புதன், 3 மே, 2017

நெசவும் நெசவாளரும்

இன்று தேவைக்காகவும் , பேராசைக்காகவும் போராடுவது, போராடுவது போல் நடிப்பது ஒரு விதமான நாகரிகம் ஆகிவிட்டது.

ஆனால், நூற்றாண்டு காலமாக கடினமாக உழைத்துக் கொண்டும், தங்கள் வாழ்க்கையை மிகவும் கடினமாக நடத்திவரும் சமூகம் நெசவாளர் சமூகம் ஆகும்.

தொழிலில் பல வகையான இடைஞ்சல்கள்... முக்கியமாக வருடத்தின் மழை, குளிர் காலங்களில் நெசவு செய்வது எவ்வளவு கடினம் என்பது நெய்பவர்களைக் கேட்டால் தான் தெரியும்.

உடல் உழைப்பும் எளிதாக பிரயோகிக்கும் அளவில் இருக்காது. கடினமாகவும் அதே நேரத்தில் மிகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டியது. ஏனென்றால் கடினமாக பலத்தை பிரயோகித்து நடந்துகொண்டால், நூல் கூட மொத்தமாக அறுந்துவிட வாய்ப்பு உள்ளது.

தொழில் நிரந்தரமாக கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை... ஏதோ அரசு கொடுக்கும் இலவச வேஷ்டி சேலை சமீபத்தில் தொழிலை சிறிது காப்பாற்றி வருகிறது.

சரி, கூலி போதுமான அளவு கிடைக்குமா என்றால்... சொன்னால் வெட்கக் கேடு. நாள் முழுதும் கடின உடலுழைப்புக்கு பிறகு கிடைப்பது வயிற்று பசிக்கு மட்டுமான அளவே...
அதில் சேமிப்பதோ, குழந்தைகளை உயர்ந்த கல்விக் கூடங்களில் படிக்க வைப்பதோ குதிரைக் கொம்பு போல.

நெசவாளரின் இறுதிக்காலம்

மிக மிக சிரமம் என்றால் நெசவாளரின் இறுதிக் காலமே... வாழும் நாளில் அதிக பாடுபட்டும் கைகளில் சேமிப்பு இல்லாத நிலை. இப்போது ஒரு 1000 ரூபாய் வருவதாக சொல்கிறார்கள் - பென்ஷனாக. (போதுமா ஒரு குடும்பத்துக்கு) சாப்பாட்டுக்கும் வறுமை. வயதான காலத்தில் வரும் உடல் உபாதைகளுக்கு வைத்தியமும் செய்து கொள்ள முடியாத சூழ்நிலை.

என்னதான் செய்ய??? அரசாங்கம் ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும். கடனாக அல்ல.. உழைப்புக்கு பலனாக!!!

போலி விவசாய பண்ணையார்களுக்கு உதவியும் செய்து கடனும் தள்ளுபடி செய்வதை விட எங்களுக்கு உதவலாம்.

உலகத்துக்கே உடை கொடுத்து மானம் காத்தவர்கள் நாங்கள். கௌரவமாக உழைத்து பிழைக்க வழிவகை செய்ய வேண்டும்.

நெசவாளரைக் காப்பாற்றுங்கள்

கேரள சாலியர்

கோழிக்கோடு மாவட்டம் கண்ணஞ்சேரி என்ற ஊரில் உள்ள மஹா கணபதி கோயில் சாலியர் சமூகத்துக்கு பாத்தியமானது.



1998 இல் நடைபெற்ற ஸ்வர்ண ப்ரசன்னமும் இது சாலியருக்கு பாத்தியப்பட்ட ஆலயம் என்பதை உறுதி செய்தது. சிவராத்திரி உள்ளிட்ட 7 முக்கிய விழாக்கள் சாலியரால் நடத்தப்பட்டு வந்ததாக அந்நிகழ்வில் அறியப்பட்டது.

சேரநாட்டு சாலியர்கள்

சேலத்தில் பத்மசாலியர் மக்கள் தொகை அதிகம்.
சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.


இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.சேர நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம் என்றும் ஒரு கணிப்பு சொல்லப் படுகிறது. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.

விஜயநகர ஆட்சியில் சாலியர்

நாம் முன்னதாகவே சோழர் ஆட்சியில் வாழ்ந்த சாலியர், அவர்களின் சிறப்பு, வாழ்க்கை முறை எல்லாம் பார்த்திருக்கிறோம்.

1540 காலகட்டங்களில் விஜயநகர ஆட்சி தமிழகத்தில் நடந்தது. விஜயநகர அரசர்கள் தெலுங்கு பேசும் நாயுடுகள் ஆதலால் பெருமளவு தெலுங்கர்களைக் குடியமர்த்தத் தொடங்கினர். முன்னதாக ஒரு சாலியர் குழு ஆந்திர கர்நாடக பகுதிகளிலிருந்து தமிழகத்தில் குடியேறி இருந்து வந்தனர். முன் குறிப்பிட்டது போல சோழர் காலம் மற்றும் அதற்கும் முன்பே.

இப்போது மீண்டும் விஜயநகர அரசர்கள் சாலியர்களை தமிழகத்தில் குடியமர்த்தினர்.
அவர்களே இன்றளவும் தாய் மொழியை பற்றாக பிடித்து வைத்துள்ள தெலுங்கு சாலியர் மற்றும் பத்மசாலியர் ஆவர்.

மேலும்.....

கர்நாடக துளு சாலியர்

Talye என்கிற துளுமொழி வார்த்தைக்கு சிலந்தி என்று அர்த்தம். இதிலிருந்து சால்யே என்ற வார்த்தை வந்து , பிறகு சாலியா என்று மாறியது. சிலந்தி வலை பின்னுவது போல நூலால் துணி உற்பத்தி செய்வதால் இந்தப் பெயர் அங்கு. ஆனால் உண்மையான அர்த்தம் நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம் தானே ?



இன்றைக்கு நெசவுக்காக வெவ்வேறு இனங்கள் இருந்தாலும், நெசவு என்ற தொழிலுக்காகவே படைக்கப் பட்டவர்கள் நாம் மட்டுமே.

கர்நாடக மற்றும் துளு (தக்ஷிண கர்நாடகா, வட கேரள) பகுதிகளில் நெசவு செய்யும் நம் இனத்தவர்கள் சாலியா, பத்மஷாலி, மற்றும் செட்டிகார் என்றும் அழைக்கப் படுகிறார்கள்.

சாலியர்களின் விநாயகர்

காஞ்சிபுரத்தில் இருந்து சாலியர்கள் கொண்டுவந்த விநாயகர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் புழுங்கல் அரிசி பிள்ளையார் என்ற பெயரில் அருள் புரிகிறார். அவரின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


சத்திரப்பட்டியும் சாலியர்களும்

முன்குறிப்பு:-
சாலியர் முதலாக குடியேறிய பகுதி தெற்கில் ராமலிங்கபுரத்தை அடுத்து சமுசிகாபுரமே. அந்த காலகட்டத்தில் சத்திரப்பட்டி முதலில் உருவாகி இருக்கவில்லை.

கிபி 1600களின் இறுதி 1700களின் தொடக்கத்தில் மதுரையை தலைநகராக அமைத்து ராணி மங்கம்மாள் ஆட்சி செய்தார். அவர் பல சீர்திருத்தப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதியாக சாலை அமைப்பு.

மதுரையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை மிக நீண்ட சாலையை நிறுவினார். அதே கால கட்டத்தில் மற்றொரு பிரிவாக சமுசிகாபுரத்தை கடந்து செல்லும் மங்கம்மாள் சாலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்பொழுது இருக்கும் வன்னியம்பட்டி சாலை - ஸ்ரீவில்லிபுத்தூர் வரை.



சாலை அமைக்கையில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அந்தப் பகுதியின் பெருந்தலைக்கட்டு கொண்ட இனத் தலைவர் மூலம் பேசி பணி தொடர்ந்தார். அதே கால கட்டத்தில் தான் மேற்படி சாலையின் கிழக்கே சத்திரப்பட்டி வளர்ந்து வந்தது. (பெயர் கிடையாது)

சாலை அமைத்த ராணி, சாலையின் ஓரங்களில் கால்நடைகள் குடிக்க தண்ணீர் தொட்டிகளையும், கடந்து செல்லும் யாத்திரீகர்கள் இளைப்பாற சாத்திரங்களையும் அமைத்தார்.

அதில் ஒரு சத்திரம் மங்கம்மாள் சாலையின் ஓரம் அமைந்த ஊரில் அமைக்கப்பட்டது. பிறகு இதன் காரணம் கொண்டு சத்திரப்பட்டி என்ற பெயர் ஏற்பட்டது. மேற்படி சத்திரம் அந்த இடத்தின் பெரிய இனக்குழுவான சாலியர் பொறுப்பில் இருந்ததாம். அதற்கு முன் சமுசிகாபுரம் என்றுதான் அழைக்கப்பட்டது.

பொதுவாக ஊர் பெயர் அமைக்கும் போது காரணப் பெயர் கொண்டுதான் வைக்கப்படும். பாதுகாப்பு காவல் கொண்ட ஊர் என்றால் "புரம்". படை வீரர்கள் அல்லது வேட்டை சமூகம் வாழும் ஊர் "பாளையம்". மிகச் சிறிய ஊராயின் "பட்டி" என முடியும்.

சத்திரம் இருந்த சிறிய ஊர் சத்திரப்பட்டி. பிறகு காலப்போக்கில் சத்திரம் மறைந்து விட்டது.

இரண்டாம் நூற்றாண்டில் சாலியர்



சாலிய பிராமண நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எழுதி நீன்ண்ட காலம் ஆகிவிட்டது (எழுதாததால் நிம்மதி என்கிறீர்களா ? :) ஓகே)

சாலியர்களுக்கான பட்டங்களை பற்றி பார்க்கையில் , நமக்கு பண்ணாடி, மூப்பனார் என்ற பெயர்கள் கிடையாது என்று பார்த்தோம். மேலும் நமக்கான பட்டங்களாக "அறுவையர்" என்ற பட்டம் இருப்பதாக அறிந்திருக்கிறோம்.

திருத்தொண்டர் புராணம் நேச நாயனாரைக் குறிக்கும் போது "அறுவையர் குல நேசன்" என்றும் கூறுகிறது.

"அறுவை" என்ற பெயரால் தமிழில் துணி குறிப்பிடப்பட்டுள்ளது. அழகர் மலையில் காணப் படும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக் காலத்திய தொல் தமிழ் (பிராமி) கல்வெட்டில் ‘அறுவை வணிகன்’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் துணி வணிகத்தின் தொன்மையை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டு சோழர் காலத்தையது.

சாலியர் பெருமை

பட்டு நூல்காரர்கள் பட்டு நெசவில் தேர்ச்சி பெற்றவர்கள். குஜராத் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். இப்பிரிவினர் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வகையிலான துணிகளை உற்பத்தி செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். கபிஸ்தலம் (சாலியர்), பட்டீஸ்வரம் (பட்டுநூல்காரர்), அன்னியூர் (தேவாங்கர்), வில்லியனூர் (கைக்கோளர்) ஊர்களில் குறிப்பிடத்தக்க அளவில் இந்நெசவாளர்கள் வாழ்ந்தனர். இவர்கள் தமக்கென்று அமைப்புகளை உருவாக்கியும் செயல்பட்டுள்ளனர்.


ஆதாரம் :- சோழமண்டல கடற்கரை, பொருளாதார, சமூக,மற்றும் அரசியல் நிலை என்ற நூல். கி பி 1500 - 1600 இடைப்பட்ட நிலை.

எழுதியவர் ஜெய்சீலா ஸ்டீபன்.

சாலியர்களின் வேர்கள் 2

இன்றிலிருந்து சுமார் எட்டாயிரம் வருடங்களுக்கு தோன்றிய மிகப் பழைய நகரான காசி. அதற்கு பிறகு தோன்றிய இரண்டாவது பழைய நகரமான "ப்ருகுகச்சா" என்ற நகரமாகும். இது பின்னாளில் மருவி "பாருச்" என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.



குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் அருகில் இந்நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள மிகப் பழைய கோவிலான பிருகு

அமைந்த கோவில் புகழ்பெற்ற இடம். அதனைச் சுற்றி சாலியர் வாழ்ந்த மிச்சமாக இன்றளவும் உயர்ந்து இருக்கும் டெக்ஸ்டைல்ஸ் மில்கள் சாட்சியாக இருக்கின்றன.

முன்னதாக பிருகு மகரிஷி நமது குல முதல்வர் என்பதை அறிந்திருக்கிறோம் தானே ??

பிருகு ரிஷியின் குழந்தைகளில் ஒருவரான மஹாலக்ஷ்மீதேவியின் இருப்பிடம் என்று கருதப்படுகிறது.

நாம் ஏற்கனவே சில பதிவுகளில் பார்த்தபடி முதலில் காசி, அடுத்து குஜராத், பஞ்சாப் ஆகியவை நமது இருப்பிடம் என்று பார்த்துள்ளோம்.

சாலியர்களின் வேர்கள் 1

நண்பர்களே வணக்கம். முதலாவதாக இரண்டு விஷயங்கள்.

1. எங்கிருந்தோ தமிழகம் வந்து சேர்ந்த நமக்கு இருக்க இடம் கொடுத்து, உண்விட்டு வாழவைத்தது இந்தத் தமிழ் மண்ணே. அந்த அளவில் இம்மண்ணையும், மக்களையும் வணங்குகிறேன்!!! மதிக்கிறேன்!! ஆனால் நம் மூதாதையர் தமிழர்கள் அல்ல என்பதே நமது சரித்திரம் காட்டும் நிஜம்.

2. நாம் ரிஷிவழி வந்தவர்கள். எப்படியெனில் நாம் ஏற்கனவே சாலியர், பத்மசாலியர் தோற்றம் கட்டுரையில் பார்த்தபடி...

அதுபற்றி ஒரு முன்னோட்டம்..
முன்னோர்களான ரிஷிகள் விவரத்தை மட்டும் முதலில் பார்ப்போம். ரிஷிபத்தினிகள் பற்றி காண மேற்படி கட்டுரையை காணவும்.

1. பகவான் நாராயணன்
2. பிரம்மா
3. பிருகு மஹரிஷி
4. தாத்ரு, விதாத்ரு, லக்ஷ்மிதேவி
5. விதாத்ருவின் மகனான மிருகண்டு மஹரிஷி
6. மார்கண்டேய மஹரிஷி
7. பாவன ரிஷி
8. பாவனரிஷியின் 101 புத்திரர்கள்.
9. பிற்பாடு தோன்றிய சாலிய மஹரிஷி



இதுதான் நமது வம்ச சங்கிலி. நம் மூதாதையர் இந்த ரிஷிகளைப் போற்றியிருக்கிறார்கள்.
வாழ்ந்த இடங்களில் எல்லாம் இந்தச் சுவடுகளை விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை பற்றி படிப்படியாக பார்ப்போமா ?

இலக்கியத்தில் சாலி

இலக்கியத்தில் பத்துப்பாட்டு நூல் வரிசையில் ஒன்றான பொருநராற்றுப்படையில், உயர்ந்த வகை நெல்லைல் குறிக்கும் போது சாலி நெல் என்றே குறிக்கப்பட்டுள்ளது.

இதோ 👇👇👇👇

சோழன் கரிகாலன் ‘சாலி நெல்லின் சிறைகொள் வேலியாயிரம்.

நெசவின் பெருமை

திருக்கை வழக்கம்’ என்னும் நூல் உழவுத்தொழிலை ‘வெய்யத்தொழில்’ (கொடுந்தொழில்) என்றும்,

நெய்தற் தொழிலை ‘தூய தொழில்’ என்றும் கூறுகிறது.



சாலியர் பெருமை

"ஊடுபாவோட்டும் சாலியனும் பாவோட்டாமல் இடைவிட்டு ஓடி வந்தான்” என்று புத்தர் நடந்து வருவதான காட்சியில் ஆசியஜோதியில் கூறப்பட்டுள்ளது .

அனுபவம்

ஒரு சுவையான அனுபவத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன். (உன் அனுபவம் எங்களுக்கு எதற்கு ? என்கிறீர்களா? காரணம் இருக்கிறது)

தெலங்கானாவில் ஒரு மாவட்டத் தலைநகரில் ....
சுமார் நான்கு நாட்கள் முன்பு ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். (வழக்கம் போல ட்ரெய்ன் தாமதம்). ஒரு தமிழ் குடும்பம். திருவாரூரில் பிறந்து , தெலங்கானாவில் செட்டில் ஆனவர்கள். அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். முதலில் தெலுங்கில். (பாவம்..) பிறகு நான் தமிழென்று தெரிந்து கொண்டு தமிழில் ஆரம்பித்தோம்.

அதை இதை பேசி கடைசியில் ஜாதியில் வந்து சேர்ந்தது. என்னை

"என்ன ஜாதி" என்று கேட்டார்

"நான் ஷாலியர் "என்று சொல்ல...

"அட அப்பிடியா!!!! இங்கும் நிறைய இருக்கிறார்களே...தெரியுமா ?"

"தெரியும் ஸார்."

"சரி சரி. #நீங்கல்லாம் அசைவம் சாப்பிட மாட்டேங்கல்ல..?"

"சாப்பிட மாட்டேன்". (நம்புங்கள் நண்பர்களே... நான் சுத்த சைவனே)

"வெரிகுட் வெரிகுட்... இங்கேயும் அப்படித்தான். ரொம்ப கட்டுப்பாடு."

பார்த்தீர்களா நண்பர்களே... யாரோ ஒருவருக்குத் தெரிகிறது- நாம் பிராமணரென்று. ஆனால் நம்மில்????

சாலியனாய் பெருமைப்படுகிறேன்.

சாலியனாய் படைத்ததற்கு பகவானுக்கு நன்றி.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

சாலியர்களின் பட்டம்

முன்குறிப்பு :- நாம் பிராமணர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவுபடுத்திக் கொண்டு படியுங்கள்.




நண்பர்களே...நமது இனத்தின் வேர்கள் எங்கே இருக்கின்றன என்று பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டியது உள்ளது. சொன்னால் கோவிச்சிக்கக் கூடாது.

நமது இனத்தவர்கள் சில பட்டங்களை கொண்டு அழைக்கப்படுகிறார்கள். நம்மில் பலரும் அதை விரும்புகிறோம் - கேவலம் என்று புரியாமலேயே..

மூப்பனார் :- மூப்பர் என்ற தமிழ் வேர்ச்சொல்லுக்கு முதியோர், மூத்தவர், காரணவர் என்ற அர்த்தத்தால் சொல்லப்படும். நமது இனம் இங்கே குடிபெயர்ந்து வந்த போது அந்தக் குழுவின் மூத்த குடி ஆள் மூப்பர் என அழைக்கப்பட்டார். பிறகு அதையே மரியாதையாக மூப்பனார் என மாறியது.

இயல்பாகவே நமக்கு ( சாலியருக்கு ) மூப்பனார் என்ற பட்டம் இருந்ததே இல்லை.
வேறு பட்டங்கள் இருந்தது. இருக்கிறது.

பண்ணாடி :- இதை நாம் சொல்லவே கூடாது. மற்றவர்கள் சொல்ல அனுமதிக்கவும் கூடாது. இது பெரும்பாலான முதலாளி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. பெரிய பண்ணை நிலங்கள் வைத்திருந்தவர்கள் பண்ணாடி என்று அழைக்கப்பட்டனர்.
அது நமக்குப் பெருமை அல்ல. முன்குறிப்பை மறுபடி ஒருமுறை படிக்கவும்.

சரி.... அப்படியானால் நமக்கான பட்டம்தான் என்ன ?
பெரிய புராணத்தில் நமக்கு "அறுவையர்" என்ற தொழில்சார்ந்த பட்டம் இருக்கிறது. என்றால் துணியை நெய்து அறுப்பது. "அடவியார்" என்றும் ஒரு பட்டம் உள்ளது. ஆந்திராவில் பத்ம பிராமணர்.

புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. மூப்பனார், பண்ணாடி என்பது நமக்கு பெருமை அல்ல. சொல்லப்போனால் பண்ணாடி என்பது நமக்கு சிறுமைதான்.

வியாழன், 19 ஜனவரி, 2017

சாலிய மஹரிஷி

Print எடுத்து சாலிய மஹரிஷி படத்தை கோவிலில் மாட்டும் அளவுக்கு தரலாமா என்று சில நண்பர்கள் இன்பாக்ஸ் இல் கேட்டார்கள். என் போட்டோஷாப் நண்பர் ஒருவரிடம் கேட்டு , அவர் இப்படி கொடுத்திருக்கிறார்.

இந்தப் படம் சரிவருமான்னு பாருங்க.

முதுமொழியில் நெசவு

செய்யும் தொழிலை சீர்தூக்கி பார்க்கும்கால் நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை.


சாலியரும் பாரம்பரிய மீட்பும்


(கீழ்கண்ட பதிவு நமது பாரம்பரிய கலாச்சார பழக்கங்களையும், நமது பெருமையும் மதிப்பவர்களுக்கு. சாலியர் என்பதில் பெருமிதம் கொள்ளும் நண்பர்களுக்கானது. மற்றவர்கள் இதைப் படிக்காமல் கடந்து சென்று விடுங்கள்)

நமது பழங்கால கலாச்சாரத்தையும், நாம் ரிஷி குலத்தில் வந்தவர்கள் என்பதயும் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள ஒருவழி இருக்கிறது. அதுதான் பூணூல் அணிவது.

ஆம்!!!

நமது உணர்வுகளை வலுவாக்க அதுதான் சிறந்த வழியாக இருக்கும். நிற்க...

இது துவங்கி ஒருசில விளக்கங்கள்.

பூணூல் அணிவது உபநயனம் என்ற பெயரில் நமது இனத்தில் நடத்தப்பட்டு வந்ததது. இப்போதும் சில ஊர்களில் (மாயவரம், மணமேடு, வடசேரி) நடைபெற்று வருகிறது.

நமது ஏழூர் சாலியர் வகைகளில் இப்பழக்கம் கைவிடப்பட்டு குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகள் ஆயிற்று.

இது சம்பந்தமான சிந்தனை எனக்கு வரத்துவங்கிய கட்டங்களில் பல சாஸ்திர விற்பன்னர்களை அணுகினேன்.
ஒரு சமயம் ப்ரும்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் சொல்லும்போது "ஒரு குடும்பத்தில் உபநயனம் வழி வழியாக நடத்தப்பட வேண்டியது. ஒருவேளை தகப்பனுக்கு அந்தச் செயல் விடுபட்டு விட்டால் அவனுடைய மகனுக்கு இல்லை என்பதல்ல. (தகப்பனே காயத்திரி போன்ற மந்திர உபதேசம் செய்து, பூணூல் அணிவிக்கவேண்டும். எனவேதான் இப்படி சொல்கிறார்) குருவே எல்லாமாக இருந்து அவனுக்கு பூணூல் அணிவிக்க வேண்டும். அவனுக்கான அணியும் உரிமை எப்போதும் மறுக்கப் படக் கூடாது" என்று குறிப்பிட்டார்.

விஷயத்துக்கு வருவோம்...

நாம் மூன்று தலைமுறையாக பூணூல் அணியவில்லை. அதற்காக நமது உரிமை போய்விட்டதென்பதல்ல. நாம் அணியலாம். அணிந்துகொள்ள வேண்டும்.

நமது இனத்தவர் வாழும் ஊர்களில் நிறைய நண்பர்கள் அணிய விரும்பினால் சமஷ்டி உபநயனமாக (நிறைய பேர்களுக்கு ஒரே நேரத்தில் அணிவது) செய்யலாம். ஒரு பொது இடத்தில் நடத்த வேண்டும். இப்படியான ஒரு ஏற்பாட்டை செய்வதானால் நான்கூட என்னால் முடிந்த ஆலோசனை உதவி செய்யலாம். (உன் ஆலோசனை எங்களுக்கு தேவையில்லை என்கிறீர்களா.... ஓக்கே :D )

பூணூல் சம்பந்தமாக சில பொது விதிமுறைகள் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. அதை பிறகு சந்தர்ப்பம் வாய்த்தால் பார்ப்போம்.

வாருங்கள் நண்பர்களே. நமது பாரம்பரியத்தை மீட்டேடுப்போம்!

இழந்த பெருமையை மீட்போம்!!

சாலியராய் இணைவோம்!!!

கண்ணூர் சாலியர்



கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யன்னூரில் இருக்கும் அஷ்ட்டமச்சல் பகவதி அம்மன் கோவிலில் உலகப் புகழ்பெற்ற மீனமிருத்து திருவிழா கேரள சாலியர்களால் நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழாவின் தெய்யம் நடனம் கேரள பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகும்.

என்றும் சாலியருடன் பத்மாவதித்தாயார்



சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு பத்மசாலியர் மற்றும் பட்டுசாலியரிடம் ஒரு விஷயத்தில் குழப்பமும் விவாதமும் ஏற்பட்டது. அதாவது இரண்டு சாலியருமே பத்மாவதித் தாயார் தங்களது ஜாதி என்று உரிமை கொண்டாடினர்.

இவ்விஷயமாக முடிவு காண்பதற்கு தாலப்பாக்கம் (அன்னமாச்சாரியார் பிறந்த ஊர்) சின்ன திருவேங்கடநாத குருவிடம் சென்று இதற்கு ஒரு முடிவை வேண்டினர். அப்போது ஸ்ரீ பத்மாவதித்தாயார் பிரத்யக்ஷமாக எழுந்தருளி "நான் பத்மசாலியர் இனத்தவர்" என்று கூறி "பத்மசாலியர் கொடுக்கும் மரியாதையையே முதன்மையாக ஏற்பேன்" என்று கூறினார். இந்தத் தீர்ப்பு அக்டோபர் 23, 1541 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இவ்விஷயம் பத்மாவதி தாயார் ஆலயத்தில் உள்ள செப்புத்தகட்டில் இன்றும் இருக்கிறது.

சாலியர் என்பதில் பெருமை கொள்ளுங்கள் உறவுகளே

தறி நெசவின் முழு விபரம்

தறியின்பாகங்கள்

1. விழுது
2. அச்சு
3. நாடா அல்லது ஓடம்
4. அடிமரம்
5. துணியை சுற்றும் கட்டை (ரோலர் கட்டை)
6. கால் மிதி பலகைகள்
7. பாவு நூல்
8. ஊடை நூல்
9. நாடா ஓடும் பலகை அதாவது தண்டவாளம்.



இவை மாத்திரமல்ல. வேறு பாகங்களும் உண்டு. ஆனால் இவையே முக்கிய பாகங்கள்.

விழுது:- இது மெல்லிய பாலீஸ் செய்யப்பட்ட கயிறு அல்லது ட்வைன் ஆகும். கீழே இருக்கும் படத்தில் HEDDLES என்ற பாகம். இதன் மத்தியில் கண் போன்ற துளைகள் காணப்படும். பாவின் நூல் இதன் வழியாக முதலில் வரும். அதன் பின் அச்சுக்கு வரும். விழுதானது பண் என்று அழைக்கப்படும். பண் என்ற தமிழ் வேர்ச் சொல்லுக்கு இசையின் காட்ட பயன்படும் வார்த்தையாகும். இங்கு துணியின் வகையை வேறு படுத்தி இப்பெயர். மேலும் மேலிருந்து கீழாக விழுவது போல இருப்பதாலும் இப்பெயர். மேலும் வேதமென்ற சொல்லுக்கும் பண் என்ற மொழிபெயர்ப்பு உண்டு. துணியின் அகலம், அடர்த்தி (நெருக்கம்) இவைகளின் தேவையைப் பொறுத்து இருக்கும்.



அச்சு:- அச்சானது இரும்பு கம்பிகளால் ஆனது. பட்டை வடிவ கம்பியை வரிசையில் வைத்தது போல இருக்கும். கீழ்கண்ட படத்தில் REED என்ற பாகம். இதுவும் விழுது போல துணியின் அடர்த்திக்கேற்ப அமையும். விழுதில் இருந்து வரும் பாவு நூல் அச்சின் வழியாக வரும். அச்சு கைபிடிக்கும் மரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்தக் கை மரமே தறியின் முக்கியமான பாகமாக நினைக்கப் படுவதால், இதுவே சில இடங்களில் தறி என்று அழைக்கப்படும். அச்சானது ஊடை நூலை நெருக்குவதற்கும்(கையால் இழுத்து சேர்க்கப்படும்), துணியின் தரத்தை நிர்ணயிக்கவும் பயன்படும்.



அடிமரம்:- அச்சு மாட்டப்பட்ட கைமரமே அடிமரம். அதாவது அடிப்படை மரம். எனவேதான் இது தறி என்றழைக்கப்படும். அடிமரத்தை அசைக்கும் போது பாவு நூலானது ஒரு இழை விட்டு ,ஒரு இழையாக இரண்டு பாகங்களாகப் பிரியும். இந்தப் பிரிவுக்கு நடுவில் தான் ஊடை நூலை ஓடம் அதாவது நாடா இழுத்துச் செல்லும். அந்த நூல் முன்பு சொன்னது போல நெருக்கப் படும்.


தறியின் முழு விபரம் 2

காலுக்கு இரண்டு மிதி பலகைகள் இருக்கும். ஒன்றை மிதிக்கையில் முன் சொல்லப் பட்ட படி ஒரு விழுதின் கண்ணில் இணைக்கப்பட்ட பாதி பகுதி நூலானது கீழிறங்கி இன்னொரு பகுதி மேலே ஏறும். இந்த இடைவெளியில் ஒரு முனையிலிருந்து, நாடாவின் வழியாக ஊடை நூல் குறுக்காகப் பயணப்பட்டு அடுத்த முனைக்கு செல்லும். நாடாவில் கிடைமட்டமாக ஒரு ஊசி போன்ற கம்பி இருக்கும். அந்தக் கம்பியில், ஒரு சிறிய குழலில் சுற்றப்பட்ட நூல் இருக்கும். இந்த குழலோடு சேர்ந்த நூலானது தார் எனப்படும். சில இடங்களில் "கண்டு"என்றும் சொல்லப்படும்.

ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு நாடா பயணிக்கும் மரமானது தண்டவாளம் எனப்படும். ஓரத்துக்கு சென்ற நாடா ஒரு பெட்டி மாதிரியான அமைப்பில் சென்று சேரும். அந்தப் பெட்டிக்கு பெட்டிப் பலகை என்று பெயர். இருபுறமும் இருக்கும். பெட்டிப்பலகையில் சேர்ந்த நாடா கை உருளையில் கட்டப்பட்ட கயிற்றினால் இழுக்கப்பட்டு அடுத்த முனைக்கு செல்லும். இதற்கு முன்பே மிதி பலகையின் அடுத்த கால் மிதிக்கப்பட்டு முன் சொன்னபடி நாடா செல்லுமளவு இரண்டு பாகம் பிரிந்த இடைவெளி ஏற்பட்டிருக்கும். இங்கே இரண்டு பாகங்களாக நூல் விழுது மூலம் பிரியும் அமைப்புக்கு "புணி என்று பெயர். இரண்டு புணிகள் மேலொன்றும் கீழொன்றுமாக மாற்றி மாற்றி ஏறி இறங்கும். அப்போது தான் ஊடை நூல் பின்னியதைப் போல இருக்கும்.

இடப்புறமும் வலப்புறமும் சென்ற நாடாவில் இருக்கும் நூல் கைப்பிடியால் இழுக்கப்பட்டு அச்சின் மூலம் நெருக்கப்படும்.

மிதிபலகையும்_புணியும் :-

மிதி பலகைகளை மாற்றி மாற்றி மிதிக்கையில் புணிமேலும் கீழுமாக ஏறி இறங்க விழுதுக்கும் மிதி பலகைக்கும் இடையில் ஒரு உருளை போன்ற சக்கரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக கிணற்றில் நீர் இறைப்பதற்கு ஒரு உருளை பயன்படும் அல்லவா ? அதே அமைப்புதான். அதாவது கயிற்றின் முனையை கையிலிருந்து தளர்த்தும் போது வாளியின் பாரத்தால் உருளை சுழன்று வாளி கிணற்றுக்குள் இறங்கும். நீர் நிரம்பிய உடன் கையில் இருந்த கயிறு இழுக்கப் படும். அப்போது உருளை சுழன்று வாளி மேலே வரும்.

இதே அமைப்புதான். உருளையில் சுற்றப்பட்ட கயிற்றின் புணிகளை ஒரு புணியை வாளி முனையாகவும், இன்னொரு புணியை கயிற்றின் கையிருக்கும் முனையாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாடாவின் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட ஊடை நூல் (ஊடால (கிராமத்து பாஷை) அதாவது இடையில் செல்வதால் ஊடை நூல்)
நெருக்கப்பட்டு துணியாக வளரும். வளர்ந்த துணி ,
துணியை சுற்றும் கட்டையில் (ரோலர்க் கட்டை) சுற்றப்படும். குறிப்பிட்ட கஸங்களில் அல்லது மீட்டர்களில் மையினால் அடையாளம் இட்ட குறி இருக்கும் இடம் வந்ததும் துணி அறுக்கப்படும்.

தறிகளில் இரண்டு வகைகள் உண்டு. மிதிபலகை குழி தோண்டி அதற்குள் வைக்கப்பட்டு இருக்கும். இறங்கி அமர்ந்துதான் நெய்ய வேண்டும். அது குழித்தறி எனப்படும். மற்றதில் எல்லா பாகங்களும் மேலே இருக்கும். ஒரு மேஜை போன்ற இருக்கையில் அமர்ந்து நெய்ய வேண்டும். எனவே இது மேஜைத்தறி என்றும் சில இடங்களில் சப்பரத்தறி என்றும் சொல்லப்படும்.

பின்குறிப்பு :- மேலே சொன்ன விபரங்களை நான் பார்த்ததை எழுத்தில் கொண்டுவர முயற்சி செய்துள்ளேன். முடிந்தவரை படத்திலும் விளக்க முயற்சி செய்துள்ளேன். படிப்பவர்களுக்கு புரியுமா என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. புரிகிறதா என்று தயவுசெய்து கமெண்ட்டில் சொல்லவும்.

இன ஒற்றுமை.

நமது இன ஒற்றுமைக்கும், பாரம்பரியத்தை மீட்டெடுக்க சில வழிகள் உள்ளன.

1. நமது நேச நாயனார் குரு பூஜையை நம் இனத்தவர் வாழும் இடங்களில் எல்லாம் கட்டாயம் கொண்டாடப் படவேண்டும்

அவரை மக்களின் மனதில் எடுத்துச் செல்ல, பதிய வைக்க எளிய வழி , அவரது குருபூஜை அன்று அவர் படத்தை வைத்து பூஜை செய்து, புளியோதரை போன்ற ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கப் பட வேண்டும்.

நேச நாயனார் குருபூஜை பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரம்.





2. நமது மக்களுக்கு ஒன்றிய, பிரிக்கவே முடியாத விஷயம் இறை வழிபாடு.

நம் மக்கள் இருக்கும் எல்லா இடத்திலும் கண்டிப்பாக கோவில்கள் இருக்கும். அவற்றிலே சாலிய_மஹரிஷியின் படத்தை சுவற்றில் பெரிதாக வைத்துவிட்டால் நாம் ரிஷிவழி வந்த பிராமணர்கள் என்பது நினைவுக்கு வந்துகொண்டே இருக்குமே...

எல்லா நமது கோவில்களிலும் இது செய்யலாம்.
தெரியாத மக்கள் யாரென்று
கேட்டு ..அதற்கு சொல்லி... அப்படியே வளர்ந்துவிடும் மாற்றம்.

அதற்கு என்னால் முடிந்த சிறு உதவியாக வீரராகவப் பெருமாள் கரத்தின் கீழே அமர்ந்த சாலிகோத்திர மகரிஷியின் படத்தை எடுத்து போட்டிருக்கிறேன். இதை போட்டோவாக்கி பயன் படுத்திக் கொள்ள முடியும். அல்லது உங்கள் விருப்பம். நமது இளைஞர்கள் நினைத்தால் முடியும்.

வாழ்க நமது ப்ராமணர்க்கு நிகரான சாலியர் குலம்.

கீழே படம்.