வெள்ளி, 5 ஜனவரி, 2024

பட்டீஸ்வரம் ஸ்தல புராணத்தில் சாலிய மகரிஷி

    

          கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் தலத்தில் ராமபிரானை வந்து வணங்கிய மகரிஷிகளுள் சாலியர் என்பவரும் ஒருவர். பட்டுத் தொழில் எனப்படும் நெசவுத் தொழில் செய்து வந்த குலத்தைச் சார்ந்தமையால் இவர் பட்டுச் சாலிய மகரிஷி என அழைக்கப்பட்டார்.

       பட்டு நெசவுத் தொழில் செய்து வருபவர்களுக்கு ஒரு தோஷம் எப்போதுமே இருந்து வந்தது. அதாவது எண்ணற்ற பட்டுப் புழுக்களைக் கொன்று, இந்தத் தொழில் செய்து வருகிறோமே என்கிற தோஷம் தான். தொழில் நிமித்தமாக நெசவாளர்களுக்கு இருக்கும் இந்த தோஷத்தைப் போக்க எண்ணினார் சாலிய மகரிஷி. 

        தமது மூவகையான தோஷங்களையும் போக்கிக் கொண்ட ராமபிரானை பட்டீஸ்வரம் திருத்தலத்தில் தரிசித்தார் சாலிய மகரிஷி. இவரின் பக்தியில் நெகிழ்ந்த ராமன், "மகரிஷியே என்ன வரம் வேண்டும்" என்று கேட்டார். 

அதற்கு சாலிய மகரிஷி "பிரபோ... செய்யும் தொழில் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நிகர் இல்லை. எம் குலத்தைச் சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தம் பட்டுப் புழுக்களைக் கொன்று பணி செய்கின்றார்கள். இதைக் கொல்லாமல் இந்த உற்பத்தித் தொழிலைச் செய்ய முடியாது. எனவே, பட்டுப் புழுக்களைக் கொல்வதால் எம் குலப் பெருமக்களுக்கு ஏற்படும் தோஷத்தைத் தாங்கள் போக்கி அருள வேண்டும். தவிர, எம் குல மக்கள் அடிக்கடி வந்து உன்னை வணங்குவதற்கு வசதியாகத் தாங்கள் இங்கேயே கோயில் கொள்ள வேண்டும்" என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
       சாலிய மகரிஷியின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ராமன் இங்கேயே அருளி நெசவாளர்களின் தோஷத்தைப் போக்கினார் என்பது தல வரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar