ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

சத்திரப்பட்டி சாலியர் முளைக்கொட்டு திருவிழாவும் அதன் வரலாறும்

 
_________________________
வடக்குத்தெரு செல்வமுளை மாரியம்மன்

 சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து தர்மமும், சத்திரம் அமைத்து அன்னதானமும் ,  செழிப்புற்று இருந்த சத்திரப்பட்டி கிராமத்தில், மாணிக்கவாசகர் என்கிற ஒரு சிறந்த பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் சத்திரப்பட்டியில்  இருக்கின்ற துரைமடம் விநாயகர் கோவிலில் நாள்தோறும் சென்று வணங்காமல் உணவு அருந்தியது இல்லை. 

 அப்படிப்பட்ட சிறந்த  பக்தராகிய மாணிக்கவாசகர் அவர்களின் கனவில் ஒருநாள் அம்பிகை தோன்றி,  தான் ஒரு குறிப்பிட்ட முருங்கை மரத்தில் பாலிகையாக வீற்றிருப்பதாக சொல்லி,  அந்த தன்னுடைய உருவத்தை கனவில் காட்டினார். தன்னை வணங்கும் படியும் கூறினார்.  அந்த குறிப்பிட்ட முருங்கை மரத்தில் பால் வடியும் என்றும்,  அதுவே தான் இருக்கும் மரம் என்றும் அடையாளம்  கூறினார்.

     மறுநாள் அந்த மரத்தை கண்டறிந்த மாணிக்கவாசகர் முருங்கை மரத்திலேயே அம்மனின் குழந்தை வடிவ சிலா ரூபத்தை வடிவமைத்தார்.
 குழந்தை ரூபத்தில் இருக்கும் அம்மன் என்பதால்,  சாலியர்களின் குலத்தொழிலான நெசவுத்தொழில் செய்யும் கைத்தறியில்,  தொட்டில் கட்டி வருடம் முழுவதும் அம்மன் இருப்பார். வருடத்தில் முளைக்கொட்டு திருவிழா கொண்டாடப்படுகின்ற ஐந்து நாட்கள் மட்டுமே நின்ற கோலத்தில் காட்சி தருவார். மாணிக்கவாசகரே அம்மனுக்கு பூஜை முறையையும்,  வழிபாட்டு முறைகளையும் முறைப்படுத்தி வகுத்திருக்கக் கூடும்.

அதுவரை எந்த படிப்பு வாசனையும் இன்றி இருந்த மாணிக்கவாசகர், அம்மனின் அருள் பெற்று பாடல்களை இயற்றும் அளவிற்கு புலமை பெற்றார்.  இன்றளவும் அவர் இயற்றிய கும்மி பாடல்கள் தான் முளைக்கட்டு திருவிழாவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மாணிக்கவாசகரின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இன்றளவும்  வடக்குத் தெருவில் அவருடைய ஜீவ சமாதியும் , ஆலயமும் உள்ளது. 

செல்வ முளைமாரி அம்மன் வேண்டியதை அருளும் கருணைக் கடல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2019ஆம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா

 சுமார் 500 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வரும்  சிறப்பான முளைக்கொட்டு திருவிழா, இந்த ஆண்டு ஆகஸ்டு 4 ஆம் தேதி (ஆடி 19) முளைத் தாண்டுதல் என்கின்ற கொட்டகைக்கு காலூன்றும் நிகழ்வோடு துவங்கியது.

 முளை தாண்டியது  முதல் அனைத்து தெருக்களிலும் தாய்மார்கள்  கும்மியடித்து அம்மனை  போற்றும் நிகழ்வு தினசரி நடைபெற்றது.  மறுநாள் ஆடி இருபதாம் தேதி முளைப்பாரிக்கு என தானியம் ஊற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது . 

      ஆகஸ்ட் 13-ஆம் தேதி (ஆடி 28) செவ்வாய்க் கிழமை முளைக்கொட்டு திருவிழா விமரிசையாக தொடங்கியது.

 அன்று இரவு ஊரின் அனைத்து வீதிகளிலும் 4 தெருக்களின் சப்பரங்கள் வீதி உலா  வந்ததன.  மறுநாள் காலை புதன்கிழமை வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்  வீதிகளில் ஊர்வலம் வந்து,  ஒவ்வொரு தெருக்களிலும் இருந்த கொட்டகைகளில் அம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து பொங்கலிடும் வைபவம் உட்பட பல்வேறு நேர்த்திக்கடன்கள் நமது  இன மக்களால் செலுத்தப்பட்டன. 

அன்று மாலை  மேளதாள வாத்தியங்களுடன் முளைப்பாரிகள் வீதி உலா வந்து,  மாணிக்கவாசகர் நாள்தோறும் வணங்கிய துரைமடம் விநாயகர் கோவில் அருகில் உள்ள பொது கிணற்றில் கரைக்கப்பட்டது. 
அன்று நமது சாலியர் இனத்தின் பெருமைக்குரிய ஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தால் , நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்று இரவு வழக்கம் போல் சப்பரங்களில் அம்மன் வீதி உலா  நடைபெற்றது. 

 மறுநாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி (ஆடி 30) மாலை ஒவ்வொரு தெருக்களிலும் அமைக்கப்பட்ட கொட்டகைகளில் கிளாரிநெட் இசை நிகழ்ச்சிகள்  விமரிசையாக நடைபெற்றது.  நடுத்தெரு கிழக்கு பகுதியில் வரன் தேடும் வைபவம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

 அன்று இரவு சுமார் 9 மணியளவில் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம்,  சங்கரபாண்டியபுரம் 3 ஊர் சாலியர் இளைஞர் பேரவையின் சார்பாக,  நமது சாலியர் இனத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா  நடுத்தெரு விழா கொட்டகையில் நடைபெற்றது . நமது பெருமதிப்புக்குரிய தாசில்தார் உயர்திரு ஆனந்தராஜ் அவர்கள் (ஸ்ரீவில்லிபுத்தூர்) அவர்கள் பரிசளித்து,  குழந்தைகளை கௌரவித்து,  வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்கள்.
 அதை தொடர்ந்து அனறு இரவு 4 சப்பரங்களில் அனைத்து வீதிகளிலும் அம்மன் உலா நடைபெற்றது.  ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி (ஆடி 31)  வெள்ளிக்கிழமை காலையில் சப்பரங்கள் இறக்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது. 

அன்று மாலை அனைத்து தெருக்களிலும்
அமைக்கப்பட்டிருந்த விழா கொட்டகைகளில்,  அம்மனின் ஊஞ்சல் ஆட்டு விழாவும் குத்துவிளக்கு பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.

பின் குறிப்பு சாலியர் மலர் பத்திரிக்கைக்கு நான் எழுதிய கட்டுரையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம். 

 - அடியேன் saliya maharishi gothira saliyar.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar