ஞாயிறு, 23 அக்டோபர், 2016

கேரள சாலியர்கள் 3

திருவனந்தபுரத்துக்கும் நெய்யாற்றின்கரைக்கும் இடையில் உள்ள பலராமபுரம் சாலியர்கள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபற துணிகள், கொடிக்கயிறு போன்றவற்றை கொடுப்பது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.

மேலும் அங்கு லட்சதீபம் ஏற்ற எண்ணெயை செட்டிகளும், விளக்குக்கான திரியை சாலியர்களும் கொடுக்கிறார்கள்.

பலராமபுரம் அகஸ்தியர் கோவிலில் பங்குனி மாதம் 10 நாள் திருவிழா சாலியர்களால் நடத்தப்படும்.


சனி, 22 அக்டோபர், 2016

கேரள சாலியர்கள் 2




கேரளத்தின் கடவில் பகவதி ஆலய வரலாறு சாலியர்களைப் பற்றி பேசுகிறது.

கங்கை கரையில் உள்ள காசி நகரத்திலிருந்து சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் திரிப்தா ஆண்டு பஞ்சத்தால் மக்கள் தெற்கு நோக்கி வந்தனர். (ஆக நமது பூர்வீகம் வட இந்தியா என்பது ஊர்ஜிதம் ஆகிறது) அதில் பிரிவு பிரிவாக குஜராத், பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா பகுதிகளில் குடியேறினர். அந்தந்த பகுதி மொழியே நம் தாய் மொழி ஆயிற்று.

ஆந்திராவில் இருந்து புறப்பட்டு சில ஆண்டுகள் கழித்து நம் மக்கள் சென்னையை உருவாக்கியதும் முன்பு பார்த்தோம் அல்லவா ?
பிறகு காஞ்சிபுரத்தில் குடியேறினர்.

விஜயநகரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், ராஜமுந்திரி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை சோழநாராயணன் பட் என்பவர் ஆட்சி செய்தார். இவர் சேர வம்சாவழி அரசர். நம்பூதிரிகள் ஆலோசனைப்படி அவர் சிறந்த வைபவங்களில் அணியத்தக்க ஆடைகளை நெய்வதற்காக காஞ்சியிலிருந்து சாலியர்களை அழைத்து வந்து கேரளாவில் குடியமத்தினார்.

முன்னதாக கொஞ்சம் சாலியர்கள் மாயவரத்திலிருந்து கேரளாவின் பிற பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.

காஞ்சிபுரத்தில் சாலியர்கள் ஒவ்வொரு பிரிவாக வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அதில் மன்னர் சோழநாராயணன் பட் மூலம் கேரளாவில் குடியேற்றப்பட்ட சாலியர்கள் தங்கள் வழிபட்ட தேவி (மகாலட்சுமி) சிலையை கடலில் போட்டுவிட்டனர்.


பிறகு கேரளாவின் கொச்சின் பகுதியில் குடியேறிய சாலியர்கள், பட்டாரியர் என்றழைக்கப்பட்டனர். அதற்கு வடபுரத்தில் (கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு) சாலியர் எனவும், தென்புறத்தில் (திருவாங்கூர்) தேவாங்கர் எனவும் அழைக்கப்பட்டனர்.

கடலில் போடப்பட்ட தேவி மகாலட்சுமிக்கு கோவில் எழுப்ப கொச்சின் சாலியர்கள் முயன்ற சமயத்தில் பள்ளிபுரம் கடலில் இருந்து முதலையால் (மகாலட்சுமி வாகனம்) தேவியின் சிலை கரையேற்றப்பட்டது. அந்த இடம் இன்றும் புனித இடமாக கருதப்பட்டு பராமரிக்கப் படுகிறது.

பிறகு ஆழப்புழாவின் சேர்த்தலை பகுதியில் கடவில் பகவதி மகாலட்சுமி கோவில் எழுப்பப்பட்டது. முதலை சிலையும் வைக்கப்பட்டு இருக்கிறது.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

கேரள சாலியர்கள்

கேரளாவில் கண்ணூர், இரிஞ்ஞாலக்குடா, காசர்கோடு பகுதிகளில் சாலியர்கள், தமிழகத்தின் மாயவரத்திலிருந்து மன்னர் சேரமான் பெருமாள் காலத்தில் குடியேறினார்கள்.
இன்றளவும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

கி.பி 1810 ஆம் ஆண்டு உம்மினித்தம்பி என்பவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த போது திருவனந்தபுரத்துக்கும், நெய்யாற்றின்கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் குடியேறினர். திருவிதாங்கூர் மன்னரின் நினைவாக (பலராமவர்மா)அவ்வூர் பலராமபுரம் என்ற பெயரில் இப்போதும் அழைக்கப்படுகிறது.

இங்குள்ள சாலியர்கள் நெய்யும் ஆடைகள் இப்போதும் புகழ்பெற்றவை ஆகும்.

கி.பி 1835 இல் மன்னர் சேரமான் பதவியேற்ற போது சாலியர்கள் (*பட்டாரியர்கள்*)நெய்து கொடுத்த பட்டாடையால் மகிழ்ந்த மன்னன் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் காலை பூஜையின் பிரசாதம் இவர்களுக்கே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.



#அனுபந்தம் :- *பட்டாரியர்* என்பதும் சாலியரே ஆகும். இன்னொரு பிரிவாக இதைக்கொள்ளலாம். பெயர் எப்படி வந்ததென்றால் பட்டு சாலியர் - பட்ட சாலியர் = பட்டாரியர் என திரிந்து அல்லது மருவி வந்தது.

அரசாங்க கெஸட்டுகளில் இப்போதும்
சாலியர்
பட்டாரியர்
கைக்கோளர் என்றே கூறப்படும்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

சாலிய மஹரிஷி (பிற்சேர்க்கை)

நல்லாடை தல புராணம் சாலியர்களைப் பற்றியும், சாலிய மஹரிஷி பற்றியும் பேசுகிறது.

மிருகண்டு மகரிஷி (நினைவிருக்கிறதா?)இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார்.



விசாக மஹரிஷி என்ற ரிஷியின் சிஷ்யராக ஒருவர் இருந்தார். அவரே பிறகு சாலிய மஹரிஷி என்றழைக்கப்பட்டார்.

சாலிய மஹரிஷிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்குப் பிறந்த வம்சாவழியினர் சாலியர் எனவும், இரண்டாம் மனைவிக்கு பிறந்த வம்சாவழியினர் மொட்டை சாலியர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மாயவரம் கூரைநாடு (கொரநாடு) பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் நெய்யும் திருமணத்துக்கான புடவை (கூரைப் புடவை) மிகவும் பிரபலமானது.

சாலிய மஹரிஷியின் முதல் மனைவியின் வம்சாவழியினர் தங்களது கோத்திரமாக சாலிய மஹரிஷி கோத்திரத்தை கொண்டுள்ளனர்.

#அனுபந்தம்:- கூரைநாட்டிலுள்ள புணுகீஸ்வரர் கோவிலில் நமது இனத்தவரான நேச நாயனாருக்கு தனிச் சன்னிதி இருப்பதுவும், அவருக்கு குருபூசை நடத்துவது பற்றியும் ஏற்கனவே நேச நாயனார் பற்றிய பதிவில் பார்த்தோமல்லவா ? அதை இவ்விடத்தில் ஒருமுறை படித்துக்கொள்ளவும்.


பிற்சேர்க்கை:- நல்லாடை ஸ்தலம் நாகப்பட்டினம் அருகில் உள்ளது. அக்னீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும். இது பரணி நட்சத்திர கோவில் ஆகும்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

சாலியரும் சென்னையும்

சாலியர்கள் வடக்கிலிருந்து காஞ்சியில் வந்து குடியேறியது நமக்கெல்லாம் தெரிந்ததே.

அதற்கும் முன்பாக தமிழகத்தில் ஓரிடத்தில் குடியிருந்தனர். அங்கு தறி பூட்டி நெசவு செய்தனர்.
அப்படி அவர்கள் குடியேறி தறி நெசவு செய்த இடம் "சின்னத் தறிப் பேட்டை" என்று அழைக்கப்பட்ட இன்றைய "சிந்தாதிரிப்பேட்டை" ஆகும்.



நாம் குடியேறிய பிறகே, சென்னை நகரம் உருவானது.

#ஆதாரம் :- சென்னை மாநகர கெஸட்.

சனி, 15 அக்டோபர், 2016

சாலியரும் அர்ச்சனையும்

தென் மாவட்டங்களில் கிடையாது. ஆனால் காஞ்சி, ஸ்ரீ காளஹஸ்தி, திருப்பதியில் உள்ள பாபநாசம் போன்ற கோவில்களில் எல்லாம் அர்ச்சனை செய்யும் போது கோத்திரம் கண்டிப்பாக கேட்கிறார்கள். சொல்லாவிட்டால் விட்டு விடுவார்கள்.

அர்ச்சனையோ, நேர்ச்சையோ அல்லது ஹோம காரியங்களோ செய்யும்போது கண்டிப்பாக கோத்திரம் சொல்லித்தான் செய்ய வேண்டும். பிறகுதான் நட்சத்திரம், பெயர் எல்லாம்.

ஏனெனில் நமது குல முதல்வரின் பெயரை கூறாமல் செய்யும் வேண்டுதல்கள், ஹோமங்கள், அர்ச்சனைகள் பூர்த்தியாகாது. மேலும் இவ்வாறு கோத்திரம் சொல்லாது போனால் குல முதல்வரும் கோபமைடைவார்.


எனவே, சாலிய மகரிஷி கோத்திரம் என்று நமது கோத்திரத்தை சொல்லி நமது வேண்டுதல்களை செய்வோம். சாலிய மஹரிஷியின் ஆசீர்வாதத்தையும் பெறுவோம்.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

பத்மாவதி தாயாரும் - சாலியரும்

முன்னதாக சாலியர், பத்மசாலியர் தோற்றம் என்ற பதிவில் நம் குல பிருகு மஹரிஷியின் மகளான லக்ஷ்மிதேவியை பகவான் நாராயணன் மணந்ததைப் பற்றி எழுதியது உங்களுக்கு நினைவிருக்கும். அதன் அனுபந்தம் இப்பதிவு.

கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக இருக்கும் எம்பெருமான் ஸ்ரீ வெங்கடேஷ்வர ஸ்வாமியின் துணைவியான திருச்சானூர் பத்மாவதித் தாயார் பத்மசாலியர் பரம்பரையில் தோன்றியவரே. இவரே மகாலக்ஷ்மியின் அவதாரம். இதற்கான ஆதாரம் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்தல புராணங்களிலும், தாள்ளப்பாக்கம் அன்னமாச்சாரியார் பரம்பரை வரலாற்றிலும் காணக் கிடைக்கிறது.


இன்றளவும் ஆந்திரா, கர்நாடக, தமிழ்நாடு பத்ம சாலியர்களின் குலதெய்வம் பத்மாவதி தாயாரே. முதல் வழிபாடு இவருகும், பாவனரிஷிக்கும்(நினைவிருக்கிறதா ?).

பத்மாவதித்தாயாரின் கோவிலை திருச்சானூரில் பத்ம சாலியரே கட்டியதாக சொல்லப் படுகிறது.

ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் இன்றளவும் பத்ம சாலியர்கள், பத்ம ப்ராமிண் (பத்ம பிராமணர்) என்றே அழைக்கப்படுகின்றனர்.

எனவே நமது குலதெய்வமான ஸ்ரீ பத்மாவதி தாயாரை வணங்கி அருள் பெறுவோம்.