மதுரையை அரசாளும் ஸ்ரீமீனாட்சி தேவி, பாண்டிய மன்னனின் மகளாகப் பிறந்து வளர்ந்த காலம்... இவளின் அண்ணன்மார்களாக கோச்சடை முத்தையாவும் கருப்பசாமியும் மானிடப் பிறவி எடுத்து வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், சகோதரிக்குத் திருமணம் என்பதை அறிந்த இந்த சகோதரர்கள், அவளது திருமணத்தை முன்னின்று நடத்த விரும்பினர். எனவே, பாண்டியன் கோட்டைக்குக் காவலாளிகளாக வேலைக்குச் சேர்ந்தனர். மீனாட்சிதேவியின் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியில், கோச்சடை முத்தையா மதுரையிலேயே தங்கி விட்டார். கருப்பசாமி தன் குதிரையில் ஏறி, தெற்கு நோக்கிப் பயணித்தார்!
வழியில், (மதுரையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இருக்கும் டி.சுப்புலாபுரத்தை நெருங்கியபோது) கருப்பசாமிக்கு தாகம் எடுத்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். அருகிலிருந்த கிணற்றில் (ஆசாரி குலத்தைச் சேர்ந்த) அழகிய பெண் ஒருத்தி தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவளிடம் சென்று குடிக்கத் தண்ணீர் கேட் டார். தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்த அந்தப் பெண்,
கருப்பசாமியை வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்துக் கொண்டே நின்றாள். கையில் இருந்த வாளி கிணறில் விழுவதைக்கூட அவள் உணரவில்லை! ஆனால்... கருப்பசாமி தனது சக்தியால், அந்த வாளியை அந்தரத்தில் அப்படியே நிறுத்தி
வைத்தார். இதைப் பார்த்து அந்தப் பெண் ஆச்சரியம் அடைந்தாள்.
''இனி, ஒரு கணம் கூட உங்களைப் பிரிந்து இருக்க முடியாது. என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்'' என்று கருப்பசாமியிடம் வேண்டினாள்.அதற்கு, ''நானொரு நாடோடி; திக்கு- திசையின்றி ஓடிக் கொண்டிருப்பவன். என்னைத் தொடர்ந்து உன்னால் வர முடியாது'' என்று கூறிவிட்டு, குதிரையைக் கிளப்பினார் கருப்பசாமி.
ஆனால், தன் நிலையில் இருந்து சற்றும் மாறாத அந்தப் பெண், கருப்பசாமியைப் பின்தொடர்ந்து ஓடினாள். இதில் நெகிழ்ந்து போன கருப்பசாமி, அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார். கூடவே, அந்தப் பெண் ஆசையுடன் வளர்த்த நாயும் ஓடியது. சிறிது நேரத்திலேயே, இந்த விஷயம் ஊர் முழுக்கப் பரவியது. அந்தப் பெண்ணின் அண்ணன்மார் ஏழு பேரும், தங்கையை அபகரித்துச் சென்ற கருப்பசாமியைக் காவு வாங்குவதற்காக ஆவேசத்துடன் குதிரையில் ஏறிப் புறப்பட்டனர்.
இதையறிந்த கருப்பசாமியும் அந்தப் பெண்ணும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலையடிவாரத்தில் மாவூத்தில் உள்ள உதயகிரிநாதரிடம் சென்று அடைக்கலம் கேட்டனர். அவர், மலை மீது வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கத்திடம் சென்று சரணடையும்படி பணித்தார்.
அதன்படி இருவரும் சுந்தர மகாலிங்கத்திடம் சென்றனர். அவரோ, ''நீங்கள் இங்கெல்லாம் இருக்க முடியாது. காலாங்கரையில் உள்ள அம்மச்சி அம்மனிடம் செல்லுங்கள். அவள் அடைக்கலம் தருவாள்'' என்று அருளினார். இதையடுத்து இருவரும் அம்மச்சி அம்மன் முன்னே நின்றனர். அவள், ''என் தங்கையான வயக்காட்டு அம்மனைப் போய் பாருங்கள்'' என்றாள். இருவரும் வயக்காட்டு அம்மனிடம் சென்றனர்.
''நீங்கள் இருவரும் என் பார்வையில் உள்ள நத்தக்கூர் மேட்டுக்குச் சென்று தங்குங்கள். எவராலும் உங்களை நெருங்க முடியாது!'' என்றாள் வயக்காட்டு அம்மன்.
மகிழ்ச்சியடைந்த இருவரும் நம்பிக்கையுடன் நத்தக்கூர் மேட்டுக்குச் சென்று தங்கினர். ஆனால், இவர் களுடன் வந்த நாய்... வழியில், திசைமாறி வேறு எங்கோ சென்று விட்டது!
இந்த நிலையில்... அந்தப் பெண்ணின் அண்ணன்மார் ஏழு பேரும் ஊர் ஊராகச் சென்று தங்கள் தங்கையைத் தேடி வந்தனர். ஓரிடத்தில்... தங்கை ஆசையாக வளர்த்த நாய், காட்டுக்குள் இருந்து ஓடிவருவதைக் கண்டனர். நாயைப் பின்தொடர்ந்து, கருப்பசாமி தங்கியிருந்த நத்தக்கூர் மேட்டை வந்தடைந்தனர்.
அவர்கள் ஆக்ரோஷத்துடன் வருவதைக் கண்ட கருப்பசாமி, 'சண்டையைத் தவிர வேறு வழியில்லை!' என்பதை உணர்ந்தார். கையில் வாளைத் தூக்கினார். இதையடுத்து நடந்த சண்டையில், சகோதரர்கள் ஏழு பேரும் கருப்பசாமியின் வாளுக்கு பலியானார்கள். தன் கண் முன்னே சகோதரர்கள் இறந்ததைக் கண்டு, துடிதுடித்துப் போன அந்தப் பெண், தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாள்.
இதைக் கண்டு கருப்பசாமி கலங்கினார். 'இவளுக்காகத்தானே இவர்களைக் கொன்றோம். கடைசியில் இவளே நம்மை விட்டுப் போய்விட்டாளே!' என்று கதறியவர், தனது வாளைத் தரையில் ஊன்றி, அதில் பாய்ந்து தன் னையே மாய்த்துக் கொண்டார்.
சிறிது நேரத்திலேயே, அங்கு பிணந்தின்னி கழுகுகள் வட்டமடித்தன. இதையடுத்து ஊரே திரண்டு நத்தக்கூர் மேட்டுக்கு வந்தது. அங்கு... கோரமான நிலையில், ஒன்பது பேர் செத்துக் கிடந்ததைப் பார்த்து, மொத்த கிராமமே கதறி அழுதது. கிராமத்தாரே பிணங்களை எடுத்துச் சென்று எரியூட்டினர்.
அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த... பிறவியிலேயே பேச முடியாத ஐந்து வயதுச் சிறுமி ஒருத்திக்கு அருள் வந்தது. முதல் முறையாக வாய் விட்டுப் பேசியவள், கருப்ப சாமி மற்றும் அவருடன் வந்த பெண்ணின் பூர்வீகத்தை விவரித்தாள். அத்துடன், ''நானும் (கருப்ப சாமி) கம்மாளச்சி அம்மனும் இங்குதான் குடியிருக்கிறோம். நீங்கள், இதே இடத்தில் எங்களுக்குப் பிடிமண் எடுத்து வைத்து கோயில் கட்டுங்கள்; ஆண்டுக்கு ஒரு முறை எங்களை வழிபடுங்கள். எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஊரையும் மக்களையும் செழிப்புறச் செய்கிறோம்'' என்றாள்.
பிறவியில் இருந்தே பேசும் சக்தியற்ற சிறுமி பேசுவதைக் கண்டு பிரமித்த ஊர்மக்கள், அவளது அருள்வாக்கைக் கேட்டு மெய் சிலிர்த்தனர். கிராம முக்கியஸ்தர்களான நல்லாம்பிள்ளை தேவரும் கண்டியத் தேவரும் இணைந்து, கருப்பசாமிக்கும் கம்மாளச்சி அம்மனுக்கும் சிறியதாகக் கோயில் ஒன்று எழுப்பி, வழிபடத் துவங்கினர்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலுக்கு வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது மாத்தூர் கிராமம். இதன் வடக்கு எல்லையில் இருக்கிறது நத்தக்கூர்மேடு. ஊருக்கு ஒதுக்குப்புறமாக... கண்மாய்க் கரையில், தென்னந்தோப்புக்கு மத்தியில் உள்ளது மாத்தூர் கருப்பசாமி கோயில்.
கருவறையில் தலையில் உருமா (தலைப்பாகை) கட்டிக் கொண்டு கம்பீரமாக நிற்கிறார் கருப்பசாமி. இவருக்கு வலப் புறம் கம்மாளச்சி அம்மன். கோயிலைச் சுற்றி ஐந்து இடங்களில் பலிபீடங்கள் உள்ளன. கோயிலின் முகப்பில் நல்லாம்பிள்ளைத் தேவர், கண்டியத் தேவர் ஆகிய இருவருக்கும் ஒரு சேர அமைந்த சிலைகள் இருக்கின்றன. கருப்பருக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும்போது இவர்களுக்கும் பூஜை உண்டு.
சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், பட்டியக்கல் முதலிய ஊர் சாலியர்களில் ஒரு தாயாதிமார்கள் மாத்தூர் கருப்பசாமியைக் குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.
இவர்தான் என் குலதெய்வம்🙏🙏🙏
Saliya Maharishi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar