வெள்ளி, 5 ஜனவரி, 2024

சுந்தரபாண்டியம் சாலியர் பொங்கல்

 1.6.2022 புதன்கிழமை சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாரி அம்மன் கோவிலில் மேளதாளம், சப்பரம், முளைப்பாரிகளுடன் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 
- Saliya Maharishi

சத்திரப்பட்டி தெற்குத்தெரு சாலியர்பொங்கல் திருவிழா



                                  சத்திரப்பட்டி தெற்கு தெரு கிழக்கு பகுதியில் அருள் புரிந்து வரும் கண்ணனூர் மாரியம்மன் கோவில் -  உக்ரசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஞாயிறு (17.04.2022) அன்று காலையில் தொடங்கியது. 

          முதல் நிகழ்ச்சியாக,  காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலா வந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்தனர். அன்று மாலையில் அக்னிசட்டி எடுத்து சத்திரப்பட்டி தெருக்களில் அம்மன் அருள் நிறைக்கப்பட்டது. 

               இரவு பக்தர்களுக்காக வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள் வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,  சத்திரப்பட்டி புதுத்தெரு ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவில் அருகில் கொண்டு  சென்று கும்மிப் பாடல்களுடன் கொண்டாடப்பட்டது. (முன்னதாக முந்தைய பத்து நாட்களுக்கு முன்பு முளை தாண்டுதல் நிகழ்ச்சியுடன் முளைப்பாரிகள் வளர்ப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன) 

                  புதுத் தெருவிலிருந்து கரகம் எடுக்கப்பட்டு,  தெற்கு தெரு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்மனின் விக்ரகம் அருகில் வைக்கப்பட்டது. அத்துடன் அன்றைய நாள் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. 

                திங்கட்கிழமை (18.04.2022) காலையில் அக்னிச்சட்டி வீதி உலா வந்தது. மாலை சுமார் 4 மணி அளவில் முளைப்பாரிகள் வீதிகளில் வலம் வந்து துரைமடம் விநாயகர் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பக்தியுடன் கரைக்கப்பட்டன. 

      கரகம் மீண்டும் கோவிலிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு,  புதுத்தெரு பழனி ஆண்டவர் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பக்தியுடன் கரைக்கப்பட்டது.           இரவு அலங்கார சப்பரத்தில் அம்மன் ஊரிலுள்ள அனைத்து தெருக்களிலும் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.  செவ்வாய்க்கிழமை காலையில் சப்பரம் இறக்கியதுடன்  பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.   செவ்வாய்க்கிழமை இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

நன்றி -  புகைப்படங்கள் உதவி:- வஷ்ய கணபதி டீ ஸ்டால் கண்ணன் மற்றும் அம்மன் புகைப்படம் தெற்குத் தெரு அனிதா 

- Saliya Maharishi

பத்மசாலியர் அன்னதானம்

சாலியர்கள் பொதுவாகவே தாங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் அன்னதானத்தை மிகச் சிறப்பாக செய்வது ஆண்டாண்டு காலமாக வழக்கம். இங்கு மட்டுமல்ல, ஆந்திராவிலும் கூட... சென்ற வாரம் அஹோபிலம் சென்ற போது அங்கு அடியேன் எடுத்த புகைப்படம்... 
ஸ்ரீமத் அஹோபில அகில பாரத பத்மஷாலிய நித்ய அன்னதான சத்ர சங்கம்)

சாலியர்களின் பூர்வீக குலதெய்வம்


மேலத்திருமாணிக்கம் அரிய மாணிக்கவல்லித் தாயார். ஏழூர் சாலியர்களின் குலதெய்வம். செப்புப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்ட ஏழூர் சாலியர்களின் குலதெய்வம் இவள். 
எப்படி செல்வது :- மதுரை அருகிலுள்ள கல்லுப்பட்டியில் இருந்து பேரையூர் சென்று, அங்கிருந்து எழுமலை என்ற ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறினால் மேலத்திருமாணிக்கம் என்கிற ஊரை அடையலாம். அங்கு தான் இந்த ஆலயம் உள்ளது. 

பேரையூரில் எழுமலை செல்லும் பேருந்து கிடைக்கவில்லையென்றால், தேனி அல்லது உசிலம்பட்டி செல்லும் வண்டியில் ஏறி, சின்னக் கட்டளை என்கிற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து T.ராமநாதபுரம் செல்லும் பேருந்தில் ஏறினாலும் மேலத்திருமாணிக்கம் என்கிற ஊரை அடையலாம்.

தேவி வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலம். விநாயகர், கருப்பசாமி, காலபைரவர், வராஹி முதலிய தெய்வங்கள் இந்த ஆலயத்தில் பரிவார தேவதைகளாக அருள் புரிகிறார்கள். தாயாருக்கு சிம்ம வாகனம் எதிரிலேயே உள்ளது.

நாயக்கர் ஆட்சிக்கால ஜாதிப்பிரிவுகள்

 
***************************
நாயக்கர் காலத்தில் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என்று இரு பிரிவுகளாகச் சாதிகள் பிரிந்து பூசல் விளைவித்தன. எனினும், நாயக்க மன்னர்கள் இவற்றை வளரவிடவில்லை. நாயக்கர்கள் தெலுங்கு நாட்டிலிருந்து இக்காலத்தில் தமிழகம் வந்து குடியேறினர். கம்மவார். ரெட்டியார். நாயக்கர், தேவாங்கர், கோமுட்டி, சாலியர், நாவிதர் , சக்கிலியர், வண்ணார். ஒட்டர், பிராமணர் ஆகியோர் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்து வந்து இங்குக் குடியேறினர். இக்குடியேற்றங்கள் தமிழர்களால் எதிர்க்கப் படவில்லை. 
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சௌராட்டிரப் பகுதியிலிருந்து சௌராட்டிரர்கள் தமிழகத்தில் குடியேறினர். இவர்களைப் பட்டுநூல்காரர் எனத் தமிழர் குறிப்பிட்டனர். 

ஆதாரம் 

CULTURAL HERITAGE OF TAMIL NADU 

UNIT-III 

Modem Period: Nayaks - Marathas Poligars Nawabs - Art and
Architecture.
Saliya Maharishi

மதுரை சாலியர் சத்திரம்

நமது ஏழூர் சாலியர் சத்திரம் மதுரை மடத்தில் புதிய தொலைபேசி எண் மாற்றப்பட்டுள்ளது. 

கீழ்க்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளலாம். 

0452-4984700

Saliya Maharishi

பட்டீஸ்வரம் ஸ்தல புராணத்தில் சாலிய மகரிஷி

    

          கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் தலத்தில் ராமபிரானை வந்து வணங்கிய மகரிஷிகளுள் சாலியர் என்பவரும் ஒருவர். பட்டுத் தொழில் எனப்படும் நெசவுத் தொழில் செய்து வந்த குலத்தைச் சார்ந்தமையால் இவர் பட்டுச் சாலிய மகரிஷி என அழைக்கப்பட்டார்.

       பட்டு நெசவுத் தொழில் செய்து வருபவர்களுக்கு ஒரு தோஷம் எப்போதுமே இருந்து வந்தது. அதாவது எண்ணற்ற பட்டுப் புழுக்களைக் கொன்று, இந்தத் தொழில் செய்து வருகிறோமே என்கிற தோஷம் தான். தொழில் நிமித்தமாக நெசவாளர்களுக்கு இருக்கும் இந்த தோஷத்தைப் போக்க எண்ணினார் சாலிய மகரிஷி. 

        தமது மூவகையான தோஷங்களையும் போக்கிக் கொண்ட ராமபிரானை பட்டீஸ்வரம் திருத்தலத்தில் தரிசித்தார் சாலிய மகரிஷி. இவரின் பக்தியில் நெகிழ்ந்த ராமன், "மகரிஷியே என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார். 

அதற்கு சாலிய மகரிஷி "பிரபோ... செய்யும் தொழில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை. எம் குலத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் பட்டுப் புழுக்களைக் கொன்று பணி செய்கின்றார்கள். இதைக் கொல்லாமல் இந்த உற்பத்தித் தொழிலைச் செய்ய முடியாது. எனவே, பட்டுப் புழுக்களைக் கொல்வதால் எம் குலப் பெருமக்களுக்கு ஏற்படும் தோஷத்தைத் தாங்கள் போக்கி அருள வேண்டும். தவிர, எம் குல மக்கள் அடிக்கடி வந்து உன்னை வணங்குவதற்கு வசதியாகத் தாங்கள் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும்" என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
       சாலிய மகரிஷியின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராமன் இங்கேயே அருளி நெசவாளர்களின் தோஷத்தைப் போக்கினார் என்பது தல வரலாறு.