புதன், 22 ஜனவரி, 2014

சாலியர் வரலாறு 8

சமீபத்தில் சுமார் 400ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று கல்லுப்பட்டி அருகில் உள்ள மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் கிடைத்துள்ளது.மேற்படி பட்டயம் மதுரை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.           

இது குறித்த தினமணி பத்திரிகை செய்தி .-----                                                               மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள மேலத் திருமாணிக்கம் கிராமத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்புப் பட்டயத்தில், சாலியர் குலத்தவரின் வழிபாடு குறித்த தகவல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலத்திருமாணிக்கத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் தனது மூதாதையரால் பாதுகாத்து வரப்பட்ட இந்த செப்புப் பட்டயத்தை, மதுரை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியரிடம் கொடுத்து, அதிலுள்ள விவரங்களைக் கூறுமாறு கேட்டுள்ளார்.

அந்த செப்புப் பட்டயம், 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பேரையூர் அருகே உள்ள அழகியநல்லூரில் சாலியர் குலத்தைச் சேர்ந்தவர்களின் குல தெய்வமான அரிய மாணிக்கவல்லி கோவில் வழிபாடு குறித்து செப்பேடு குறிப்பிடுகிறது என்று அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் அ. பெரியசாமி கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

இந்த கோவில், சதுரகிரி மலையின் வடபுறம் உள்ள ஆற்றங்கரையில் சேரர்களின் கோவிலான திருமாணிக்க சுந்தரேசுவரர் கோவிலுக்கு வடபுறம் உள்ளதாகச் செப்பேடு குறிப்பிடுகிறது.

அரிய மாணிக்கவல்லி கோவில் நிர்வாகியான சைவ குலத்தைச் சேர்ந்த பஞ்சாட்சர தேசிகருக்கு, இப் பட்டயம் எழுதி அளிக்கப்பட்டுள்ளது. இப் பட்டயத்தை மதுரை சொக்கலிங்க பட்டர் மகன் முத்துக்குமாரசாமி பட்டர் எழுதியுள்ளார்.

சாலியர் இன மக்களின் முன்கதை இப் பட்டயத்தில் சொல்லப்பட்டுள்ளது. பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சிபுரத்தில் வசித்த சாலியர்கள், அங்கு ராஜவம்சத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அங்கிருந்து குடிபெயர்ந்த சிலர் பாண்டிய நாடான மதுரையில் குடியேறியதாகவும், அவர்களுக்கு பாண்டிய மன்னன் ஆதரவளித்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அழகியநல்லூரில் குடியிருக்க அனுமதி அளித்ததாகவும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், புத்தூர், ராஜபாளையம், சுந்தரபாண்டியம், சத்திரப்பட்டி, அருப்புக்கோட்டை, சக்கம்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த சாலிய இனத்தவர்கள் 44 பேர் அரிய மாணிக்கவல்லி தாயாரின் வழிபாடு முறை குறித்து முடிவு செய்து கையொப்பமிட்டிருப்பதை செப்புப் பட்டயம் தெரிவிக்கிறது.

சாலியர்களின் குல தெய்வமான அரிய மாணிக்கவல்லிக்கு தினசரி பூஜைகள், ஆண்டு திருவிழா, சிவனிசைக் கட்டளை, ஆனி மாதக் கட்டளை ஆகியவற்றுக்கு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 2 கலிப்பணம், அம்மனுக்கு பூஜை செய்ய குடும்பத்துக்கு தலா ஒரு கலிப்பணமும் வழங்க வேண்டும்.

மேலும், மேற்குறிப்பிட்ட 7 ஊர்களைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றுக்கு 15 பொன் வசூலித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு கொடிப் பரிவட்டம், திருமணப் பட்டு, சதுரகிரி சிவலிங்கத்துக்கு நவராத்திரி கட்டளை செய்ய வேண்டும் என்பதையும் பட்டயம் குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை, சிதம்பரம், கழுகுமலை, மதுரையைச் சேர்ந்த நான்கு மடாதிபதிகள் இந்தக் கட்டளைகளை நடத்தித் தர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பட்டயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலியர் இன மக்களுக்கு எழுதப்பட்ட இந்த செப்பேடு தமிழக வரலாற்றுக்குப் பல புதிய செய்திகளைத் தந்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar