புதன், 30 நவம்பர், 2016

மாயவரம் சாலியர் திருமணம் 2

சகோதரி பெண்ணிடம் தட்டைக் கொடுத்த பிறகு புரோகிதர் வந்து சடங்கை தொடர்வார். பின் கூறைப்புடவையை பெண்ணிடம் தருவார். கூறைப் புடவை 18 முழம் நீளமிருக்கும். தாலி கட்டும் போது பெண் கூறைப் புடவையை பிராமண முறையில் மடிசார் கட்டியிருப்பார். மாப்பிள்ளை கச்சம் வைத்து வேஷ்டி கட்டி இடுப்பில் துண்டு, தலைப்பாகையும் வைத்து இருப்பார்.



பிறகு தாலி கட்டுவார். தாலி கட்டிய பிறகு மணமக்கள் மணவறையைச் சுற்றிவந்து பொறி போடுவது, அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது முதலான சடங்குகள் நடக்கும். பிறகு திருமண விருந்து நடக்கும்.

திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை தோழன் அக்கினிப் பானையில் ஹோமம் வளர்த்த அக்னியை மூன்று முறை போடுவார். பெண்கள் யாவரும் கூட்டமாக இருந்து பாக்கு, வெற்றிலை, பூ, பழம், சர்க்கரை, குங்குமம் எல்லாவற்றையும் அனைவருக்கும் கொடுத்து, தட்டில் தேங்காய், வெற்றிலை பழம் வைத்து மாப்பிள்ளை வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கும் கொடுப்பார்கள். இதை சம்பந்தி பங்கு கொடுப்பது என்று சொல்வார்கள்.

மாப்பிள்ளையின் அண்ணன் அல்லது தம்பியின் மனைவி அக்னிப்பானையை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடக்கும். பெண், மாப்பிள்ளை இருவரும் மாலையில் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றுச் பிறகு, பிறகு புனுகீஸ்வரர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து, நமது நேச நாயனாரையும் தரிசித்து வருவார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் மேளதாளத்துடன் வீதியில் காரில் ஊர்வலம் வருவார்கள். இதன் பின் உறவினர்கள் மொய் எழுதுவார்கள்.

திருமணம் முடிந்து இரண்டாவது நாள் காலையில், நல்ல நேரத்தில் பந்தலில் விளக்கேற்றி, பாய் விரித்து ஆண்களும் பெண்களும் அமர்ந்து, மாப்பிள்ளை பெண்ணை அமரவைத்து இரண்டு கிண்ணத்தில் நல்லெண்ணெய், அதன் மீது கொஞ்சம் அருகம்புல் கட்டி வைத்திருப்பார்கள். இரண்டு உருண்டை அரப்பு , மஞ்சள் அருகில் இருக்கும். புரோகிதர் இதை நடத்தி வைப்பார். மாப்பிள்ளையை மனையில் அமர வைத்து பெண்ணைக் கிண்ணத்தில் உள்ள எண்ணெயை அருகம்புல்லால் தொட்டு மாப்பிள்ளையின் உச்சந்தலையில் வைக்கச் சொல்லுவார். பிறகு பெண்ணுக்கு இந்தச் சடங்கை மாப்பிள்ளை செய்வார். எண்ணெய் வைத்த பிறகு அரப்பு உருண்டையையும் மஞ்சளையும் கொடுப்பார். இருவரும் எண்ணெய் தேய்த்து உட்காரவும் முதல் நாள் கையில் கட்டிய கங்கணம் களையப்படும்.



இதன் பிறகு நலுங்கு........

செவ்வாய், 29 நவம்பர், 2016

மாயவரம் சாலியர் திருமணம் 1

மாயவரம் சாலியர்களில் பெண், மாப்பிள்ளை ஜாதகங்களை பெற்றோர் வாங்கி பொருத்தம் பார்த்து சரியாக அமைந்தால் , மாப்பிள்ளை வீட்டிலிருந்து சுமார் 25 பேர்களுக்கு குறையாமல் ஆண்களும் பெண்களும் சர்க்கரை, பூ, பழம் , வெற்றிலை பாக்கு, குங்குமத்துடன் பெண்ணுக்குப் போடும் நகை முதலியவைகளை தாம்பாளத்தில் வைத்து எடுத்து சென்று நிச்சயம் செய்வார்கள். இதற்கு வெற்றிலை பாக்கு மாற்றுவது அல்லது பெண்ணுக்கு பொட்டுப் போடுவது என்றும் அழைப்பார்கள்.

திருமணத்துக்கு நல்ல நாள் பார்த்து முகூர்த்த ஓலை எழுதுவது, தாலி செய்யக் கொடுப்பது, பந்தக்கால் நடுவது என்று வேலை நடக்கும். தாலி, புடவை, பரிசப்புடவை எல்லாம் மாப்பிள்ளை வீட்டைச் சார்ந்தது. கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வந்து பரிசம் போடும் சடங்கு நடக்கும். ஒரு தாம்பாளத்தில் மூன்று தேங்காய், ஒரு சீப்பு வாழைப்பழங்கள், வெற்றிலை பாக்கு , பூ, ஒரு மஞ்சள் துணியில் 21 கால் ரூபாய் நாணயங்களை முடிந்து வைத்திருப்பார்கள். பெண்ணின் தாய் மாமன் பெண்ணின் நெற்றியில் சந்தனத்தால் பொட்டுவைத்து , மாலை போட்டு தேங்காய் பழம் உள்ள தட்டை எடுத்து பெண்ணிடம் கொடுப்பார். இதற்கு "பரிசம் போடுவது" என்று பெயர் அங்கு.

கல்யாண நாளன்று அரசாணி கால் நடுதல், தாலி, கூறைப்புடவை, கூறைவேட்டி எல்லாம் வைத்துப் படைப்பார்கள். புரோகிதர் வந்து சடங்குகள் ஆரம்பமாகும். விருந்து ஆரம்பமாகும். மாப்பிள்ளை காசி யாத்திரை போவது என்ற சடங்கு நடக்கும். பிராமணர்கள் இதைச் செய்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதிலிருந்து நாமும் #பிராமணரே என்பதை அறியலாம்.

காசியாத்திரை என்பது, மாப்பிள்ளை காசிக்கு கிளம்புவார்.



பெண்ணின் தகப்பனார், மாப்பிள்ளையை அழைத்து, நான் பெண் தருகிறேன். என்று சொல்லி அழைத்து வந்து மாப்பிள்ளையிடம் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பார். மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவார். புரோகிதர் மாப்பிள்ளைக்கு கூறைவேஷ்டியை கொடுப்பார்.

அடுத்து பெண்ணுக்கு மாப்பிள்ளையின் சகோதரி பூ சுற்றுவது என்ற சடங்கை நடத்துவார். தாம்பாளத்தில் பழம், மூன்று தேங்காய், பூ, தாம்பூலம் எல்லாம் வைத்து பெண்ணின் நெற்றியில் சந்தனத்தால் பொட்டிட்டு, குங்குமம் வைத்து பூமாலை கழுத்தில் போட்டு பழத்தட்டை பெண்ணிடம் தருவார். .....

சாலியர்களின் திருமணம்

பரிசம் முடித்த பிறகு பெரியோர்களால் நாள் குறிக்கப்பட்டடு பத்திரிகை அச்சடிக்கப்படும். முதலில் குலதெய்வங்களுக்கு பத்திரிகை சமர்ப்பிக்கப்படும். பிறகு ஊர் மக்களுக்கு அழைப்பிதழ் தட்டில் வைத்து வெற்றிலை பாக்குடன் தரப்படும். மைத்துனர்களுக்கு அழைப்பிதழ், வெற்றிலை பாக்குடன் இணைந்து பணம் வைத்து அழைப்பார்கள். இதற்கு "சுருள் வைப்பது" என்று பெயர்.

பெண், மாப்பிள்ளை வீடுகளில் வெள்ளை அடிக்கப்பட்டு தலைவாசலில் குலைவாழை கட்டுவார்கள். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டப்படும். திருமணம் பெண்வீட்டிலோ அல்லது மாப்பிள்ளை வீடிலோதான் நடக்கும். பெரும்பாலும் பெண்வீட்டில் தான் நடக்கும். (மண்டபத்தில் நடத்துவதில்லை. நாங்கள் மண்டபத்தில் தான் நடத்தினோம் என்று நினைக்காதீர்கள். நான் எழுதியுள்ள நடைமுறை பழங்காலத்தில் இருந்து பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கபட்ட வழக்கமாகும்)

சாலியர் திருமணம் வேத முறைப்படி பிராமணப் புரோகிதரைக் கொண்டு நடத்தப்படும். காப்புகட்டுதல், நாட்கால் நடுதல், ஹோமம் வளர்ப்பது, தகப்பனாரால் தாரைவார்ப்பது எல்லாம் நடக்கும்.

காப்புக் கட்டுதல் :- திருமணம் நடக்கும் முன்பு மணமக்கள் சாப்பிடக் கூடாது. விரதமே. அந்த விரதத்தின் படி மஞ்சளில் நனைத்த நூலில் விரல் மஞ்சள் கட்டப்பட்டிருக்கும். தாலி கட்டி முடிந்த பிறகு காப்பு கழற்றப்படும்.

நாட்கால் நடுதல்:- இதற்கு பெரும்பாலும் ஆலமரக் கிளையின் ஒரு கம்பு பயன்படும். அதன் மேல் நவதானியம் மஞ்சள் துணியில் கட்டப்பட்டிருக்கும்.

இதற்கு மேல் சில பழக்கங்கள் நமது இனத்தில் கடைப்பிடிக்கப் பட்டுவந்து பிறகு கைவிடப்பட்டது. அம்மி மிதித்தல், அருந்ததி நட்சத்திரம் காணல், சப்தபதி மந்திரம் சொல்லி அடியெடுத்து வைப்பது போன்றவை. இன்னும் சில இடங்களில் கடைப்பிடிக்கப் படுகிறது.

இதன் பின் மணமக்களின் பெற்றோர்களால் திருநீறு பூசி அட்சதையிட்டு ஆசிர்வதிக்கப்படுவர். பிறகு வீட்டில், ஊரில் உள்ள பெரியவர்களால் மேற்படி முறையில் ஆசீர்வாதம் நடக்கும். அனைவருக்கும் விருந்து நடைபெறும். சம்பந்தி வீட்டாரை அழைத்துவருவார்கள் - விருந்துக்கு.

அதாவது திருமணம் பெண் வீட்டில் நடந்தால் மாப்பிள்ளை வீட்டாரையும், மாப்பிள்ளை வீட்டில் நடந்தால் பெண்வீட்டாரையும் அழைத்து வந்து விருந்து பரிமாறப்படும்.

நடு வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி, சமையல் செய்த சாதம் பருப்பு காய்கறிகள் ஒன்றாக கலந்து பிசையப்பட்டு, அதை ஒன்பது உருண்டைகளாக உருட்டப்பட்டு, அவற்றில் குழி செய்து நெய் ஊற்றி விளக்குப் போடுவார்கள். இந்த விளக்குகள் தலைவாழை இலையில் வைக்கப்பட்டிருக்கும். இதற்கு "பூதப்படி கட்டுதல்" என்று பெயர். இதன் பின்னரே அனைவருக்கும் விருந்து நடக்கும்.

பிறகு நல்ல நேரம் பார்த்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு மறுவீடு அழைத்து வருவார்கள். தீபாவளி, ஆடி மாத அழைப்பு எல்லாம் மாப்பிள்ளைக்கு உண்டு.

இனி மாயவரம் சாலியர் திருமணச் சடங்குகள் பற்றி சொல்ல விரும்புகிறேன்

**
நம் குலப்பெண் ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமணம்

சாலியர்களின் திருமணம்(பரிசம்)

சாலியர்களில் திருமணம் பெரும்பாலும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டதாகவே இருக்கும். சில சமயங்களில் காதல் திருமணமும் உண்டு. முற்காலத்தில் மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்ணுக்கு பரிசப் பணம் கொடுத்து திருமணம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது பரிசம்(தொகை) கொடுப்பது நின்று வரதட்சணை எனபது வழக்கமாக நடக்கிறது.

ஆனால், அம்மான் அல்லது அத்தை மகளை மணக்கையில் வரதட்சணை முக்கிய இடம் வகிப்பதில்லை. உறவுக்கே முதலிடம்.

பெரியவர்களால் ஜாதகப் பொருத்தம் பார்த்து முதலில் பரிசம் போடுவது வழக்கம். இப்போது பெண்ணுக்கு தொகை கொடுப்பதில்லை என்றாலும் பரிசம் என்ற சடங்கு நடந்தே வருகிறது.

பரிசத்துக்கு குறித்த நாளில் மாப்பிள்ளை வீட்டார், தங்கள் உறவினர்கள், உற்றார், ஊர்ப்பெரியவர்கள், நாட்டாண்மை இவர்களுடன், பெண்கள் தாம்பாளத்தில் தேங்காய், பழங்கள், மலர்கள், கற்கண்டு, சேலை, ரவிக்கை எல்லாவற்றையும் சுமந்து வருவார்கள்.

பிறகு நாட்டாண்மை முன்னிலையில், அல்லது பெரியவர்கள் முன்னிலையில் பெண், மாப்பிள்ளை இவர்களின் தகப்பனார்கள் இருவரும் சந்தனம் பூசி, விபூதி அணிந்து கழுத்தில் பூமாலை அணிந்து உட்காருவார்கள். சில சமயம் காதிலும் பூ வைப்பதுண்டு.

இருவரும் எதிரெதிராக உட்கார்ந்த பிறகு இருவருக்கும் நடுவில் ஒரு முக்காலிப் பலகை வைக்கப்பட்டு, அதன் மேல் ஒரு சிறிய ஓலைப்பெட்டியில் நெல் நிரப்பப்பட்டு, அதன் மேல் மஞ்சள் கிழக்கு மற்றும் புடவை, பூக்கள் வைக்கப்படும். நாட்டாமை நிச்சயம் செய்யும் விவரத்தை கூறுவார். அதாவது இன்னாரின் மகளை இன்னாரின் மகனுக்கு கொடுப்பதாக சம்பிரதாயமாக அறிவிப்பார்.

பிறகு மாப்பிள்ளையின் தகப்பனார், பரிசமாக மேற்படி ஓலைப் பெட்டியை பெண்ணின் தகப்பனாரிடம் வழங்குவார். அதைப் பெற்ற பெண்ணின் தகப்பனார் பெண்ணின் தாய் மாமாவிடம் அந்தப் பெட்டியைக் கொடுப்பார். சில ஊர்களில் பரிசத்தட்டை மாற்றும் உரிமையும் தாய்மாமனுக்கே.


தாய்மாமன் பரிசப்பெட்டியை பெண் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்வார். மணப் பெண் தன் முந்தானையை விரித்து ஏந்தி அந்தப் பரிசப் பெட்டியை வாங்கிக் கொள்வாள். பெண்கள் குலவையிட்டு அதை வரவேற்பார்கள். பெண் தன் பரிசப் புடவையை அணிந்து கொள்வாள்.

சுமங்கலி பெண்களுக்கு இதன்பிறகு சந்தனம் குங்குமம் வழங்கப்படும். பிறகு நாட்டாண்மைக்கும் வந்திருக்கும் பெரியோர்களுக்கும் தாம்பூலம் வழங்கிய பிறகு அனைவரும் விடை பெற்றுக் கொள்வார்கள்.

இது முடித்த ஓரிரு நாட்களில் பெட்டியிலிருந்த நெல்லை மாவாக்கி, அதை அனைவருக்கும் வழங்குவார்கள். இத்துடன் பரிசச் சடங்கு முடிந்தது.

சாலியர்களின் ருதுசடங்கு

சாலியப் பெண் பருவமடைந்து விட்டால் அவளின் தாய் தந்தையர் முதலில் தாய் மாமனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பிறகு மற்ற உறவினர்களுக்கு சொல்லுவார்கள்.

அன்றைய தினம் மாலையே பெண்ணுக்கு தலைநீர் ஊற்றி நீராட்ட நேரம் குறிக்கப் படும். (இப்போது இரண்டு மூன்று நாட்கள் கழித்து கூட செய்யப்படுகிறது)

தாய்மாமன் சார்பில் பருவமடைந்த பெண்ணுக்குத் தேவையான பொட்டு, கண்ணாடி, பழங்கள், கற்கண்டு முதலான பலகாரங்களை தாம்பாளத்தில் வைத்து தூக்கி வருவார்கள் (அத்தைதான் பெரும்பாலும்).

அன்று மாலை ஒரு சுமங்கலிப் பெண் பருவப் பெண்ணுக்கு நீராட்டுவார் தலையில் தண்ணீர் ஊற்றி. இதற்கு பெரும்பாலும் ராசியான பெண்ணையே செய்யச் சொல்லுவார்கள்.



நீராடிய பிறகு பெண்ணை தனியாக வீட்டிலேயே ஒரு பகுதியில் தங்க வைப்பார்கள். அவளுக்கென்று தனியாக பாய், தலையணை, தட்டு கொடுக்கப்படும். வீட்டில் மற்ற பொருட்களை தொட அனுமதி மறுக்கப்படும்.

பருவமடைந்த தினத்திலிருந்து 16 நாட்களில் ஒரு நல்ல நாளாகப் பார்த்து சடங்கு செய்ய முடிவெடுக்கப்படும். சடங்கு நாளில் தாய்மாமா தன் சீராக பெண்ணுக்கு தேவையான சேலை, ரவிக்கை, பலகாரங்கள், ஒப்பனைப் பொருட்கள் முதலிய பொருட்களை தாம்பாளத்தில் வைத்து மேளதாளத்துடன் கொண்டு வருவார்.

தாய்மாமன் வழியில் ஒரு பெண்குழந்தையை மாப்பிள்ளை வேடமிட்டு கல்யாணம் போல் மாலை மாற்றி சடங்கு செய்யப்படும். இதை ஒரு ஐயர் அல்லது குருக்கள் நடத்தி வைப்பார். பிறகு வந்திருக்கும் உறவினர்களுக்கு விருந்து அளிக்கப்படும்.

அனைவரும் குழந்தையை வாழ்த்திவிட்டு சென்று விடுவார்கள். முன்பு பருவமடைந்த பெண்ணை வீட்டுக்கு வெளியில் விடும் பழக்கம் நம் இனத்தில் கிடையாது. படிப்பு நிறுத்தப்படும். இப்போது அப்படி இல்லை.

அடுத்து நமது திருமணச் சடங்களை மாயவரம் உட்பட #ஊர்வாரியாக தனித்தனியாக விரிவாகப் பார்ப்போம்.

சாலியர்களின் நம்பிக்கை

சடங்குகளைப் பற்றி மேலும் பார்க்கும் முன் சாலியர்களின் சில வட்டார பழக்கங்கள், பேச்சுவழக்கில் வந்த வார்த்தைகளையும் பார்ப்போம்.

1. நூலில் கலர் சரியாக பரவாமல் திட்டு திட்டாக பிடித்திருந்தால் கலர் பூராவும் சாரல் என்பார்கள். அதாவது மழைச்சாரல் போல விட்டு விட்டு பிடித்திருக்கிறதாம்.

2. பொய் சொல்பவனை சரடு விடுறான் என்பார்கள்.

3. தறி "தில்லையன் கால் மாதிரி ஆடுகிறது" என்பார்கள். அதாவது சிதம்பரம் தில்லை நடராஜர் போல ஆடுகிறதாம்.

3. நெய்யும் போது நிறைய இழைகள் அறுந்து விட்டால், நெய்பவர் முறையாக கட்டாமல் தன் இஷ்டப்படி கட்டிவிட்டால் "தெத்து நிறைய விழுந்து விட்டது" என்பார்கள். ஒருவருக்கு பல் நெட்டையும் குட்டையுமாக மாறி மாறி இருந்தால் அவனை "தெத்துப்பல்லன்" என்பார்கள். இந்த வார்த்தை நாம் கொடுத்தது.

4. பாவு தோயும் போதும், நெய்யும் போதும் கோழி இறகு அல்லது குருவி இறகு பறந்து விழுந்தால் அந்தத் துணி பிரியமாக விலை போகுமாம். (இறகு பறப்பது போல பறந்துரும்).


5. பாவு காலியான பிறகு கீழ்த்தடியிலிருந்து பாவு சுற்றும் உருளை வரை இருக்கும் மீதமான பாவு தறிக்கிடைப் பாவு எனப்படும்.

6. பாவு தோயும் போது அளவில் குறி போடுபவர் அன்றைய நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.



7. தெருவில் பாவு சுற்றும் நபர் பின்னால் யாரும் வந்தால் அபசகுனம் என்பது நம்பிக்கை.

8. நிறை பாவில் முட்டிக்கை ஊன்றக் கூடாது.

9. சனிக்கிழமை பாவு பிணைக்கக் கூடாது. அபசகுனம்.

10. கார்த்திகையன்று நெய்தால் தரித்திரம் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது பவர்லூம் வந்ததும் இந்த நம்பிக்கை கைவிடப்பட்டது. சில இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

11. பாவு பிணைத்து நிரட்டு விழுந்த துணியை உபயோகிப்பது விசேஷமாம். (சிக்கனத்துக்காக ஏற்பட்ட வழக்கமாக இருக்கலாம்)

12. ஒரே வீட்டில் 3 தறி நெய்வது விசேஷம் இல்லையாம்.

13. கத்திரிக்காய் தோட்டக்காரனுக்கு சொத்தைக் காய். நெய்பவனுக்கு முறிவு துணி (மீதமான துணி)

14. உடுத்திய வேட்டியை கழற்றியபின் தான் நெய்ய வேண்டும். (சாயம் வெள்ளை வேட்டியில் ஒட்டாமல் இருக்கவும், காலை ஆட்ட சிரமம் இல்லாமல் இருக்கவும்)

15. அதிகாலை எழுந்து நெய்யாதவன் நெசவு, அரை நெசவு ஆகும்.

16. தாயைப் போல பிள்ளை. நூலைப் போல சேலை. இந்தப் பழமொழி நாம் தமிழுக்கு கொடுத்தது.

சாலியர்களின் உணவு

சாலியர்கள் ஆரம்ப காலங்களில் சைவ உணவு மட்டுமே உட்கொண்டார்கள். அரிசி, கம்பு, சோளம் போன்றவையே அடிப்படை உணவுகள். பிற்பாடு தங்கள் குலப்பெருமையை மறந்ததனால், அசைவ உணவுப் பழக்கம் ஏற்பட்டது.

அசைவ உணவு உண்பவர்கள் கூட செவ்வாய், வெள்ளி, கார்த்திகை போன்ற நாட்களில் உண்பதில்லை. இப்போது அப்படி இருக்கிறதா தெரியவில்லை. தென் தமிழகம் வந்த பிறகு நாம் முருக பக்தர்கள் ஆனபடியால் முருகனுக்கு உகந்த கார்த்திகை நாளில் நெசவுக்கு கட்டாய விடுமுறை.

#உடை

ஆண்களாயின் வேஷ்டி, மேல்துண்டு, பெண்கள் சேலை. கைம்பெண்கள் வெள்ளைப் புடவை அணிகின்றனர். பெரும்பாலும் ரவிக்கை அணிவது கைம்பெண்களிடம் இல்லை. பிறகு வெள்ளை ரவிக்கை பழக்கம் வந்தது. இப்போது வெள்ளை அணிவது வழக்கொழிந்து விட்டது.

பெண்கள் பின்கொசுவம் வைத்து சேலை அணிவது நமது கலாச்சாரம். இப்போது இது கிடையாது. காதுகளை பெரிதாக வளர்த்து பாம்படம் அணிவதும் உண்டு.

தாலி பிரத்யேகமாக சிறகு பிள்ளையார் (பார்க்க- படம்)என்ற மாடலில் அணியப்படும்.



ஆண்கள் முன்புறம் முடி மழித்து பின்புறம் குடுமி வைக்கும் பழக்கம் இருந்தது. (பார்க்க - படம்)இதனுடன் பூணூல் அணிந்தனர்.
நமது ஏழூர்களில் இது கட்டாயம் இருந்தது. யாராவது குடுமி எடுத்துவிட்டு க்ராப் முடி வெட்டிவந்தால் ஊரில் கூப்பிட்டு விசாரிக்கப்பட்டு கண்டிக்கப் படுவர்.



பிற்காலத்தில் சினிமா அதிகமாக பார்க்க ஆரம்பித்த பிறகு (தியாகராஜ பாகவதர்) கிராப் என்பது கட்டுப்படுத்த இயலாமல் போய்விட்டது. அத்தோடு அசைவமும் நுழைந்தது. #பூணூல் வெளியேறிவிட்டது - அசைவத்தால் அல்ல. கிராப்பு வெட்டியதால்.

நாச்சியார் அம்மன்

சில பதிவுகள் முன்பு குலதெய்வங்கள் பற்றி எழுதுகையில் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி சொல்லியிருந்தேன். அப்படியென்றால் என்ன என்று நண்பர் முத்துராமன் சித்தா என்பவர் கேட்டார்.

அதற்கு பதில் சொல்லும் விதமாக இதைச் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நான் சில மாதம் முன்பு ஒரு பிரபல ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது ராஜபாளையத்துக்கு தினமும் போய் தறிகளைப் பார்க்கும் வேலை. அப்போது அறிந்த வரலாறு இது.

ராஜபாளையத்தில் ஒருசில குடும்பங்களில் குலதெய்வம் நாச்சியாரம்மன் வழிபாடு உண்டு. அந்த வரலாறு இதுதான் .....

நமது இனத்தில் வடக்கிலிருந்து வந்த காரணத்தால் குழந்தைத் திருமணம் என்ற பழக்கம் இருந்தது. அது தான் சாஸ்திர சம்மதமான திருமணமும் கூட. (விரிவஞ்சி விளக்கமாக சொல்லவில்லை) பிற்பாடு ராஜாங்க சட்டத்தை அனுஷ்டிக்கும் முறையில் அப்பழக்கம் கைவிடப்பட்டது.

நாச்சியாரம்மாவுக்கும் சிறு வயதிலேயே திருமணம் நடந்தது. கால சூழ்நிலை காரணமாக கணவனானவர் (அவரும் சிறுவர் தான்) இறந்து விட , இந்தக் குழந்தையும் கணவருடன் உடன் கட்டை ஏறும் படி வற்புறுத்தப்பட்டது. பாவம்... சிறு குழந்தை தானே!!! மாட்டேன் என்று மறுத்தது குழந்தை.

ஆனால் பிறந்த வீட்டு வழியினர் கட்டாயப்படுத்தி இறங்கச் சொன்னார்கள். பிடிவாதமாக மறுக்கவே, சிதையில் தூக்கிப்போட முயன்றார்கள். தூக்கிவந்து எறியப் போகும் சமயம் குழந்தை நாச்சியாரம்மன் கணவன் வீட்டாரை வாழ்த்திவிட்டு, பிறந்த வீட்டாரை திட்டி விட்டு தன்னை வைத்து வணங்கும் படி சொல்லியபடியே நெருப்பில் விழுந்தது

குழந்தை நெருப்பில் விழுந்த சில நிமிடங்களில் அது கட்டியிருந்த பாவாடை மட்டும் நெருப்பிலிருந்து தெரித்து வந்து வெளியில் விழுந்தது. அந்தப் பாவாடையை எடுத்துவந்த வீட்டார்கள் அதையே நாச்சியாரம்மனாகக் கருதி இன்றளவும் வணங்கி வருகிறார்கள்.

இந்தச் சம்பவத்தில் கிடைக்கப் பெற்றது பாவாடை துணி. சில வழிபாடுகளில், சில குடும்பங்களில் சேலையாக இருந்து வழிபடப்படும்.

சேலைக்கார அம்மன் என்பதற்கு விளக்கம் புரிந்ததா முத்துராமன் சித்தா ஜீ ?




**
ஸ்ரீ கோச்சடை கருப்பசாமி, முத்தையா சாமி

சாலியர்களும் குடியிருப்பும்

ஏற்கனவே சாலியர்கள் புத்தூரில் குடியிருந்ததாக பார்த்தோம் அல்லவா....

அதுதான் தென் பகுதியில் நமது முதல் குடியிருப்பு. எனவே தான் ஏழூர் சாலியர்களின் குலதெய்வக் கோயில்கள் பெரும்பாலும் புத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருக்கிறது. உதாரணமாக 1. கலுசலிங்க அய்யனார் கோவில் 2. தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் 3. பாவோடி புணுகு கருப்பசாமி கோவில் போன்றவற்றை சொல்லலாம். புத்தூரில் இருக்கும் குளத்துக்கு இன்றும் பெரிய சாலியன் குளமென்றே பெயர். சின்ன சாலியன் குளம் புனல்வேலியில் இருக்கிறது.

புத்தூரில் வேகமான இனத்தவரால் இடைஞ்சலுக்கு ஆளான நாம் சத்திரப்பட்டி அருகில் இருக்கும் எஸ்.ராமலிங்கபுரம் என்ற இடத்தில் குடியேறினோம். அதற்கு சாட்சியாக நூல் நனைக்கும் தொட்டி மிகச்சில காலம் வரை இருந்தது. இப்போது போன இடம் தெரியவில்லை. இது போக ஒரு பிள்ளையார் கோவில் (இங்கேயும்!!) சாலியர்களால் உருவாக்கப்பட்டது என்ற கல்வெட்டுடன் இருந்தது. இப்போது கோவில் இருக்கிறது. ஆனால் கல்வெட்டு இருக்கிறதா என தெரியவில்லை.

பிறகு அங்கிருந்தும் இடப்பற்றாக்குறை மற்றும் வேறு இடைஞ்சலினாலும் விரட்டப் பட்டோம்.

பிறகு சிவகிரி ஜமீன்தாரிடம் தானமாக இடம் கேட்டோம். அதே நேரம் இன்னொரு தாழ்த்தப்பட்ட இனத்தவரும் நம் அருகில் இடம் கேட்டனர் (இனப் பெயர் தெரியும். சொல்ல விரும்பவில்லை)

நமக்கு இப்போது இருக்கும் சமுசிகாபுரம் , சத்திரப்பட்டி பகுதிகள் ஒதுக்கப்பட்டது. உடன் கேட்டவர்களிடம் "இவர்கள் கலாச்சாரத்துக்கும் உங்களுக்கும் சரிவராது. இவர்கள் நடவடிக்கைகள் ஐயர் போல இருக்கிறது. எனவே வேறு இடம் தருகிறோம்" என்று சொல்லி இன்னொரு கிராமம் ஒதுக்கப்பட்டது.

சத்திரப்பட்டி இருக்குமிடம் கருவேலங்காடாக இருந்தது. நாம் தான் சுத்தப்படுத்தி குடியேறினோம். நம் தொழிலைப் பொறுத்த வரை பெரிய தெருக்கள் தான் தேவை (பாவு தோய).

சாலியர்களும் குலதெய்வங்களும் 4

நமது காஞ்சிபுரம் விநாயகர் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் புழுங்கல் அரிசி பிள்ளையார் அல்லது புழுங்கல் வாரி பிள்ளையார் என்ற பெயரில் அருள் செய்கிறார்.



வடக்கு ரத வீதியில் தேர் ஓடி முடித்து கிழக்கு ரத வீதியில் திரும்புமல்லவா... தேர் திருப்பத்திலேயே நிற்கும். ஆனால் வடம் மட்டும் ஒரு சிறு தெருவுக்குள் போய் திரும்ப கொண்டுவரப்படும். அந்த தெருவில் இருக்கிறார்.

ஆண்டாள்த்தாயார் பெரியாழ்வாரால் தத்தெடுக்கப் பட்டார். குருபரம்பரை கதைகளில் சுமார் ஐந்து வயது குழந்தையாக தத்தெடுக்கப் பட்டதாக #சொல்லப்படுகிறதாம். தெய்வக் குழந்தையை கொடுத்தது நாம்.

இந்த பிள்ளையாருக்கும் ஆண்டாள் கோவிலுக்குமான தொடர்பு...
2012 இல் அல்ல. அதற்கு 12 வருசம் முன்பாக ஆண்டாள் வடபத்திர சயனர் சுவாமி ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்வு நடப்பதற்கு முன் நிறைய தடைகளாகவே இருந்திருக்கிறது. அப்போது பிரஸ்னம் பார்க்கப் பட்டது. அதில் தெரிந்த விசயங்கள் ஆச்சர்யப்படத்தக்க அளவில் இருந்தது. அதன் விபரம் இது தான்....👇👇👇👇👇

"இந்தக் கோவிலின் ஈசான மூலையில் ஒரு விநாயகர் கோவில் இருக்கிறது. அந்த விநாயகர் கோவிலில் இருந்து தான் முதல் பிடிமண் எடுத்து ஆண்டாள் கோவில் அஸ்திவார பூஜை நடந்திருக்கிறது".

இடமும் காட்டிக் கொடுத்தது பிரசன்னம். வேறு யார் ? நம் விநாயகரேதான்!!!!

புரிகிறதா நம் குலப்பெண் ஆண்டாள். ஆகவேதான் நம் கோவிலில் எடுக்கப்பட்ட மண் அஸ்திவாரமாகியது. ஆண்டாள் திருமண கூரைப் புடவை பற்றி நாம் ஏற்கனவே எழுதியிருக்கிறோமல்லவா....

மேலும் பிரசன்னத்தில் தெரியவந்த விஷயம் ...👇👇👇
" அந்த விநாயகர் கோவில் கவனிக்க வழியில்லாமல் இருக்கிறது. அங்கு புனர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின் தான் ஸ்ரீ ஆண்டாள் தாயாருக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். " என்று பிரசன்ன சொல்லப்பட்டது.

அதன் படியே மேற்படி கும்பாபிஷேகம் (12 வருடம் முன்) நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு நம் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.



நான் அந்தக் கோவிலுக்கு சுமார் ஆறு ஆண்டுகள் முன்பு சென்றிருந்தேன். அங்கு நிர்வாகத்தில் இருக்கும் (வேறு இனத்தவர்) இது சாலியர் வழிபட்ட விநாயகர் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் காஞ்சிபுரம் விநாயகர் என்பதை மறுத்தார்.

ஆனால் இவர்தான் காஞ்சிபுரம் விநாயகர் என்பது நான் தேடிய காலத்தில் தெரிய வந்தது. சாமியின் தோற்றமும் வரலாற்றை நிரூபிக்கும் அளவில் இருந்தார்.

நண்பர்கள் சென்று வாருங்கள். நமது குலதெய்வம் அருள் புரிய காத்திருக்கிறார். சென்று வந்த அனுபவத்தை எழுதுங்கள். பராமரிக்கும் நபர்களுக்கு முடிந்தால் நமது நன்றிகளைத் தெரிவியுங்கள். நமக்கு வழிபாடே முக்கியம்.

மேலும் சத்திரப்பட்டி , புத்தூர் சாலியர் பற்றியும் பேசுவோம்.

சாலியர்களும் குலதெய்வங்களும் 3

(கீழ்கண்ட பதிவு நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். கிண்டலான பின்னூட்டங்கள் வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் )
சாலியர்கள் வழிபட்ட விநாயகர் பற்றி பேசினோமல்லவா... அதன் கூடுதல் விபரம்.

நிற்க...இதே சம்பவம் மாயவரம் சாலியர்களிடத்திலும் சொல்லப் படுகிறது. ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை. நாம் இப்போது படிக்கப் போகும் விஷயம் அப்படி அல்ல.

காஞ்சிபுரம் நகரில் மிலேச்ச (வேற்று மத) அரசனின் தொந்தரவு தாங்காமல் நாம் இங்கே ஓடிவந்தோமல்லவா..அப்போது நாம் வழிபட்ட விநாயகரை விட்டு விட்டே வர யத்தனித்தோம். அச்சமயம் விநாயகர் தாமும் உடன் வர விரும்பியதாக உணர்த்தினார். (அதாவது அசரீரி அல்லது மருளாடி சொல்லியிருக்கக் கூடும்)

தாங்களே இடைஞ்சலில் தப்பித்து ஓடுவதாகவும், இதில் விநாயகரை தூக்கிக் கொண்டு போக இயலாது எனவும் நம் முன்னோர்கள் தெரிவிக்க...
விநாயகர் "நான் உங்களுக்கு சிரமம் இல்லாமல் எடை குறைவான, நீங்கள் அன்றாடம் புழங்கும் பஞ்சு போல இருப்பேன். என்னைக் கொண்டு போங்க. நீங்கள் பிழைப்பதற்கு சரியான இடம் என்று நான் நினைக்கும் இடத்தில் பாரமாகி விடுவேன்" என்றார்.


அதன்படி அவர் எடை குறைந்து மாற, விநாயகரையும் தூக்கிக் கொண்டு நாம் புறப்பட்டோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தென் மாவட்டங்களை நோக்கி வர ஆரம்பித்தோம். ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகில் வரவும், விநாயகப் பெருமான் எடை பாரமாகி மாறினார். இதுதான் நமது இடம் என உணர்ந்த சாலியர்கள் அங்கேயே அவரை நிறுவி விட்டு அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழத் துவங்கினார்கள்.

பிறகான ஆதிக்க இனங்களினால் அங்கு தொந்தரவுக்கு ஆளான நம் மக்கள் தற்போது ஸ்வில்லிபுத்தூரின் ஐந்து பட்டிகளிலும், தெற்கே ராஜபாளையம், புத்தூர் (இது பற்றி பிறகு பார்ப்போம்) புனல்வேலி, முகவூர், புத்தூரிலிருந்து விரட்டப் பட்ட பிறகு எஸ். ராமலிங்காபுரம் (சத்திரப்பட்டி, சமுசிகாபுரம்) அப்போது கிடையாது. (இது பற்றி பிறகு பேசுவோம்) போன்ற இடங்களில் குடியேறினோம்.

இது ஒரு புறம் இருக்க அந்த விநாயகரை பற்றி அறிந்த பிறகு நான் சொன்னவரிடம் விசாரிக்க, "எனக்கும் இருக்குமிடம் தெரியாது. நீதான் தேடிக் கண்டுபிடி " என்று விட்டார். பிறகு 3 வருஷ விசாரணைக்கு பின்னர் எனக்கு அவர் காட்சி கொடுத்தார் (அதாவது கண்டுபிடித்தேன்). இப்போதும் இருக்கிறார்.

இந்த விநாயகர், நம் குலக் கொழுந்து ஆண்டாள், இந்த விநாயகருக்கும், ஆண்டாள் கோவிலுக்குமான தொடர்பு, ஆண்டாளுக்கும் நமக்குமான உறவு விநாயகர் கோவில் இருக்கும் இடம்பற்றியும் சில ஆதாரப்பூர்வமான தகவல்கள் பற்றியும் தொடர்ந்து பேசுவோம்.

சாலியர்களும் குலதெய்வங்களும் 2

சாலியர்களின் குலதெய்வ வழிபாட்டை சொல்லும் போது பழக்க வழக்கங்கள் பற்றியும் சேர்த்தே தான் பேச வேண்டியுள்ளது.

அநாதி காலம் தொட்டே வழிபாடுகள் இருந்திருகின்றன. இயற்கை வழிபாடு முடிந்து நாகரீகம் ஆரம்பிக்கவும் தெய்வ வழிபாடு ஆரம்பம் ஆனது. இது எல்லாருக்கும் தெரியும்.


பெரும்பாலான குலதெய்வங்கள், காவல் தெய்வங்களாகவும் கிராம தேவதைகளாகவுமே இருக்கும். நமக்கும் இப்போது அப்படித்தான் - இப்போது.

என்னிடம் , நேரில் சந்தித்த சிலர் மற்றும் inbox, மூலமாகவும் கேட்டவர்கள் சில சந்தேகங்களை கேட்டனர். என்ன கேள்வி அடிக்கடி வந்ததென்றால் - "அடிப்படையில் நாம் சைவர்களா ? அல்லது வைஷ்ணவர்களா ?



இது நல்ல கேள்விதான் - என்னை பொறுத்தவரை. ரெண்டுமே உண்டு. நாம் பிருகு மஹரிஷி முதலாகத் தோன்றிய காரணம் கொண்டு, மேலும் பாவனரிஷிக்கு தன் தொப்புள் கொடி தாமரைத் தண்டு (பார்க்க - படம்) மூலம் நாராயணன் நூல் கொடுத்து நெசவு செய்யச் சொன்னதாலும் நாம் வைஷ்ணவர்களாகவும், நமது மூதாதையர் மார்க்கண்டேய மஹரிஷி சிவனால் மறு பிறவி கொடுக்கப்பட்டதால் சைவர்களாகவும் தான் இருந்தோம்.

நாம் இன்றைக்கு பல தெய்வங்களையும் நமது குலதெய்வமாக வணங்கி வருகிறோம். அந்த தெய்வ வழிபாடுகள் குறித்து நாம் #சுருக்கமாக பிறகு பார்ப்போம் - வாய்ப்பிருந்தால்.

குல தெய்வம் போக சில வீடுகளில் வீட்டுச்சாமியாக சீலைக்கார சாமி வழிபாடும் உண்டு. அது அந்தந்த வீடுகளுக்கு மட்டும் தனிப்பட்ட வழிபாடு.

சீலைக்கார சாமி பற்றி எல்லோருக்கும் தெரியும் தானே ? ஒரு குடும்பத்தில் சிறு வயதில் காலமான பெண் குழந்தை, ஏதாவது நிறைவேறாத ஆசையுடன், அல்லது உடன்கட்டை முறையில் தெய்வமான பெண் இவர்களின் துணியை வைத்து அவர்களை நினைத்து வழிபடுவது.

நாம் வடக்கில் இருந்தபோது சைவம், வைஷ்ணவம் இரண்டையும் வழிபட்டோம். பிறகு காஞ்சிபுரம் நகரில் குடியிருக்கும் சமயத்தில் நாம் வழிபட்ட அம்மன் பற்றி கேரள சாலியர் பற்றி பேசும்போது பார்த்தோம். நினைவிருக்கிறதல்லவா ? #கடவில்_பகவதி.

அது போக நாம் காஞ்சிபுரத்தில் வழிபட்டது ஒரு விநாயகர். இவரைப் பற்றி ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. (நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே.) அதைப் பற்றி பேசுவோம்.

சாலியர்களும் குலதெய்வங்களும் 1

சாலியர்களின் குல தெய்வங்களை பற்றி பேசுவதற்கு முன்பு மாயவரம் சாலியர்கள் சம்பந்தமான ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு துவங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

காஞ்சிபுரத்திலிருந்து தமிழகத்தின் தென்பகுதியினை நோக்கி நடைபயணமாகக் கிளம்பிய சாலியர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், நாகர்கோயில், சாலியமங்கலம், குத்தாலம் போன்ற ஊர்களுக்குச் சென்றனர். ஒரு பிரிவினர் மாயவரம் வந்து காவிரி ஆற்றின் தென்கரையில் தங்கினர். சிதம்பரத்திற்கு அருகாமையில், புவனகிரி அருகில் உள்ள கீரப்பாளையம் என்ற ஊருக்கு வந்த போது, ஒரு குடும்பத்தினைச் சேர்ந்த பெண்ணிற்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் அக்குடும்பம் மட்டும் அங்கிருந்த தோப்பில் தங்கியதாகவும், சுகப்பிரசவம் ஆனால், ஆண்டுதோறும் வந்து வழிபடுகிறோம் என அங்கு குடி கொண்டிருந்த அய்யனார் சாமியிடம் வேண்டிக் கொண்டனர், அந்தப் பெண்ணிற்கு சுகப்பிரசவம் ஆகிய பின்னர் புறப்பட்டு மாயவரம் வந்து சேர்ந்தனர்.

அக்குடும்ப வம்சாவளியினர் மட்டும் கீரப்பாளையம் அய்யனாரையே தங்கள் குலதெய்வமாக்க் கொண்டு வழிபடுகின்றனர் என்பதோடு, இங்கு சென்று படையல் போட்டு வழிபட்ட பின்னரே தங்கள் குடும்பத்தில் எந்த நல்ல காரியம் என்றாலும் இன்றைக்கும் செய்கின்றனர் என்பதும், ஆண்டுதோறும் அனைத்துக் குடும்பத்தினரும் ஒரு நாளில் காலையில் இக்கோயிலில் ஒன்று கூடி படையல் போட்டு சாமி கும்பிட்டு மாலையில் திரும்பி வருகின்றனர்.



குலதெய்வ வழிபாடு பற்றி ஒரு உதாரணத்திற்கு மேல் சொன்ன சம்பவம். அடிப்படையில் நாம் #வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதை நாம் ஏற்கனவே இங்கு பேசியிருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

அவை நமது சாலியர்களின் பிரிவுகளாக, கோத்திரவாரியாகவும் வரும்.

மணமேடு சாலியரும் , ஏழூர் சாலியரும்

எந்த ஒரு கோத்திர சம்ஸ்காரமுள்ள இனத்திலும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வதில்லை. ஏனெனில் ஒரே கோத்திரத்தார் அனைவரும் சகோதர முறை உள்ளவர்களே.

வட மாநிலங்களில் இருந்து, காஞ்சிபுரத்தில் இருந்த வரை நமக்குள்ளும் நிறைய கோத்திரங்கள் இருந்தது.

பிறகு காஞ்சியிலிருந்து பிரிந்து வந்த நாம் பல்வேறு இடங்களில் குடியிருந்தோம். அதில் மணமேடு, மாயவரத்தில் உள்ள கூரை நாடும் அடங்கும்.

இன்றளவும் மணமேட்டில் குடியிருக்கும் சாலியர்கள் வெவ்வேறு கோத்திரங்கள் கொண்டவர்கள் தான். உதாரணமாக விஸ்வாமித்ரா கோத்திரம், வசிஷ்ட கோத்திரம் , காஷ்யப கோத்திரம் போன்றவை. எனவே பத்ம சாலியர்களின் 101 கோத்திரங்களுடன் இவர்களுக்கு திருமண உறவு உண்டு.

நாம் இங்கு ஏழூரில் குடியேறிய சில காலங்களில் பூணூலை விட்ட பிறகு கோத்திரங்களையும் விட்டோம். சாலிய மஹரிஷி கோத்திரம் நிலைத்து விட்டது. ஒரே கோத்திரத்தார் திருமணம் செய்யக்கூடாதல்லவா ? எனவே ஒரே குலதெய்வம் கொண்டவர்கள் திருமணம் செய்வதில்லை என்று மாற்றப்பட்டது.



எனவே ஏழூர் சாலியர்களுக்கும் மற்றைய சாலியர்களுக்கும் திருமண சம்பந்தம் இல்லை (நாகர்கோவில் தவிர்த்து)

சாலியரும் ஆலயத்திருப்பணியும் 2

கேரள மாநிலம் பலராமபுரம் சாலியர்கள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு தேவையான துணிமணிகள், கொடியேற்றத்துக்கான கொடிக்கயிறு கொடுக்கிறார்கள். இங்கு லட்சதீபம் ஏற்ற திரி கொடுப்பதும் நாமே...

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும், சுசீந்திரம் ஸ்தாணுமாலைய ஸ்வாமி கோவிலுக்கு கொடியேற்ற பட்டாடை கொடுப்பதும் கோட்டார் பட்டசாலியர்களே( பட்டாரியர்).

கன்னியாகுமரி மாவட்ட ஆழ்வார் கோயில் திருவிழாவில் கொடியேற்றத்துக்கான கொடியாடை இரணியல் பட்டசாலியர்கள் கொடுக்கிறார்கள்.

மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்துக்கு அபிஷேக சந்தனம் நிரம்பிய குடத்தை யானைமேல் ஏற்றி மேளதாளத்துடன் கொண்டுபோய் கொடுப்பவர்கள் இரணியல் பன்னிக்கோடு ஊரில் வாழும் பட்டசாலியர்களே.



திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவில் 8
மண்டகப்படி பட்டசாலியர்கள் பொறுப்பாகும்.

சாலியரும் ஆலயத்திருப்பணியும் 1

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கென அவ்வூர் சாலியர்கள் ஒரு தோப்பை எழுதி வைத்துள்ளனர். இன்றளவும் ஆண்டாள் கோவிலுக்கு எழுதிவைக்கப்பட்ட சொத்துகளிலேயே இது தான் பெரியது என்று சொல்லப்படுகிறது. இன்றும் "சாலியன் தோப்பு" என்று அழைக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்ரீ வில்லிப்புத்தூர் மடவார் வளாகம் என்ற சிவஸ்தலத்துக்கு எதிரில் சாலியர்கள் ஒரு பெரிய தெப்பக்குளம் அமைத்து, அதன் நடுவில் 12 கல் கொண்ட மண்டபம் கட்டியுள்ளனர். சில ஆண்டுகள் முன்பு அது தூர்வாரப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.


தை மாதம் இரண்டாம் தேதி ஆண்டாள் திருக்கல்யாணத்துக்காக புடவை சாலியர்களால் கொடுக்கப்படுகிறது. (ஸ்ரீ ஆண்டாள் நம் வீட்டுப்பெண் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்)

நவராத்திரி திருவிழாவுக்காக சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு முளைப்பாரி வைத்து , அம்பு விடும் திருவிழா சுந்தரபாண்டியபுரம் சாலியர்களால் நடத்தப்படுகிறது.

ராஜபாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம் சாலியர்களால் நடத்தப்படும். கொடிக்கான கயிறு கொடுப்பதும் நாமே.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்துக்கு , கொடி ஏற்றத்துக்காக 40 கஜமுள்ள ஒரே புடவை நெய்யப்பட்டு மணமேடு சாலியர்களால் (இவர்களைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டியதுள்ளது. #சொல்லலாமா ?) கொடுக்கப்படுகிறது. இவ்வுற்சவத்தின் 4ஆம் நாள் திருவிழா சாலியர் மண்டகப்படியாக நடத்தப்படும்.

சோழர்கால சாலியர்கள் 2

முற்கால சோழர்களின் தலைநகரமாக பூம்புகாரும் #உறையூரும் இருந்தது. பிற்கால சோழர்களின் தலைநகரமாக தஞ்சாவூர், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவை இருந்தது.

உறையூரில் சாலியர்கள் அரண்மனையின் உள்ளாலைப் பகுதியில் வாழ்ந்தனர். அங்கு நெய்யப்பட்ட புடவைகள் மிகவும் புகழ்பெற்றவையாக விளங்கியது.

உறையூரில் நெய்யப்பட்ட ஒரு முழுப் புடவையையும் ஒரே தேங்காய் மூடியில் அடைத்து விட முடியும் அளவுக்கு மென்மையாக இருந்ததாக சோழர் வரலாறு தெரிவிக்கிறது. (இன்றளவும் பலராமபுரம் வேட்டி, புடவைகள் மேற்படி காரணங்களுக்காகவே புகழ் பெற்றது).இங்கு நெய்யப்பட்ட ஆடைகள் பாம்பின் சட்டை போன்றும், புகை போன்றும், பாலின் ஆவி போன்றும் மென்மையான ஆடைகள் உற்பத்தி யானது குறித்த செய்திகள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன.

உறையூரில் நடந்த அகழ்வாய்வில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட தொட்டிகள் கிடைக்கப்பட்டன. இவை சாயம் நனைக்கும் தொட்டிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இவை கி.பி 2 முதல் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.


சோழர்கள் ஆட்சியில் நில உரிமையும் பொருள் வளமும் கொண்டிருந்த நெசவாளர்கள் சமூக உயர் மதிப்பைப் பெற்றிருந்தனர். முக்கிய நிகழ்வுகளில் சங்கு முழக்கும் உரிமையும் பல்லக்கில் உலா வருவதும் கொடி பிடித்தலும் இக்காலத்தில் உயர் மதிப்பீட்டின் குறியீடுகளாயிருந்தன. இம்மூன்று உரிமைகளையும் சாலியர்கள் பெற்றிருந்தனர். வீடுகளுக்கு வெள்ளையடிக்கவும் இரண்டடுக்கு மாடி கட்டவும், இலச்சினைகள் தாங்கவும் சில வகையான ஆடைகளை அணியவும் உரிமை பெற்று உள்ளனர். இந்த விஷயங்கள் கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளன.

கி.பி 985 இல் முதலாம் ராஜராஜன் அரியணை ஏறினார். அந்த காலகட்டத்தில் பாலாடை போன்ற மென்மையான ஆடைகள் பொது மக்களுக்கும், பட்டாடைகள் மன்னர் குடும்பத்தினருக்கும் சாலியர்கள் நெய்து கொடுத்தனர். தஞ்சை பெரிய கோவிலில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களில் இடம்பெறும் மன்னர் குடும்பத்தினர் கட்டியுள்ள பட்டாடைகள் நமது உழைப்பு என்பது நமக்குப் பெருமை.

வியாழன், 10 நவம்பர், 2016

சோழர்கால சாலியர்கள்





சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள செப்பேடுகளில் முதல் 10 வரிகள் சமஸ்கிருதத்தில், அடுத்த 110 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட விஷயம் :-

கச்சிப்பேடு (காஞ்சிபுரம்) நகரின் சில பகுதிகளான கருவூலம்பாடி, கம்சகப்பாடி, ஆதிமனப்பாடி, எருவேலச்சேரி போன்ற இடங்களில் வாழும் பட்டசாலிய நெசவாளர்கள் 200 தங்க காசுகளை அரசிடம் வைப்பு நிதியாக வைத்துள்ளனர். இதில் இரண்டு பகுதி நெசவாளர்களை உத்தமசோழன் கோவில் மேலாளர்களாக நியமித்திருந்தார்.

ராஜராஜன் காலத்தில் தஞ்சை உள்ளாலை, புறம்பாடி என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. கோட்டையின் உள்ப்பகுதி உள்ளாலை எனவும் வெளிப்பகுதி புறம்பாடி எனவும் அழைக்கப்படும். உள்ளாலைப் பகுதியில் சாலியத்தெரு என்று இருந்தது. என்றால் மன்னரிடம் நமக்கிருந்த மதிப்பு புலனாகும்.

சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக்காலத்தில் நிலவரி, சுங்கவரி போல நெசவுத்தொழில் சம்பந்தப்பட்ட வரிகளும் இருந்தது.

நூலுக்கு சாயமிடும் சாலியக்குடியினர் அத்தோழில் செய்வதற்கு கட்டப்படும் வரி "சாலியக்காணம்" அல்லது "சாலியத்தறி" என்று வழங்கப்படும்.

தறி நெய்யும் சாலியரிடம் தறிக்கு இவ்வளவு காசு என்று வரி விதிக்கப்பட்டது. அவ்வரிக்கு "தறிக்கடமை" எனப்படும்.


சாலியமங்கலம்

சோழ மன்னர்கள் ஆட்சியில் சாலியர்களுக்கு ஒரு தனி இடமிருந்தது. குறிப்பாக மாயவரம் சாலியர்கள்.

தஞ்சை மாவட்டத்தில், நீடாமங்கலம், பாபநாசம் அருகில் இன்னும் நாம் முன்பு வாழ்ந்திருந்த மிச்சமாக #சாலியமங்கலம் என்ற ஊர் உள்ளது.

சோழர்கால சாலியர் பற்றி பின்னர் எழுதலாமா ?

காசர்கோடு சாலியர்

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரம் பேரூராட்சியில் உள்ள "அஞ்சூட்டம்பலம் வீரக்காவு" ( அம்பலம் =கோவில்) என்ற ஆலயத்தில் நம் சாலியர் இனத்தவரால் சித்திரை பூரம் திருவிழா கொண்டாடப் படுகின்றது.

கண்ணூர்



கேரளாவின் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மட்டும் சாலியர்களுக்கு சொந்தமான 22 கோவில்கள் .

மக்கள் தொகை

ஆந்திரா, தெலுங்கானா இணைந்திருந்த போது நமது பத்மசாலியர் தான் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட ஜாதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது மக்கள் தொகை சுமார் #ஒரு_கோடியே_இருபது_லட்சம்.

வியாழன், 3 நவம்பர், 2016

தெரிய வேண்டிய விஷயங்கள் 2



#பாஷை

நாம் வடக்கில் நிறைந்து வாழ்ந்தவர்கள். உத்திரப் பிரதேசம், பீகார், பஞ்சாப் போன்ற இடங்களில். அப்படியானால் நமது தாய் பாஷை ஹிந்தியா ? அல்லது பஞ்சாபியா ?

பிறகு குஜராத்தில் உள்ள சௌராஷ்ட்ர பகுதிகளில் குடியேறினோம். அப்படியானால் நமது பாஷை குஜராத்தி அல்லது சௌராஷ்ட்டிரமா ?
நிற்க. சௌராஷ்ட்ர இனத்தில் இப்போதும் #சாலிய_மஹரிஷி கோத்திரம் உண்டு.

பிறகு தென்னிந்தியாவில் குடியேறினோம். அங்குள்ள தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் போன்றவற்றை கற்றுக் கொண்டோம்.

சரி, பிறகு எதைத்தான் நமது தாய்மொழியாக ஏற்பது.

இருக்கிறது. பல மொழிகளில் பேசுபவராக இருப்பினும், நாம் கடைசியாக தாய்மொழியாக கொண்டது #தெலுங்கு தான். (நினைவிருக்கிறதா ? பத்மாவதி தாயார் பற்றிய நமது பதிவு)

நான் விசாரித்து தெரிந்து கொண்ட வகையில் எல்லோருமே ஒரே கருத்தாக தெரிவிப்பது நான் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதே.

இன்னொரு மூத்த அறிஞர் ஒருவர் சொல்லும் போது "பூணூலும், தெலுங்கும் சாலியருக்கு எப்பொழுதும் சாஸ்வதமானது" என்று உறுதிபடத் தெரிவித்தார். அவர் பெரிய அறிஞரும் கூட.

#பின்குறிப்பு:- தமிழுணர்வாளர்கள் என்னை மன்னிக்கவும். எனக்கும் தெலுங்கு தெரியாது. தாய்மொழி தமிழ்தான்.

தெரிய வேண்டிய விஷயங்கள் 1

#தெரிய_வேண்டிய_விஷயங்கள்_1

ஒவ்வொன்றாக பேசுவோம்....

1. சாலியர்கள் அரை பிராமணர்கள் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாமலிருக்கலாம்.

ஆம். நாம் பாதி பிராமணரே.... அதென்ன பாதி ? வேதம் கற்று ஓத வேண்டும் என்ற கண்டிசன் மட்டும் கிடையாது. எனவே பாதி.

நாம் 3 அல்லது 4 தலைமுறைக்கும் முன் பூணூல் அணிபவர்கள் தெரியுமா ? இப்போதும் சிலர், சில இடங்களில் அணிந்துள்ளார்கள்.

ஏன் அந்தப் பழக்கம் நம்மிடம் விட்டுப்போனது என்பதை அறிவோம். பூணூல் அணிந்த காலத்தில் முன் மண்டையை மழித்து , பின்னால் குடுமி வைக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு ஊர் விசாரணை உண்டு.

பிறகு சினிமா தாக்கம் வந்ததும் குடுமி போய் கிராப் வந்தது. அடுத்து சந்தியா வந்தனம் போன்ற பழக்கம் மறைந்தது.

நாம் சுத்த சைவர்கள். ஆனால் , அசைவ பழக்கமும் ஏற்பட்டது.

#பூணூலும் _போய்விட்டது.

சரி,... இதை மீண்டும் பெற முடியாதா ?
பிராமணராக மாற முடியாதா என்றால் #முடியும் என்பதே பதில்.
அதற்கு சில கண்டிசன்கள் உள்ளது.

கேரள சாலியர்

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரம் பேரூராட்சியில் உள்ள "அஞ்சூட்டம்பலம் வீரக்காவு" ( அம்பலம் =கோவில்) என்ற ஆலயத்தில் நம் சாலியர் இனத்தவரால் சித்திரை பூரம் திருவிழா கொண்டாடப் படுகின்றது.

கேரள சாலியர்

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரம் பேரூராட்சியில் உள்ள "அஞ்சூட்டம்பலம் வீரக்காவு" ( அம்பலம் =கோவில்) என்ற ஆலயத்தில் நம் சாலியர் இனத்தவரால் சித்திரை பூரம் திருவிழா கொண்டாடப் படுகின்றது.