செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களின் ருதுசடங்கு

சாலியப் பெண் பருவமடைந்து விட்டால் அவளின் தாய் தந்தையர் முதலில் தாய் மாமனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பிறகு மற்ற உறவினர்களுக்கு சொல்லுவார்கள்.

அன்றைய தினம் மாலையே பெண்ணுக்கு தலைநீர் ஊற்றி நீராட்ட நேரம் குறிக்கப் படும். (இப்போது இரண்டு மூன்று நாட்கள் கழித்து கூட செய்யப்படுகிறது)

தாய்மாமன் சார்பில் பருவமடைந்த பெண்ணுக்குத் தேவையான பொட்டு, கண்ணாடி, பழங்கள், கற்கண்டு முதலான பலகாரங்களை தாம்பாளத்தில் வைத்து தூக்கி வருவார்கள் (அத்தைதான் பெரும்பாலும்).

அன்று மாலை ஒரு சுமங்கலிப் பெண் பருவப் பெண்ணுக்கு நீராட்டுவார் தலையில் தண்ணீர் ஊற்றி. இதற்கு பெரும்பாலும் ராசியான பெண்ணையே செய்யச் சொல்லுவார்கள்.நீராடிய பிறகு பெண்ணை தனியாக வீட்டிலேயே ஒரு பகுதியில் தங்க வைப்பார்கள். அவளுக்கென்று தனியாக பாய், தலையணை, தட்டு கொடுக்கப்படும். வீட்டில் மற்ற பொருட்களை தொட அனுமதி மறுக்கப்படும்.

பருவமடைந்த தினத்திலிருந்து 16 நாட்களில் ஒரு நல்ல நாளாகப் பார்த்து சடங்கு செய்ய முடிவெடுக்கப்படும். சடங்கு நாளில் தாய்மாமா தன் சீராக பெண்ணுக்கு தேவையான சேலை, ரவிக்கை, பலகாரங்கள், ஒப்பனைப் பொருட்கள் முதலிய பொருட்களை தாம்பாளத்தில் வைத்து மேளதாளத்துடன் கொண்டு வருவார்.

தாய்மாமன் வழியில் ஒரு பெண்குழந்தையை மாப்பிள்ளை வேடமிட்டு கல்யாணம் போல் மாலை மாற்றி சடங்கு செய்யப்படும். இதை ஒரு ஐயர் அல்லது குருக்கள் நடத்தி வைப்பார். பிறகு வந்திருக்கும் உறவினர்களுக்கு விருந்து அளிக்கப்படும்.

அனைவரும் குழந்தையை வாழ்த்திவிட்டு சென்று விடுவார்கள். முன்பு பருவமடைந்த பெண்ணை வீட்டுக்கு வெளியில் விடும் பழக்கம் நம் இனத்தில் கிடையாது. படிப்பு நிறுத்தப்படும். இப்போது அப்படி இல்லை.

அடுத்து நமது திருமணச் சடங்களை மாயவரம் உட்பட #ஊர்வாரியாக தனித்தனியாக விரிவாகப் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar