வியாழன், 19 ஜனவரி, 2017

தறி நெசவின் முழு விபரம்

தறியின்பாகங்கள்

1. விழுது
2. அச்சு
3. நாடா அல்லது ஓடம்
4. அடிமரம்
5. துணியை சுற்றும் கட்டை (ரோலர் கட்டை)
6. கால் மிதி பலகைகள்
7. பாவு நூல்
8. ஊடை நூல்
9. நாடா ஓடும் பலகை அதாவது தண்டவாளம்.இவை மாத்திரமல்ல. வேறு பாகங்களும் உண்டு. ஆனால் இவையே முக்கிய பாகங்கள்.

விழுது:- இது மெல்லிய பாலீஸ் செய்யப்பட்ட கயிறு அல்லது ட்வைன் ஆகும். கீழே இருக்கும் படத்தில் HEDDLES என்ற பாகம். இதன் மத்தியில் கண் போன்ற துளைகள் காணப்படும். பாவின் நூல் இதன் வழியாக முதலில் வரும். அதன் பின் அச்சுக்கு வரும். விழுதானது பண் என்று அழைக்கப்படும். பண் என்ற தமிழ் வேர்ச் சொல்லுக்கு இசையின் காட்ட பயன்படும் வார்த்தையாகும். இங்கு துணியின் வகையை வேறு படுத்தி இப்பெயர். மேலும் மேலிருந்து கீழாக விழுவது போல இருப்பதாலும் இப்பெயர். மேலும் வேதமென்ற சொல்லுக்கும் பண் என்ற மொழிபெயர்ப்பு உண்டு. துணியின் அகலம், அடர்த்தி (நெருக்கம்) இவைகளின் தேவையைப் பொறுத்து இருக்கும்.அச்சு:- அச்சானது இரும்பு கம்பிகளால் ஆனது. பட்டை வடிவ கம்பியை வரிசையில் வைத்தது போல இருக்கும். கீழ்கண்ட படத்தில் REED என்ற பாகம். இதுவும் விழுது போல துணியின் அடர்த்திக்கேற்ப அமையும். விழுதில் இருந்து வரும் பாவு நூல் அச்சின் வழியாக வரும். அச்சு கைபிடிக்கும் மரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்தக் கை மரமே தறியின் முக்கியமான பாகமாக நினைக்கப் படுவதால், இதுவே சில இடங்களில் தறி என்று அழைக்கப்படும். அச்சானது ஊடை நூலை நெருக்குவதற்கும்(கையால் இழுத்து சேர்க்கப்படும்), துணியின் தரத்தை நிர்ணயிக்கவும் பயன்படும்.அடிமரம்:- அச்சு மாட்டப்பட்ட கைமரமே அடிமரம். அதாவது அடிப்படை மரம். எனவேதான் இது தறி என்றழைக்கப்படும். அடிமரத்தை அசைக்கும் போது பாவு நூலானது ஒரு இழை விட்டு ,ஒரு இழையாக இரண்டு பாகங்களாகப் பிரியும். இந்தப் பிரிவுக்கு நடுவில் தான் ஊடை நூலை ஓடம் அதாவது நாடா இழுத்துச் செல்லும். அந்த நூல் முன்பு சொன்னது போல நெருக்கப் படும்.


தறியின் முழு விபரம் 2

காலுக்கு இரண்டு மிதி பலகைகள் இருக்கும். ஒன்றை மிதிக்கையில் முன் சொல்லப் பட்ட படி ஒரு விழுதின் கண்ணில் இணைக்கப்பட்ட பாதி பகுதி நூலானது கீழிறங்கி இன்னொரு பகுதி மேலே ஏறும். இந்த இடைவெளியில் ஒரு முனையிலிருந்து, நாடாவின் வழியாக ஊடை நூல் குறுக்காகப் பயணப்பட்டு அடுத்த முனைக்கு செல்லும். நாடாவில் கிடைமட்டமாக ஒரு ஊசி போன்ற கம்பி இருக்கும். அந்தக் கம்பியில், ஒரு சிறிய குழலில் சுற்றப்பட்ட நூல் இருக்கும். இந்த குழலோடு சேர்ந்த நூலானது தார் எனப்படும். சில இடங்களில் "கண்டு"என்றும் சொல்லப்படும்.

ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு நாடா பயணிக்கும் மரமானது தண்டவாளம் எனப்படும். ஓரத்துக்கு சென்ற நாடா ஒரு பெட்டி மாதிரியான அமைப்பில் சென்று சேரும். அந்தப் பெட்டிக்கு பெட்டிப் பலகை என்று பெயர். இருபுறமும் இருக்கும். பெட்டிப்பலகையில் சேர்ந்த நாடா கை உருளையில் கட்டப்பட்ட கயிற்றினால் இழுக்கப்பட்டு அடுத்த முனைக்கு செல்லும். இதற்கு முன்பே மிதி பலகையின் அடுத்த கால் மிதிக்கப்பட்டு முன் சொன்னபடி நாடா செல்லுமளவு இரண்டு பாகம் பிரிந்த இடைவெளி ஏற்பட்டிருக்கும். இங்கே இரண்டு பாகங்களாக நூல் விழுது மூலம் பிரியும் அமைப்புக்கு "புணி என்று பெயர். இரண்டு புணிகள் மேலொன்றும் கீழொன்றுமாக மாற்றி மாற்றி ஏறி இறங்கும். அப்போது தான் ஊடை நூல் பின்னியதைப் போல இருக்கும்.

இடப்புறமும் வலப்புறமும் சென்ற நாடாவில் இருக்கும் நூல் கைப்பிடியால் இழுக்கப்பட்டு அச்சின் மூலம் நெருக்கப்படும்.

மிதிபலகையும்_புணியும் :-

மிதி பலகைகளை மாற்றி மாற்றி மிதிக்கையில் புணிமேலும் கீழுமாக ஏறி இறங்க விழுதுக்கும் மிதி பலகைக்கும் இடையில் ஒரு உருளை போன்ற சக்கரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக கிணற்றில் நீர் இறைப்பதற்கு ஒரு உருளை பயன்படும் அல்லவா ? அதே அமைப்புதான். அதாவது கயிற்றின் முனையை கையிலிருந்து தளர்த்தும் போது வாளியின் பாரத்தால் உருளை சுழன்று வாளி கிணற்றுக்குள் இறங்கும். நீர் நிரம்பிய உடன் கையில் இருந்த கயிறு இழுக்கப் படும். அப்போது உருளை சுழன்று வாளி மேலே வரும்.

இதே அமைப்புதான். உருளையில் சுற்றப்பட்ட கயிற்றின் புணிகளை ஒரு புணியை வாளி முனையாகவும், இன்னொரு புணியை கயிற்றின் கையிருக்கும் முனையாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாடாவின் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட ஊடை நூல் (ஊடால (கிராமத்து பாஷை) அதாவது இடையில் செல்வதால் ஊடை நூல்)
நெருக்கப்பட்டு துணியாக வளரும். வளர்ந்த துணி ,
துணியை சுற்றும் கட்டையில் (ரோலர்க் கட்டை) சுற்றப்படும். குறிப்பிட்ட கஸங்களில் அல்லது மீட்டர்களில் மையினால் அடையாளம் இட்ட குறி இருக்கும் இடம் வந்ததும் துணி அறுக்கப்படும்.

தறிகளில் இரண்டு வகைகள் உண்டு. மிதிபலகை குழி தோண்டி அதற்குள் வைக்கப்பட்டு இருக்கும். இறங்கி அமர்ந்துதான் நெய்ய வேண்டும். அது குழித்தறி எனப்படும். மற்றதில் எல்லா பாகங்களும் மேலே இருக்கும். ஒரு மேஜை போன்ற இருக்கையில் அமர்ந்து நெய்ய வேண்டும். எனவே இது மேஜைத்தறி என்றும் சில இடங்களில் சப்பரத்தறி என்றும் சொல்லப்படும்.

பின்குறிப்பு :- மேலே சொன்ன விபரங்களை நான் பார்த்ததை எழுத்தில் கொண்டுவர முயற்சி செய்துள்ளேன். முடிந்தவரை படத்திலும் விளக்க முயற்சி செய்துள்ளேன். படிப்பவர்களுக்கு புரியுமா என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. புரிகிறதா என்று தயவுசெய்து கமெண்ட்டில் சொல்லவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar