நல்லாடை தல புராணம் சாலியர்களைப் பற்றியும், சாலிய மஹரிஷி பற்றியும் பேசுகிறது.
மிருகண்டு மகரிஷி (நினைவிருக்கிறதா?)இத்தல இறைவனுக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இந்தயாகத்திற்கான பொருள்களை மக்களே வழங்கலாம் என்று அறிவித்தார். மக்கள், தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அவற்றில் ஒன்றை இறைவனுக்கும், ஒன்றை மிருகண்ட மகரிஷிக்கும், இன்னொன்றை தங்கள் மன்னனுக்கும் வழங்கினார்கள். யாகமுடிவில், இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு கொடுத்ததையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டு விட்டார். நெருப்பில் போட்டபட்டாடைகள் இறைவனை அடைந்து விடுமா என்று மக்கள் மகரிஷியிடம் சந்தேகம் எழுப்பினர். நீங்கள் மூலஸ்தானத்தில் சென்று பாருங்கள், விபரம் புரியும், என்றார். மக்கள் ஆர்வமாக கோயிலுக்குள் சென்று மூலஸ்தானத்தைப் பார்த்தனர். அங்கிருந்த சிவலிங்கத்தின் மேல், யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் போர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இவை எப்படி அங்கு வந்தன? என்று மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.மகரிஷி மக்களிடம், அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒரு வகையாகும். அந்த அக்னியே இறைவனுக்கு நாம்இடும் பொருட்களைஅவரிடம் கொண்டு சேர்க்கிறது, என்றார்.
விசாக மஹரிஷி என்ற ரிஷியின் சிஷ்யராக ஒருவர் இருந்தார். அவரே பிறகு சாலிய மஹரிஷி என்றழைக்கப்பட்டார்.
சாலிய மஹரிஷிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்குப் பிறந்த வம்சாவழியினர் சாலியர் எனவும், இரண்டாம் மனைவிக்கு பிறந்த வம்சாவழியினர் மொட்டை சாலியர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மாயவரம் கூரைநாடு (கொரநாடு) பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் நெய்யும் திருமணத்துக்கான புடவை (கூரைப் புடவை) மிகவும் பிரபலமானது.
சாலிய மஹரிஷியின் முதல் மனைவியின் வம்சாவழியினர் தங்களது கோத்திரமாக சாலிய மஹரிஷி கோத்திரத்தை கொண்டுள்ளனர்.
#அனுபந்தம்:- கூரைநாட்டிலுள்ள புணுகீஸ்வரர் கோவிலில் நமது இனத்தவரான நேச நாயனாருக்கு தனிச் சன்னிதி இருப்பதுவும், அவருக்கு குருபூசை நடத்துவது பற்றியும் ஏற்கனவே நேச நாயனார் பற்றிய பதிவில் பார்த்தோமல்லவா ? அதை இவ்விடத்தில் ஒருமுறை படித்துக்கொள்ளவும்.
பிற்சேர்க்கை:- நல்லாடை ஸ்தலம் நாகப்பட்டினம் அருகில் உள்ளது. அக்னீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும். இது பரணி நட்சத்திர கோவில் ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar