் கொண்ட ராமபிரானை பட்டீஸ்வரம் திருத்தலத்தில் தரிசித்தார் சாலிய மகரிஷி. இவரின் பக்தியில் நெகிழ்ந்த ராமன், "மகரிஷியே என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார். 

அதற்கு சாலிய மகரிஷி "பிரபோ... செய்யும் தொழில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை. எம் குலத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் பட்டுப் புழுக்களைக் கொன்று பணி செய்கின்றார்கள். இதைக் கொல்லாமல் இந்த உற்பத்தித் தொழிலைச் செய்ய முடியாது. எனவே, பட்டுப் புழுக்களைக் கொல்வதால் எம் குலப் பெருமக்களுக்கு ஏற்படும் தோஷத்தைத் தாங்கள் போக்கி அருள வேண்டும். தவிர, எம் குல மக்கள் அடிக்கடி வந்து உன்னை வணங்குவதற்கு வசதியாகத் தாங்கள் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும்" என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
       சாலிய மகரிஷியின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராமன் இங்கேயே அருளி நெசவாளர்களின் தோஷத்தைப் போக்கினார் என்பது தல வரலாறு.

பட்டாரியர் சமுதாயம்


பட்டாரியர் சமுதாயத்தினர் கங்கை நதியின் வடக்கு கரையில் வாழ்ந்ததாகவும், அங்கு ஆட்சி செய்த சச்சேந்திர மன்னனை நயவஞ்சகத்தால் வென்று, அரசைக் கைப்பற்றிய அமைச்சர் "கட்டியன்" என்பவர் அங்கு வாழ்ந்த பட்டாரியர்களிடம் சச்சேந்திர மன்னனுக்கு கொடுத்துவந்த பட்டுப் பரிவட்டம் எனக்கும் தர வேண்டும் என்று கேட்க, பட்டாரியர்கள் மறுத்ததால் பல துன்பங்களுக்கு உட்பட்டு, தங்களது குல தெய்வங்களான சக்தி தேவி மற்றும் விநாயகர் இவர்களின் சிலைகளை எடுத்துக் கொண்டு தாங்கள் வாழ்ந்த தத்தைப் பட்டணத்தை விட்டு தெற்கு நோக்கி வந்தனர். இவர்கள் வணங்கும் குல தெய்வம் ஆயுர்பிராட்டி அம்மன், முத்தாச்சி அம்மன் என்றும் வில்லுப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் கலைக்கோட்டு மாமுனி என்ற மகரிஷியே தங்கள் குல முதல்வராக கொள்கின்றனர். திருமணம் முடித்த மணமக்கள் முதன் முதலில் கலைக்கோட்டு மஹரிஷி என்ற ஆதி மஹரிஷியின் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு வருவது வழக்கம். வீரவநல்லூரில் ஆதிமஹரிஷி கோவில் இருக்கிறது. 

Saliya Maharishi

தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க எழுச்சி மாநாடு



முன்குறிப்பு :- மாநாட்டுக்கு சென்று வந்ததில் என் மனதில் பதிந்த விஷயங்களை முக்கியத்துவம் கொடுத்து என் நினைவிலிருந்து எழுதி இருக்கிறேன்.

       7/3/2021 அன்று மாலை சுமார் 3 மணி அளவில் நாதஸ்வர கச்சேரியுடன் மாநாடு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து நமது இனத்தை சேர்ந்த ஸ்ரீதர்ஷினி உட்பட மூன்று குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு நமது குழந்தைகளின் சிலம்பாட்ட காட்சி மேடையில் நடத்திக் காட்டப்பட்டது. 

        டாக்டர் சுவாமிநாதன் தலைமையில் விழா குழுவினர் மேடையில் வந்து அமர்ந்தனர். தொடர்ந்து திரு. டி.கலசலிங்கம் ஐயா அவர்களின் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டது. குத்து விளக்கு ஏற்றப்பட்டு விழா இனிதே ஆரம்பமானது. தொடர்ந்து ராஜபாளையம் பாடகர் மாடசுவாமி குழுவினரின் "சாலியர் இனத்தினை போற்றிடுவோம்" என்ற பாடல் இசையுடன் பாடப்பட்டது.

        தோப்புப்பட்டி தெரு தலைவர் சிவலிங்கம் மற்றும் ஆசிரியர் ராமகிருஷ்ண பாண்டியன் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். அறிமுக உரையாக டாக்டர் சுவாமிநாதன் இரண்டு நிமிடங்கள் பேசினார். 

         அதைத்தொடர்ந்து சுப்புலாபுரம், ஜக்கம்பட்டி, மயிலாடுதுறை கூறைநாடு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், முகவூர், சுந்தரபாண்டியம், ராமச்சந்திரபுரம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், முசிறி, மணமேடு , திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வந்திருந்த சாலியர் இன முக்கிய பிரமுகர்களுக்கும், தலைவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

           தொடர்ந்து சத்திரப்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானகுரு அவர்கள், மேடையிலேயே தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். 

             சுப்புலாபுரம் தலைவர் பேசினார் "நமது இனத்தின் சார்பாக புதிய மண்டபம் கட்டுகிறோம்" என்று கூறினார். 

            அதைத் தொடர்ந்து ஜக்கம்பட்டி தலைவர் பேசும்போது "நாடு முழுவதும் இருக்கக்கூடிய நெசவாளர் இனங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார். 

         சென்னை சாலியர் சங்கத்தை சேர்ந்த டாக்டர் விநாயகமூர்த்தி அவர்கள் பேசும்போது, சென்னையில் நம் சாலியர்கள் இனத்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருவதையும், சாலியர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு என்று ஒரு திருமணதகவல் மேட்ரிமனி தளம் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதையும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய சாலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதையும், சென்னையில் சாலியர் சங்கத்தை சேர்ந்த, திரு. நாராயணன்(இவர் நமது சாலியர் முகநூல் தளத்தின் அட்மின்), திரு. ஜோதிமணி உள்ளிட்ட பலருடைய பணிகளையும் எடுத்துக் கூறினார். 

           தொடர்ந்து ராஜபாளையத்தை சேர்ந்த குருபாக்கியம், டாக்டர் ஆறுமுகப் பெருமாள், சத்திரப்பட்டி முத்துமணி, சாலியர் மகளிர் அணியைச் சேர்ந்தவர் ஆகியோர் பேசினார்கள். 

              சமுசிகாபுரம் ஊரைச் சார்ந்த அமராவதி ஸ்பின்னிங் மில் உரிமையாளர் திரு. முருகன் அவர்கள், ஒற்றுமை இல்லாமல் போனால் மற்றவர்கள் வந்து ஜெயித்து விடுவார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்கள். 

             இவர்களை தொடர்ந்து சத்திரப்பட்டியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தவமணி குரு அவர்கள் பேசும்போது " ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து மானத்தை காத்துக் கொள்வதற்காகவே நாம் இடம்பெயர்ந்து வந்து பல ஊர்களிலும் வாழ்ந்து வருகிறோம். நம்மை சுற்றி இருக்கக் கூடிய மற்றவர்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு, நமக்குத் தேவை ஒற்றுமை. பல இடங்களுக்கும் வேலைக்கு செல்வதால் ஒரு கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய்விட்டது. பல்வேறு வெளியூர்களில் வாழ்வதால் நமக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதை நீக்க வேண்டும். நமது திருவிழாக்களில் மற்ற ஜாதியினர் வந்து முளைப்பாரி தூக்குகிறார்கள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. இது நமக்கு மட்டுமேயான உரிமை. மேலும் வேறு இனத்தை சேர்ந்தவர்களை கல்யாணம், சடங்குகளுக்கு கூப்பிட வேண்டிய தேவையில்லை. நம் சொந்தங்களே போதும். வேறு ஜாதியினருக்கு கடன் கொடுக்காதீர்கள். திரும்ப வாங்க முடியாது. நமது நிறுவனங்களில் பெரிய பதவிகளில் நம்முடைய இனத்தவர்களை மட்டுமே வேலைக்கு போடுங்கள். ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துங்கள்" என்று ஆணித்தரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பேசினார். மேலும் வேறு ஜாதிகளில் கலப்புத் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை வேதனையுடன் தெரிவித்தார். 

       ராமச்சந்திராபுரத்தை சொந்த ஊராகக் கொண்டு, தற்போது சின்னமனூரில் ஜவுளி கடை வைத்திருக்கும் திரு. காளிமுத்து அவர்கள் பேசும்போது"நமது இனத்தின் சார்பாக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்தார். அதன்பிறகு யாரும் இல்லை. நாம் அனைவரும் கண்டிப்பாக முயற்சி செய்து ஒரு சட்டமன்ற உறுப்பினரை உருவாக்கியே தீர வேண்டும். மேலும் கலசலிங்கம் ஐயா அவர்கள் இருக்கும்போது, நமது இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு பெரு முயற்சி செய்தார்கள். நாம் அனைவரும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை உருவாக்கி, முயற்சி செய்து அந்தக் கொள்கையில் நாம் வெற்றி காண வேண்டும்" என்று குறிப்பிட்டார். 

           தொடர்ந்து, திருப்பூரை சேர்ந்த தமிழாசிரியர் பாலசுப்பிரமணியம் பேசும்போது "சென்னைக்கு அடுத்தபடியாக நாம் சாலியர் சமூகத்தினர் மிக அதிகமாக கூடி வாழ்ந்து கொண்டிருப்பது திருப்பூரில் தான். தற்போதும் கூட நமது மக்கள் திருப்பூருக்கு தாராளமாக வந்து தொழில் செய்யலாம். வேலைவாய்ப்புகள் பெறலாம். அதற்காக திருப்பூர் சாலியர் சங்கம் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் . சின்னச் சின்ன மனத் தகராறுகளால் ஒற்றுமை போய்விடும். அப்படி இருக்கக் கூடாது " என்று கூறி , திருப்பூரில் சாலியர் இனத்தினர் எந்தெந்த இடத்தில் வாழ்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தெருத்தெருவாக, சந்து சந்தாகப் போய் தகவல் திரட்டிய திரு. ராமசாமி என்பவரை அறிமுகப்படுத்தினார்கள். (அவர் மேடையில் ஏறுவதற்கு மிகவும் கூச்சப்பட்டார்) . 

            இதற்குப் பிறகு இளைஞரணியின் சார்பாக டாக்டர் சுவாமிநாதன் அவர்களுக்கு மலர் கிரீடமும், மலர் மாலையும் அணிவிக்கப்பட்டு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. வீரவாளை டாக்டர் சுவாமிநாதன் அவர்கள், இளைஞரணித் தலைவர் கணேசனிடம் பரிசாகக் கொடுத்தார். 

 மேலும் தோப்புப்பட்டி தெருவின் சார்பாக வெற்றிவேலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. 

              பிறகு இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் திரு கணேசன் பேசினார் "இளைஞரணி பொறுப்பேற்ற பிறகு பல கூட்டங்களில் பங்கேற்றேன். வெற்றிகரமாக செயல் படுவேன். இதுவரை நடந்த விஷயங்களை மறந்து விடுங்கள். அவற்றில் ஏதாவது தவறு இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனி ஆண்டுக்கு ஒருமுறை மாநாடு கண்டிப்பாக நடத்துவேன் . அடுத்த ஆண்டு இதே தேதியில் கண்டிப்பாக மாநாடு நடத்தப்படும். நமது இனத்தில் பணம் படைத்த அனைத்து இளைஞர்களையும் ஒன்று திரட்டி திரு கலசலிங்கம் அவர்களின் பேரன் சசி ஆனந்த் தலைமையில் ஒருங்கிணைப்பேன். நமது ஜாதியைச் சேர்ந்த சேர்ந்த முதியோர்களுக்கு நாமே நம் இனத்திலிருந்து ஓய்வூதியம் கொடுக்கப்படும். நமது இனத்தை சேர்ந்த ஒரு எம் எல் ஏ மட்டுமல்ல , ஒரு மந்திரியையும் கண்டிப்பாக உருவாக்குவேன்" என்றார் 

            பிறகு டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் "எனது மனைவி 30 சென்ட் நிலத்தை சமுதாயத்துக்கு கொடுத்துவிட்டார். பெண்களுக்கு சீதனமாக பணம் நகை கொடுப்பதைவிட நிலமாக கொடுங்கள். ஆரம்ப காலத்தில் நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை . இப்போது கொஞ்சம் உள்ளது. நாம் அனைவரும் மனித நேயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 1971 ஆண்டு ஐஏஎஸ் பாஸ் பண்ணினேன். பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் தபால் துறையில் வேலை கிடைத்தது . ஆனால் போகவில்லை. அரசியல்வாதி ஒருவரின் ஆலோசனையின் பெயரில் பியூசி படித்து பிறகு டாக்டர் ஆனேன். 

நாம் தவறுகளை தயங்காமல் தட்டிக் கேட்க வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் வாழவேண்டும்" என்றார் . 

            பிறகு மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.(பார்க்க புகைப்படம்)


 மாநாடு நிறைவு பெற்றது.

        அடியேன் Saliya Maharishi

திருச்செந்தூரில் சாலியர் மடங்கள்

திருச்செந்தூரில் உள்ள ஏழூர் சாலியர் சமுதாய மாளிகை, நாகர்கோவில் வடசேரியில் வாழும் வள்ளியூர் சாலியர் சமுதாய மடம், வீரவநல்லூர் பட்டாரியர் சமுதாய மடம் (திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவில் எதிரில் உள்ளது)

நாடு முழுவதும் நெசவு இனங்கள் 2



மேலும்..... G.S.Ghurye  - (சமூக மற்றும் மானிடவியல் பேராசிரியர்) - அவர்கள் தன்னுடைய 'Castes and Races in india'  என்ற நூலில் -  தென்னிந்தியாவில் உள்ள கைத்தறி நெசவாளர் இனங்களை குறிப்பிடும்போது பட்டசாலி,  சாலி,  பத்மசாலி,  பட்டுநூல்காரர் என்ற இனங்களை பற்றி மட்டுமே பிரதான சாதிகளாக குறிப்பிடுகிறார். அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டாரியர் மற்றும் அடவியர் இரண்டும் ஒரே சாதியை குறிப்பிடுவன.  அடவியார் என்பது பட்டசாலியர் அல்லது பட்டாலியர் அல்லது பட்டாரியர் சாதியினரின் பட்டமாகும். 
தேவாங்கர், பத்மசாலியர் பட்டு சாலியர் என்பவர்கள் தெலுங்கு பேசும் நெசவாளிகள். கைக்கோளர் மற்றும் தேவாங்கர் இனங்கள் சற்று பிற்காலங்களில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.  எனவே 'G.S.Ghurye' எழுதிய சாதிகளில் இந்த சாதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை. அல்லது அவர் தவிர்த்ததற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. 

அதனால் தான் அரசாங்க பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பட்டு சாலியர்,  சாலியர் , பத்மசாலியர்,  பட்டாரியர் என்கிற பெயர்கள் சேர்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளன.‌ 'பட்டு சாலியர்' என்ற சாதி பத்மசாலியர் இனத்தின் உட்பிரிவு தான் சொல்லப்படுகிறது.  இவர்களும் பத்மசாலியர் போன்று தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். 

 முடிவாக சாலியர்,  பட்டாலியர் என்ற பட்டாரியர் என்ற இரண்டு சாதிகளும் தமிழ்பேசும் கைத்தறி நெசவாளர் என்பதும்;  பத்மசாலியர்,  பட்டு சாலியர் என்னும் சாதியினர் தெலுங்கு பேசும் கைத்தறி நெசவாளர்கள் என்பதும் தெரிய வருகிறது. 

அடியேன் saliya Maharishi

நாடு முழுவதும் நெசவு இனங்கள் 1


மனிதன் உடை உடுக்க ஆரம்பித்த காலம் தொட்டு கைத்தறி நெசவு செய்பவர்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் கைத்தறி நெசவு செய்து வந்த இனங்களை பற்றி கீழ்க்கண்டவாறு திரு. G.S.Ghurye - (சமூக மற்றும் மானிடவியல் பேராசிரியர்) - அவர்கள் தன்னுடைய 'Castes and Races in india' என்ற நூலில்
 எழுதியுள்ளார்கள்.

"பங்கர், சோரியா, தன்லி, கோஷ்டி, பட்வா, பட்டுநூல்காரர் மற்றும் சாலி என்பது நாட்டிலுள்ள முக்கியமான கைத்தறி நெசவாளர்களின் சாதிப் பெயர்கள் ஆகும். 

இதில் "பங்கர், சோரியா" என்ற இரண்டு ஜாதிகள் "நூல் இழைகளை ஒன்று சேர்த்தல்" என்ற அடிப்படையான அர்த்தத்தில் அமைந்தவை. மற்ற பெயர்கள் பட்டு ஆடை மற்றும் நூலிழை என்ற சொல்லின் சமஸ்கிருத மூலத்தில் இருந்து வந்துள்ளது. 'சாலி' என்ற மராட்டிய நெசவாளர் சமுதாயத்தில் 'ஆஹிர் மராத்தா' மற்றும் 'சம்பார்' என்ற உட்பிரிவுகளும் உண்டு. பத்மசாலியர் ஜாதியில் ஹிந்துக்களும் லிங்காயத்துகளும் உண்டு. 
திராவிட சார்புடைய நெசவாளர் சாதியான பார்க்கா என்ற சாதியிலும் கபிர்க்கா, சக்தகா என்ற முக்கிய உட்பிரிவுகளும் உண்டு. 
 வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் சில பகுதிகளில் குடியிருந்து வந்த நெசவாளர்கள் அரசர்களால் ஆதரிக்கப்பட்டு வந்த 'பட்ட சாலியன்களில் இரு பிரிவினர்' என்றும் அவர்கள் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் சாலியர் என்ற நெசவாளர் வகுப்பை சேர்ந்த இரு பிரிவினர் என்றும்; அதாவது சாலியர்,  பட்ட சாலியர் என்ற பட்டாரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று மேலும் G.S.Ghurye குறிப்பிடுகிறார்.

சாலியர் கணக்கெடுப்பு

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

அடியேன் ஏற்கனவே பலமுறை வலியுறுத்திய செய்தியை மீண்டும் ஒருமுறை தெரிவிக்க விரும்புகிறேன்....

எதிர்வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது
நாம் "சாலியர்"என்ற பெயரை மட்டும் பதிவு செய்தால் மைனாரிட்டியாக தான் இருப்போம். 

நம்முடைய உட்பிரிவான பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர், (அரசாங்க கெஸட்டுகளில் வரிசை எண்103 இல் அனைத்து பிரிவையும் ஒரே பிரிவாக தான் காட்டப்பட்டுள்ளது. படம் இணைப்பு. கெஸட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது) மாயவரம், மணமேடு சாலியர்கள் போன்ற அனைத்து பிரிவுகளையும் சேர்த்து ஒரே குடையின் கீழ் வர வேண்டும். 
என்றைக்கு இருந்தாலும் நம் இனம் முன்னேறுவதற்கும், வேறு சில காரணங்களுக்கும் இதுதான் சரியான முடிவாக இருக்க முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. 

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மனதில் கொண்டு, பயன்படுத்திக் கொண்டு இதை செய்ய வேண்டுவது அவசியம். நமது இனப் பெரியோர்கள் Narayanan S சார் போன்றவர்கள் இதற்கான முயற்சிகளை எடுத்தால் மிகவும் நல்லது என்று கேட்டுக்கொள்கிறேன். 🙏🙏🙏

இன்னொரு விஷயமும் கூட சொல்ல வேண்டியுள்ளது. திருச்சி மணமேடு சாலியர்கள் நம்மவர்கள் ஆக இருந்தாலும் 7 ஊர் சாலியர் பிரிவில் வரமாட்டார்கள். ஆனால் அவர்களும் நம்மவர்களே. மேலும் மணமேடு சாலியர்கள் , பத்மசாலியர்களுடன் பெண் எடுக்கின்றனர் என்பதை நமது மணமேடு நண்பர் A S A Muthuraman அவர்கள் தெரிவிக்கிறார். 

- சாலிய மஹரிஷி

தறியும் வரியும்


          தற்போதைய செங்கல்பட்டு, வடஆற்காடு பகுதிகளில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் தறி கடமை என்னும் நெசவு வழி வசூலிக்கப்பட்டது. (Inscription of the pudukkottai state, 632, AD1190, 91) 

            13 , 14 ஆம் நூற்றாண்டின் மைய காலத்தில் தற்போதைய புதுக்கோட்டை செங்கல்பட்டு வடஆற்காடு பகுதிகளில் தறி இறை என்னும் தறிக்கான வரி வசூலிக்கப்பட்டது (Annual report on south Indian epigraphy)

          முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அரைக்கால் (வீசம்) பணம் வரியாக துணி விற்பனைக்கும், துணி விற்பனை மையங்களுக்கும் நெசவாளர் குடியிருப்புகளுக்கும் விதிக்கப்பட்டது. இப்பகுதியில் வெளியார் விற்றாலும் இந்த வரியை செலுத்த வேண்டும்.(Annual report on south Indian epigraphy)
           ஒரே சாதியைச் சேர்ந்த நெசவாளர்கள் பொதுவாக ஒரே இடத்தில் குழுக்களாக வாழ்ந்தனர். 14வது நூற்றாண்டில் நெசவாளர்களை திருமடை வளாகம் என்னும் கோயில் எல்லைக்குள் நிர்வாகத்தால் குடியமைக்க அனுமதியளித்தனர். கோயில் அருகே இது போன்று பல நெசவாளர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. சிதம்பரம் கோயில் அருகே குடியமைந்த நெசவாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோயிலுக்கு ஆண்டுதோறும் 4 புதிய நீளத்துணியும், ஐந்து சிறிய வகை துணியும் கொடுக்க வேண்டும்.

           1334 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வில், ஒரு ஊரில் கோயில் அருகே குடியமைந்த நெசவாளர்களை பாதுகாக்க ஆண்டுதோறும் ஒரு குடும்பத்துக்கு கால் பணம் வரியாக வசூலிக்கப்பட்டது. 

            சென்னையில் உள்ள திருவொற்றியூரில் கோயில் அருகே கூடியிருந்த 66 நெசவாளர் குடும்பங்களிடம் ஆண்டு ஒன்றுக்கு தறி கடமையாக ஒவ்வொரு தறிக்கும் ஆறேகால் பணம் வசூலிக்கப்பட்டது. 
 இந்த தறி கடமை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாசம் வசூலிக்கப்பட்டது. (Annual report of epigraphy)

               சேணகிரி, குளத்தூர்(Inscription of the pudukkottai state,no486,274)ஆகிய ஊர்களில் இருந்து இடம்பெயர்ந்து நெசவு மையங்களுக்கு வந்த நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கால் பணம் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. (Annual report of epigraphy 35,1933-34) 

          தமிழகத்தில் நெசவுத் தொழில் சிறப்பிடம் வகித்ததை ஒரே ஊரில் 411 தறிகள் இருந்தன என்பதில் இருந்து அறிய முடிகிறது.

நெசவாளர்களும் துணிவணிகமும்


பதினாறாம் நூற்றாண்டில் முதலாளித்துவம் தலை எடுக்க தொடங்கியது. அப்போது நெசவுத்தொழில் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படலாயின.( South Indian inscriptions vol 9 page516) 
கிபி 1525 ஆம் ஆண்டில் தலைமை நெசவாளர் ஒருவருக்கு 10 தறிகளுக்கான பொறுப்பு வழங்கப்பட்டது. பொதுவாக நெசவாளர்கள் சாலியர்கள் என்று அழைக்கப்பட்டாலும், கல்வெட்டுகளில் கைக்கோளர் பிரிவைச் சார்ந்த சமூகத்தின் தலைவரை 'முதலி' என்னும் பெயருடன் குறிப்பது (அவர்கள் தொழிலுக்கான முதல் அதாவது மூலதனத்தை கொண்டிருந்தனர் என்பதையும்), அவர்கள் சமூகத்தில் முக்கிய இடம் வகித்தனர் என்பதையும் காட்டுகிறது. (Annual report on sout Indian epigraphy, madras 365 of 1912) 
வணிகர்கள் ஆக மாறிய நெசவாளர்கள் 'செட்டி'(இன்றளவும் நல்லி குப்புசாமி செட்டியார் பத்ம சாலியராக இருந்தபோதிலும் செட்டியார் என்றே அழைக்கப்படுகிறார்) மற்றும் 'நாயகர்' என்னும் பின்னொட்டை பெற்றிருந்ததை காஞ்சிபுரம் , சிதம்பரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. 

 கல்வெட்டில் காணப்படும் 'கசாய வர்க்கத்தார்' எனும் சொல் கைக்கோளர்கள், வணிகர்களாகவும் செயல்பட்டனர் என்பதை குறிக்கிறது.

இந்த செயல்பாடுகள் சோழமண்டல நெசவுத்தொழிலில் முதலாளித்துவ கூறுகள் 16ம் நூற்றாண்டில் வளர்ச்சியுடைய தொடங்கியதை காட்டுகின்றன. 

சோழ மண்டலத்தில் பல கைக்கோளர்கள் கூட்டாக சேர்ந்து சாயத்தொழில் மையங்களுக்கு உரிமையாளர்களாக இருந்துள்ளனர். (.( South Indian inscriptions volume 22, no24 ; Annual report on sout Indian epigraphy, madras 240 of 1906) 

செங்கல்பட்டு பகுதியில் குளத்தூர் என்னும் இடத்தில் ஒரு கல்வெட்டு கைக்கோள நெசவாளர்களை 'பலபட்டடையார்' என்று கூறிப்பதை கொண்டு அவர்கள் பல பட்டறைகளுக்கும், சாயத்தொழில் மையங்களுக்கும் உரிமையாளர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது . சாலியர், சேனியர் போன்ற பல குழுக்கள் தறிகளுக்கு உரிமையாளர்களாக இருந்துள்ளனர். அதேபோன்று வணிகர்களும் தறிகளுக்கு உரிமையாளர்களாக இருந்துள்ளனர்.

Saliya Maharishi

ஸ்ரீவில்லிபுத்தூர் சாலியர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி ஆலயத்துக்கு எதிரில் உள்ள சாலியர்கள் அமைத்துக் கொடுத்த தாமரைக் குளம்.... 

மற்றும் மேற்படி ஆலயத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஐந்துபட்டி சாலியர்கள் திருப்பணி செய்து கொடுத்தாக தகவல் தெரிவிக்கும், திருமலை நாயக்கர் திருமண மண்டபத்தில் ஒரு கல்வெட்டு ஆதாரம்....

தொடர்சியான இடம்பெயர்வில் சாலியர்கள்


சாலியர்கள் முன்பு சிதம்பரத்தில் குடியேறி, கோவில் விழாக்களுக்கு தேவையான துணிகளை உற்பத்தி செய்து கொடுத்து வந்தனர். பின்னர் சாலிய நெசவாளர்கள், துணி வணிகர்கள் ஒரு சில சிக்கல்களால் சிதம்பரத்தை விட்டு வெளியேறியது தெரிகிறது. ( Annual report of on South Indian epigraphy Madras 1887-1955, 308 of 1913). உள்ளூர் அரசு அலுவலர் திருவம்பல பெருமாள்புரம் எனுமிடத்தில் வெளியேறிய சாலியர்களுக்கு பதிலாக கைக்கோளர் களுக்கான புதிய குடியிருப்பை ஏற்படுத்தினர். அவர்கள் அழிந்த நிலையில் இருந்த நெசவுத் தொழிலுக்கு புத்துயிரூட்டி கோவில் விழாக்களுக்கு துணிகளை உற்பத்தி செய்து தருவதாக ஒப்புக்கொண்டனர்.(மேற்படி 136 of 1912). எனவே சிதம்பரத்தில் இருந்து வெளியேறிய ஒரு நெசவு குழுவுக்கு மாற்றாக மற்றொரு குழு குடியேறியது(மேற்படி 308 of 1913). 
நெசவாளர்களை மீண்டும் சொந்த குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டுவர சோழ அலுவலர்கள் முயன்றனர். எனவே திருவாமாத்தூரில் வரிச்சுமையால் இடம்பெயர்ந்த சாலிய நகரத்தார்களிடம் அவ்வூர் அலுவலர்கள் அவர்களை திரும்ப வருமாறு வேண்டினர்.(மேற்படி 471 of 1920).

 சாளுக்கியில் உள்ள கல்வெட்டு நெசவாளர்கள் வரி மற்றும் செலுத்தப்பட வேண்டிய பிற தொகைகளை செலுத்த இயலாமையினால் ஊரை காலி செய்து வெளியேறினர் என்று தெரிவிக்கிறது(மேற்படி 21 of 1921, 471 of 1920). மேற்காணும் இரு இடங்களை விட்டு வெளியேறிய நெசவாளர்களை திரும்ப அழைத்து மீண்டும் நெசவு தொழிலை மேற்கொள்ள, சோழ அலுவலர்கள் ஆதரவு அளித்தார்கள். அவர்களுக்கு தறி மீதான வரி ரத்து செய்யப்பட்டது. எனவே நெசவாளர்கள் துயரத்தில் இருந்தபோது சோழ அலுவலர்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் எனலாம். (South Indian inscriptions, vol 1, number 64)

அடியேன் saliya maharishi

கல்வெட்டுக்களில் நெசவும் சாலியரும்


12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த சாலியர், கைக்கோளர் சாதிகளை குறிப்பிடுகின்றனர். கைக்கோளர் பிரிவைச் சார்ந்தவர்கள் தமிழ் பேசுபவர்களாகவும், சாலியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் தமிழ், தெலுங்கு மொழி பேசுபவர்களாகவும்; பட்டு சாலியர், பத்மசாலியர் என்ற உட்பிரிவு உடனும் இருந்தனர். மேலும் கைக்கோளர் என்னும் தொழில் சார்ந்த பட்டமாக தமிழ் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. 
பாண்டியர் கால கல்வெட்டு ஒன்றின் மூலம் கைக்கோளர், சாலியர் நெசவாளர்களின் தறிகளுக்கு வரியாக வசூலிக்கப்பட்டது என்று அறிகிறோம். (Annual report on South Indian epigraphy Madras, page number 300, 1909) 
 பஞ்சு பீலி என்னும் பருத்தி வரி பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, வட ஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளில் 1193 முதல் 1351 வரை தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வந்தது. (South Indian inscription volume 24, page number 193, volume 24 number 223 ) (inscriptions of the Pudukkottai state Madras, number 395, 402, 403 , 409, 416, 424, 472, 486, 559, 578, 584)

 பஞ்சுபீலி என்னும் வரி பல்லவர் காலத்திலோ, சோழர் காலத்திலோ காணப்படவில்லை.
தற்போதைய செங்கல்பட்டு, வட ஆர்க்காடு பகுதிகளில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் "தறி கடமை" என்னும் நெசவு வரி வசூலிக்கப்பட்டது. 13 14 ஆம் நூற்றாண்டின் மையப் பகுதிகளில் தற்போதைய புதுக்கோட்டை, செங்கல்பட்டு, வடஆற்காடு பகுதிகளில் "தறி இறை" என்னும் வரி வசூலிக்கப்பட்டது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அரைக்கால் பணம் வரியாக துணி விற்பனைக்கும், துணி விற்பனை மையங்களுக்கும், நெசவாளர் குடியிருப்புகளுக்கும் விதிக்கப்பட்டது. இப்பகுதியில் வெளியாட்கள் விற்றாலும் இந்த வரி செலுத்த வேண்டும். 

Saliya Maharishi

சாலியர்களின் பூர்வீகம்


முன்னுரை :- சாலியர்கள் முதல் முதலாக தோன்றிய இடம் எது?? நாம் யார் ? என்று பலரும் இன்பாக்ஸிலும், நேரிலும் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவு. 
_______________________________
கடவில் பகவதி ஆலயம் பற்றிய புராணம் சாலியர்களின் தோற்றம் பற்றி விரிவாக பேசுகிறது. கங்கைக் கரையில் உள்ள #காசி நகரத்திலிருந்து திரிப்தா ஆண்டு, பஞ்சத்தால் மக்கள் அங்கிருந்து வெளியேறி தெற்கு நோக்கி புறப்பட்டு வந்து, சோழர்கள் தேசத்தில் வாழ்ந்தனர். அந்தக்காலத்தில் விஜயநகரம் , தஞ்சாவூர், காஞ்சிபுரம், கும்பகோணம், ராஜமுந்திரி முதலிய நகரங்கள் அடங்கிய தேசத்தை "சோழநாராயணபட்" என்பவர் ஆண்டு வந்தார் . அவர் சேர வம்சாவழியைச் சேர்ந்தவர். அவருடன் இருந்த நம்பூதிரிகள் யோசனைப்படி விழா சமயங்களில் அணியத்தக்க பட்டு மந்திர வஸ்திரம் தயார் செய்யும்படி இவர்களை கட்டளையிட்டார் - இவர்கள் நெசவு செய்யும் இனத்தவராய் இருப்பதால்.  

மந்திர வஸ்திரத்தை பட்டாரியர் எனப்படும் பட்டு சாலியர் தயார் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு அரசர் நிரந்தரமாக தங்கும்படி இடம் கொடுத்தார். 

 கொச்சியில் இவர்கள் 'பட்டாரியா' எனவும், வடக்குப் பகுதியில் 'சாலியர்' எனவும், தென்பகுதியில் 'தேவாங்கர்' எனவும், மற்றவர்கள் 'செட்டியார்' என்றும் அழைக்கப்பட்டனர். மொத்தம் நான்கு பிரிவுகள். 
இவர்கள் யாவரும் சதுவார்ய வைசிய வம்சத்தை சேர்ந்த பட்டு சாலியர் சாதியினர் தான். (சதுவார்ய- சதுர் என்றால் சமஸ்கிருதத்தில் 4 என்று அர்த்தம்) 

 காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பட்டு சாலியர் சாதியினர் கடவில் பகவதியை வணங்கி வந்தனர். அந்த ஊரைவிட்டு இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வெளியேறும்போது தேவியின் சிலையை கடலில் இருந்து விட்டு வெளியேறினர்.

 பின்பு ஒருகாலத்தில் பட்டாரியர் வாழ்ந்துவந்த 'பள்ளிபுரம்' ஏரியின் பக்கம் குழந்தைகள் விளையாடும்போது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கத்து வீட்டுக் குழந்தைகள் புல் வெட்ட சென்ற சமயம், ஒரு கல்லில் கத்தியை தீட்டும்போது கல்லில் இருந்து ரத்தம் வழியவே, பெரியவர்கள் இந்த கல் தேவியின் சிலை தான் என்று உணர்ந்து சிறிய கோயில் கட்டி சிலையை பிரதிஷ்டை செய்தனர். முன்பு நூறு ஏக்கர் நிலங்களை கொண்ட கோயிலாக இருந்த இது, பல ஆக்கிரமிப்புகளைக் கடந்து இப்போது ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ளது. இவ்வாலயம் பட்டாரியர் கோவில் என்று மற்றவர்களால் கூறப்படுகிறது. 

இவ்வாலயம் வைக்கம் ஏரியின் மேற்கு கரையில் உள்ள மகேஷ்வரர் ஆலயத்தை ஒட்டியுள்ளது.

அடியேன் saliya maharishi

சோழர்தேசத்தில் சாலியக்குடி

தஞ்சையைச் சார்ந்த பெண்ணாகடத்தில் பராந்தக நெடுஞ்சடையான் என்பவர், இரண்டாம் நந்திவர்மனை வெற்றிகொண்ட செயல் நடந்தது. புரட்சி கொடி தூக்கிய அந்த மன்னன் அடக்கப்பட்டான். வேலூர், விண்ணம், சாலியக்குடி முதலிய இடங்களில் பகைவர் பலர் ஒடுக்கப்பட்டனர். (தமிழர் வரலாறும் பண்பாடும். பக்கம் 233, 234 ஆசிரியர்:- ராஜு காளிதாசன்)

கைக்கோளரும் சாலியரும்

 

கைக்கோளர் சமுதாயத்தாரும், சாலியர் சமுதாயத்தாரும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள்.
 தொழில்முறையில் இவர்கள் இணைந்து செயல்பட்டார்கள். குண்டூர் , கோவை போன்ற இடங்களில் நெசவு செய்யப்பட்ட துணிகள், "சிலி" என்று போற்றப்பட்டு வந்தது. 8 முதல் 10 தங்க நாணயத்துக்கு இந்த துணிகள் விற்கப்பட்டு வந்தன. 12 அடி நீளமான பீஸ் 100 வெள்ளி நாணயங்களுக்கு விற்கப்பட்டன. (administration and social life under Vijaya nagaram 125- 1975 ll T.V.Mahalingam)

பல்லவர் ஆட்சியில் சாலியர்


 பல்லவர் ஆட்சியில் சாலியர் சமுதாயம் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தது. பொதுமக்கள் விலை குறைந்த ஆடைகள் அணிந்தனர். நடன மாதுக்களின் ஆடைகள் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டன. காஞ்சிபுரம் அரண்மனையில் நெருங்கிய தொடர்புகளை சாலியர்கள் கொண்டிருந்தார்கள். (Pallavars BC - P.Meenakshi 193.3)

மலபார் மலையாளம் சாலியர்கள் 2


கடவுள்

இவர்கள் பூத ஆட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். கோமான்கள் எனப்படும் இவர்கள் சாதியைச் சேர்ந்த சிலர் பகவதி, வெட்டக்கொருமகன் போன்ற தெய்வங்களை சிறப்பிக்க இந்த சடங்கினை ஆடுகின்றனர். 
உறவுமுறை 

சில வட்டாரங்களில் மருமக்கள்தாய உறவு முறையையும், வேறு சில வட்டாரங்களில் மக்கள்தாய உறவு முறையையும் பின்பற்றுகின்றனர். 10 நாள் தீட்டு மேற்கொள்ளும் இவர்களின் தீட்டினை போக்கும் சடங்குகளை இவர்கள் சாதியினுள்ளே உள்ள 'தெளிக்குன்னவன்' (அதாவது, தெளிப்பவன்) என்பவன் நடத்தி வைக்கிறான். 

சாதித்தலைவன்

இந்த சாதி தொடர்பான எல்லா விவகாரங்களையும் 'ஊராளன்' என்னும் சாதித் தலைவன் தீர்த்து வைக்கிறான். சாதி அம்பட்டன் 'பொதுவான்' சாதிச் செய்திகளை அறிவிக்கும் பணியினை மேற்கொள்கிறான். 

#பட்டங்களில்_சாலியர்(கேரளத்தில் மட்டும்)

'சாலியன், என்ற பெயர் நாயர்கள் இடையே கூட தொழில் தொடர்பான பட்டமாகவும், உட்பிரிவின் பெயராகவும் வழங்கப்படுகிறது. 'சாலியன்னாய' என்பது பண்டர்கள் புறமணக் கட்டுப்பாடுடைய குலம் ஒன்றின் பெயராகும். 1901 சென்னை மாநில கணக்கெடுப்பில் சாலியன் என்பது வாணியர் சாதியின் உட்பிரிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊர் ஊராகச் சென்று எண்ணெய் விற்கும் தொழிலையும் செய்கின்றனர்.('தென்னிந்திய குலங்களும் குடிகளும்', எட்கார்தாஸ்டன், தஞ்சை பல்கலைக்கழக வெளியீடு.)

..... மீண்டும் தமிழக வரலாறுக்கு திரும்புவோம். 


மலபார் மலையாளம் சாலியர்கள் 1


முன்குறிப்பு:- மலையாளம்+சாலியர் என்பதுதான் "மலையாஞ்சாலியர்" என்று ஆயிற்று. 
 மலையாளத்தை சேர்ந்த பருத்தி நெசவு செய்யும் சாலியர்களைப் பற்றி பிரான்சிஸ் என்பவர் 1901 சென்னை மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் கூறுகிறார் - "உடை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் இவர்கள் மலபாரைச் சார்ந்த கைவினைஞர் சாதியை ஒத்தவர்கள். எனினும் இவர்கள் பட்டர், பிராமணர் இவர்களைப் போல தனித்தனி தெருக்களில் தங்கி வாழ்ந்து, கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து அண்மைக்காலத்தில் வந்து குடியேறியவர்கள். "பொதுவான்" எனப்படும் தங்கள் சாதிக்குரிய அம்பட்டர்களை இவர்கள் பெற்றுள்ளனர். கிழக்கு கடற்கரையை சார்ந்த சாலிய நெசவாளர்களை போல இவர்கள் 'பூணூல்' அணிவதில்லை. மூதாதையரை வழிபடும் பழக்கம் இவர்களிடம் இருப்பினும் அதற்காக இவர்கள் பிராமண புரோகிதர்களை வைத்துக்கொள்வதில்லை. மலபார் சாதிகளில் இவர்களிடையே மட்டும் வலங்கை , இடங்கை பிரிவுகளும் அது தொடர்பான சச்சரவுகளும் காணப்படுகின்றன. இவர்களுள் இடங்கை பிரிவினர் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகின்றனர். எனவே இச்சாதியர் கிழக்கு கடற்கரையில் இப்பிரிவுகள் தோன்றியபின் கிபி. பதினோராம் நூற்றாண்டிற்குப் பின் மலபாரில் வந்து குடியேறியவர்கள் என்று கருதவேண்டியுள்ளது. இவர்களில் சிலர் மருமக்கள்தாய உறவு முறையை(சொத்துக்காக) கடைபிடிக்கின்றனர். இவர்கள் தெருக்களில் வாழ்ந்து வருவதால் "தெருவன்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். வலங்கை பிரிவினர் கணேசரையும், இடங்கை பிரிவினர் பகவதியையும் வழிபடுகின்றனர். வலங்கைப் பிரிவினர், கணபதி வழிபாட்டை அதிகம் புகுத்த முனைந்த 'சாமோரின' அரசர் ஒருவரால் மலபாருக்கு வரவழைக்கப்பட்டு இருக்கலாம். 

                              மேலும்...

-saliya maharishi

பாண்டியர் ஆட்சியில் சாலியர்


வரலாற்றில் சங்ககாலம் முதல் முகலாயர் காலம் வரை நெசவாளர்கள் உன்னதமான நிலையில் இருந்தார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. "சாலியூர்" என்ற துறைமுகம் பாண்டியநாட்டில், கீழ கடற்கரையில் சங்ககாலத்தில், அதாவது கிபி முதல் நூற்றாண்டில் சிறப்புடன் விளங்கியது. பாண்டியநாட்டு நூல், பட்டு துணிகள் எல்லாம் இந்த துறைமுகம் வழியாக ரோமாபுரிக்கு கடல்வழியாக அனுப்பப்பட்டன. 

 இந்த துறைமுகத்தை சுற்றி வாழ்ந்த சாலியர் சமூகம் பாண்டிய மன்னர்களிடம் பெரும் மதிப்பு பெற்று வாழ்ந்து வந்தார்கள். (history of South India 1976 page number 139)

                       

காஞ்சிபுரத்தை விட்டு இடம்பெயர்ந்த சாலியர்கள்

1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், செங்கல்பட்டு மாவட்ட அறிக்கையில் சாலியர் பற்றிக் கூறும்போது :- "செல்வநாயக்கர் என்பவரால் தொந்தரவு செய்யப்பட்ட பெரும்பகுதி சாலியர்கள் காஞ்சிபுரம் விட்டு மதுரை, திருநெல்வேலி தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில் குடியமர்ந்தனர். இவர்களின் சந்ததியினர் இன்றும் அந்தந்த மாவட்டங்களில் காணப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.(இடம் பெயர்ந்த காலகட்டம் குறிப்பிடப்படவில்லை. அது இந்த அறிக்கைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு)
 மேலும் பல்வேறு ஆட்சிக்காலத்தில் சாலியர்கள் சிறப்புற்று விளங்கி இருக்கிறார்கள். 

செப்பேடுகளில் காஞ்சிபுரம் சாலியர்

சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள செப்பேட்டில் காஞ்சிபுரத்தை ஆண்ட சோழ மன்னர்களில் உத்தம சோழன் என்ற பரகேசரிவர்மன் உத்தம சோழர் (கிபி 971 ல்) எழுதிக்கொடுத்த செப்பு பட்டயத்தில் முதல் பத்து வரிகள் சமஸ்கிருதத்திலும், அடுத்த 110 வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன.

செப்பேட்டில் உள்ள சமஸ்கிருத பகுதி தெரிவிப்பதாவது :- கச்சிப்பேடு(காஞ்சிபுரம்) நகரில் சில பகுதிகளான கருவூலம்பாடி, கம்சகப்பாடி, ஆதிமனப்பாடி, மற்றும் எருவலச்சேரி என்ற இடங்களில் வாழும் பட்டு சாலியர் நெசவாளர்கள் 200 தங்க காசுகளை அரசரிடம் வைப்பு நிதியாக வைத்துள்ளனர்.
 இவற்றில் இரண்டு பகுதிகளில் வாழும் நெசவாளர்களை உத்தம சோழன் , கோவில் மேலாளராக நியமித்துள்ளார். மேலும் மதுரையைப் வென்ற இந்தச் சோழ மன்னர் சோழனியாமம் என்ற பகுதியில் உள்ள மக்கள், ஊரகம் கோவிலுக்கு குறிப்பிட்ட அளவு அரிசியும் , எண்ணெயும் ஆண்டுதோறும் தரும்படி கட்டளையிட்டுள்ளார் . இதனால் சோழனியாமம் மக்கள் உட்பட கோவிலில் மேலாளராக பணி புரியும் நெசவாளர்களும் ஊரகம் கோவிலில் கணக்குகளை முறைப்படி எழுதி மேற்பார்வை செய்ய வேண்டும்."
இந்த செப்பேட்டில் கண்டபடி பட்டு சாலியன் நெசவாளர்கள் மன்னனிடம் பெற்றிருந்த மரியாதையும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உடையவர்களாக இருந்தனர் என்றும் தெரியவருகிறது. 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாம் காஞ்சிபுரத்தில் இருந்து வந்ததற்கு வலுவான ஆதாரமாகவும் இது இருக்கிறது. 

இன்னும் சில விஷயங்கள் சொல்ல வேண்டியுள்ளது.....

பூதப்பாண்டி சாலியர் கல்வெட்டு


நாஞ்சில் நாட்டின்(நாகர்கோவில்) பூதப்பாண்டியில் இருக்கும் பாண்டீஸ்வர உடைய நாயனார் கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கும் விஷயம்(கல்வெட்டில் மலையாள வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது) இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே சாலியர் வடசேரி பகுதியில் வாழ்ந்து வந்ததற்கு சாட்சி :- 


வரி 1 முதல் 11 :- கொல்லம் ஆண்டு 867 தை மாதம் 19ஆம் தேதி இந்த சாசனம் நாஞ்சில்நாட்டு பூதப்பாண்டியில் இருக்கும் பூதப்பாண்டீஸ்வர உடைய நாயனார், ஸ்ரீ பண்டாரத்தில் (அரசரின் கோவில்) நிதி நிர்வாகத்தில் (ரவிவர்மா , 1684 முதல் 1717 வரை) இருந்து அரசர் அவ்வூரில் உள்ள சாலிய நகரத்தாருக்கு கல்வெட்டு விட்டுக்கொடுத்த சலுகைகள். 

வரி 12 முதல் 20 வரை:- அரசரின் ஆணைப்படி சாலியர்கள் வடசேரியில் அவர்களுக்காக இருக்கும் நிலங்களில் குடியிருக்கவும், நகரத்தின் மேற்கு பகுதியில் (உபத்திரம் கொண்டு) வீடுகளை இழந்த சாலியர்களுக்கும் அந்த சேரியில் குடியமர அனுமதிக்கப்படும்.

வரி 21 முதல் 34 வரை:- சாலியர் தெருக்களில் யாராவது தவறு செய்தால், சாலியக்குடியில் அவர்களுக்கு நெல், வித்து(விதை), பாத்திர பண்டம், மாடு, கன்று, நூல் ,பாவு முதலியவைகள் பணயம் எடுக்கும் உரிமை தடை செய்யப்படும். தவறு செய்பவர்கள் (மறித்து) பிடித்து வரப்படுவார்கள். அவர்கள் பிறர் காதை அறுத்த தவறுக்குரிய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 

வரி 35 முதல் 41 வரை:- அந்த தவறுக்கு அவர்கள் சரியான ஈடு செய்தபின் (சாலியர் தெருக்களில்) அமைதியாக வாழ அனுமதிக்கப்படுவார்கள். 

வரி64 முதல் 75 வரை:- கல்லிலும் செம்பிலும் வெட்டி இருக்கும் இந்த சாசனம், வானில் சந்திரன் நட்சத்திரங்கள் இருக்கும் காலம் வரை தொடரும். இது ஆதி சண்டேஸ்வரரின் ஆணை.

சாலிய மஹரிஷி


படத்தில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாளின் வலக்கரத்துக்கு கீழே அமர்ந்திருக்கும் சாலி கோத்திர மகரிஷி
*

அரக்கு மாளிகையில் இருந்து தன் தாயையும் சகோதரர்களையும் பீமன் காப்பாற்றிக் கொண்டு இடும்ப வனத்திற்கு வந்தான். இவ்விடும்பவனத்திற்கு அடுத்தவனம் சாலிஹோத்ரவனம். இவ்வனம் இம்முனிவர் பெயரால் வழங்கப்பட்டது. இவ்வனத்தில் சாலிஹோத்ர மகரிஷியிடம் சிலநாள் தங்கி இருந்து பாண்டவர் அவரிடம் பல தருமங்களைக் கற்று உணர்ந்தனர். சாலிஹோத்ர முனிவரால் உண்டாக்கப்பட்ட ஒரு தடாகத்தில் பாண்டவர்களையும் குந்தியையும் ஆறுமாதகாலம் மறைவாக வசிக்கச் சொன்னார் வியாசர். இத்தடாகம் பசி, தாகம், களைப்பு முதலானவற்றை நீக்கும் என்று அதன் பெருமையை வியாசர் கூறினார்.