வெள்ளி, 5 ஜனவரி, 2024

தமிழ்நாடு சாலியர் மகாஜன சங்க எழுச்சி மாநாடு



முன்குறிப்பு :- மாநாட்டுக்கு சென்று வந்ததில் என் மனதில் பதிந்த விஷயங்களை முக்கியத்துவம் கொடுத்து என் நினைவிலிருந்து எழுதி இருக்கிறேன்.

       7/3/2021 அன்று மாலை சுமார் 3 மணி அளவில் நாதஸ்வர கச்சேரியுடன் மாநாடு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து நமது இனத்தை சேர்ந்த ஸ்ரீதர்ஷினி உட்பட மூன்று குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு நமது குழந்தைகளின் சிலம்பாட்ட காட்சி மேடையில் நடத்திக் காட்டப்பட்டது. 

        டாக்டர் சுவாமிநாதன் தலைமையில் விழா குழுவினர் மேடையில் வந்து அமர்ந்தனர். தொடர்ந்து திரு. டி.கலசலிங்கம் ஐயா அவர்களின் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டது. குத்து விளக்கு ஏற்றப்பட்டு விழா இனிதே ஆரம்பமானது. தொடர்ந்து ராஜபாளையம் பாடகர் மாடசுவாமி குழுவினரின் "சாலியர் இனத்தினை போற்றிடுவோம்" என்ற பாடல் இசையுடன் பாடப்பட்டது.

        தோப்புப்பட்டி தெரு தலைவர் சிவலிங்கம் மற்றும் ஆசிரியர் ராமகிருஷ்ண பாண்டியன் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். அறிமுக உரையாக டாக்டர் சுவாமிநாதன் இரண்டு நிமிடங்கள் பேசினார். 

         அதைத்தொடர்ந்து சுப்புலாபுரம், ஜக்கம்பட்டி, மயிலாடுதுறை கூறைநாடு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், முகவூர், சுந்தரபாண்டியம், ராமச்சந்திரபுரம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், முசிறி, மணமேடு , திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வந்திருந்த சாலியர் இன முக்கிய பிரமுகர்களுக்கும், தலைவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

           தொடர்ந்து சத்திரப்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் ஞானகுரு அவர்கள், மேடையிலேயே தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். 

             சுப்புலாபுரம் தலைவர் பேசினார் "நமது இனத்தின் சார்பாக புதிய மண்டபம் கட்டுகிறோம்" என்று கூறினார். 

            அதைத் தொடர்ந்து ஜக்கம்பட்டி தலைவர் பேசும்போது "நாடு முழுவதும் இருக்கக்கூடிய நெசவாளர் இனங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்" என்று கூறினார். 

         சென்னை சாலியர் சங்கத்தை சேர்ந்த டாக்டர் விநாயகமூர்த்தி அவர்கள் பேசும்போது, சென்னையில் நம் சாலியர்கள் இனத்தவர் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வருவதையும், சாலியர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு என்று ஒரு திருமணதகவல் மேட்ரிமனி தளம் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதையும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய சாலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதையும், சென்னையில் சாலியர் சங்கத்தை சேர்ந்த, திரு. நாராயணன்(இவர் நமது சாலியர் முகநூல் தளத்தின் அட்மின்), திரு. ஜோதிமணி உள்ளிட்ட பலருடைய பணிகளையும் எடுத்துக் கூறினார். 

           தொடர்ந்து ராஜபாளையத்தை சேர்ந்த குருபாக்கியம், டாக்டர் ஆறுமுகப் பெருமாள், சத்திரப்பட்டி முத்துமணி, சாலியர் மகளிர் அணியைச் சேர்ந்தவர் ஆகியோர் பேசினார்கள். 

              சமுசிகாபுரம் ஊரைச் சார்ந்த அமராவதி ஸ்பின்னிங் மில் உரிமையாளர் திரு. முருகன் அவர்கள், ஒற்றுமை இல்லாமல் போனால் மற்றவர்கள் வந்து ஜெயித்து விடுவார்கள் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்கள். 

             இவர்களை தொடர்ந்து சத்திரப்பட்டியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தவமணி குரு அவர்கள் பேசும்போது " ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்திலிருந்து மானத்தை காத்துக் கொள்வதற்காகவே நாம் இடம்பெயர்ந்து வந்து பல ஊர்களிலும் வாழ்ந்து வருகிறோம். நம்மை சுற்றி இருக்கக் கூடிய மற்றவர்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு, நமக்குத் தேவை ஒற்றுமை. பல இடங்களுக்கும் வேலைக்கு செல்வதால் ஒரு கட்டுப்பாடு என்பது இல்லாமல் போய்விட்டது. பல்வேறு வெளியூர்களில் வாழ்வதால் நமக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதை நீக்க வேண்டும். நமது திருவிழாக்களில் மற்ற ஜாதியினர் வந்து முளைப்பாரி தூக்குகிறார்கள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. இது நமக்கு மட்டுமேயான உரிமை. மேலும் வேறு இனத்தை சேர்ந்தவர்களை கல்யாணம், சடங்குகளுக்கு கூப்பிட வேண்டிய தேவையில்லை. நம் சொந்தங்களே போதும். வேறு ஜாதியினருக்கு கடன் கொடுக்காதீர்கள். திரும்ப வாங்க முடியாது. நமது நிறுவனங்களில் பெரிய பதவிகளில் நம்முடைய இனத்தவர்களை மட்டுமே வேலைக்கு போடுங்கள். ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துங்கள்" என்று ஆணித்தரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் பேசினார். மேலும் வேறு ஜாதிகளில் கலப்புத் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை வேதனையுடன் தெரிவித்தார். 

       ராமச்சந்திராபுரத்தை சொந்த ஊராகக் கொண்டு, தற்போது சின்னமனூரில் ஜவுளி கடை வைத்திருக்கும் திரு. காளிமுத்து அவர்கள் பேசும்போது"நமது இனத்தின் சார்பாக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்தார். அதன்பிறகு யாரும் இல்லை. நாம் அனைவரும் கண்டிப்பாக முயற்சி செய்து ஒரு சட்டமன்ற உறுப்பினரை உருவாக்கியே தீர வேண்டும். மேலும் கலசலிங்கம் ஐயா அவர்கள் இருக்கும்போது, நமது இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு பெரு முயற்சி செய்தார்கள். நாம் அனைவரும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை உருவாக்கி, முயற்சி செய்து அந்தக் கொள்கையில் நாம் வெற்றி காண வேண்டும்" என்று குறிப்பிட்டார். 

           தொடர்ந்து, திருப்பூரை சேர்ந்த தமிழாசிரியர் பாலசுப்பிரமணியம் பேசும்போது "சென்னைக்கு அடுத்தபடியாக நாம் சாலியர் சமூகத்தினர் மிக அதிகமாக கூடி வாழ்ந்து கொண்டிருப்பது திருப்பூரில் தான். தற்போதும் கூட நமது மக்கள் திருப்பூருக்கு தாராளமாக வந்து தொழில் செய்யலாம். வேலைவாய்ப்புகள் பெறலாம். அதற்காக திருப்பூர் சாலியர் சங்கம் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் . சின்னச் சின்ன மனத் தகராறுகளால் ஒற்றுமை போய்விடும். அப்படி இருக்கக் கூடாது " என்று கூறி , திருப்பூரில் சாலியர் இனத்தினர் எந்தெந்த இடத்தில் வாழ்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தெருத்தெருவாக, சந்து சந்தாகப் போய் தகவல் திரட்டிய திரு. ராமசாமி என்பவரை அறிமுகப்படுத்தினார்கள். (அவர் மேடையில் ஏறுவதற்கு மிகவும் கூச்சப்பட்டார்) . 

            இதற்குப் பிறகு இளைஞரணியின் சார்பாக டாக்டர் சுவாமிநாதன் அவர்களுக்கு மலர் கிரீடமும், மலர் மாலையும் அணிவிக்கப்பட்டு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. வீரவாளை டாக்டர் சுவாமிநாதன் அவர்கள், இளைஞரணித் தலைவர் கணேசனிடம் பரிசாகக் கொடுத்தார். 

 மேலும் தோப்புப்பட்டி தெருவின் சார்பாக வெற்றிவேலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. 

              பிறகு இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் திரு கணேசன் பேசினார் "இளைஞரணி பொறுப்பேற்ற பிறகு பல கூட்டங்களில் பங்கேற்றேன். வெற்றிகரமாக செயல் படுவேன். இதுவரை நடந்த விஷயங்களை மறந்து விடுங்கள். அவற்றில் ஏதாவது தவறு இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இனி ஆண்டுக்கு ஒருமுறை மாநாடு கண்டிப்பாக நடத்துவேன் . அடுத்த ஆண்டு இதே தேதியில் கண்டிப்பாக மாநாடு நடத்தப்படும். நமது இனத்தில் பணம் படைத்த அனைத்து இளைஞர்களையும் ஒன்று திரட்டி திரு கலசலிங்கம் அவர்களின் பேரன் சசி ஆனந்த் தலைமையில் ஒருங்கிணைப்பேன். நமது ஜாதியைச் சேர்ந்த சேர்ந்த முதியோர்களுக்கு நாமே நம் இனத்திலிருந்து ஓய்வூதியம் கொடுக்கப்படும். நமது இனத்தை சேர்ந்த ஒரு எம் எல் ஏ மட்டுமல்ல , ஒரு மந்திரியையும் கண்டிப்பாக உருவாக்குவேன்" என்றார் 

            பிறகு டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் "எனது மனைவி 30 சென்ட் நிலத்தை சமுதாயத்துக்கு கொடுத்துவிட்டார். பெண்களுக்கு சீதனமாக பணம் நகை கொடுப்பதைவிட நிலமாக கொடுங்கள். ஆரம்ப காலத்தில் நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை . இப்போது கொஞ்சம் உள்ளது. நாம் அனைவரும் மனித நேயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 1971 ஆண்டு ஐஏஎஸ் பாஸ் பண்ணினேன். பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் தபால் துறையில் வேலை கிடைத்தது . ஆனால் போகவில்லை. அரசியல்வாதி ஒருவரின் ஆலோசனையின் பெயரில் பியூசி படித்து பிறகு டாக்டர் ஆனேன். 

நாம் தவறுகளை தயங்காமல் தட்டிக் கேட்க வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் வாழவேண்டும்" என்றார் . 

            பிறகு மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.(பார்க்க புகைப்படம்)


 மாநாடு நிறைவு பெற்றது.

        அடியேன் Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar