செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களின் திருமணம்(பரிசம்)

சாலியர்களில் திருமணம் பெரும்பாலும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டதாகவே இருக்கும். சில சமயங்களில் காதல் திருமணமும் உண்டு. முற்காலத்தில் மாப்பிள்ளை வீட்டார்தான் பெண்ணுக்கு பரிசப் பணம் கொடுத்து திருமணம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது பரிசம்(தொகை) கொடுப்பது நின்று வரதட்சணை எனபது வழக்கமாக நடக்கிறது.

ஆனால், அம்மான் அல்லது அத்தை மகளை மணக்கையில் வரதட்சணை முக்கிய இடம் வகிப்பதில்லை. உறவுக்கே முதலிடம்.

பெரியவர்களால் ஜாதகப் பொருத்தம் பார்த்து முதலில் பரிசம் போடுவது வழக்கம். இப்போது பெண்ணுக்கு தொகை கொடுப்பதில்லை என்றாலும் பரிசம் என்ற சடங்கு நடந்தே வருகிறது.

பரிசத்துக்கு குறித்த நாளில் மாப்பிள்ளை வீட்டார், தங்கள் உறவினர்கள், உற்றார், ஊர்ப்பெரியவர்கள், நாட்டாண்மை இவர்களுடன், பெண்கள் தாம்பாளத்தில் தேங்காய், பழங்கள், மலர்கள், கற்கண்டு, சேலை, ரவிக்கை எல்லாவற்றையும் சுமந்து வருவார்கள்.

பிறகு நாட்டாண்மை முன்னிலையில், அல்லது பெரியவர்கள் முன்னிலையில் பெண், மாப்பிள்ளை இவர்களின் தகப்பனார்கள் இருவரும் சந்தனம் பூசி, விபூதி அணிந்து கழுத்தில் பூமாலை அணிந்து உட்காருவார்கள். சில சமயம் காதிலும் பூ வைப்பதுண்டு.

இருவரும் எதிரெதிராக உட்கார்ந்த பிறகு இருவருக்கும் நடுவில் ஒரு முக்காலிப் பலகை வைக்கப்பட்டு, அதன் மேல் ஒரு சிறிய ஓலைப்பெட்டியில் நெல் நிரப்பப்பட்டு, அதன் மேல் மஞ்சள் கிழக்கு மற்றும் புடவை, பூக்கள் வைக்கப்படும். நாட்டாமை நிச்சயம் செய்யும் விவரத்தை கூறுவார். அதாவது இன்னாரின் மகளை இன்னாரின் மகனுக்கு கொடுப்பதாக சம்பிரதாயமாக அறிவிப்பார்.

பிறகு மாப்பிள்ளையின் தகப்பனார், பரிசமாக மேற்படி ஓலைப் பெட்டியை பெண்ணின் தகப்பனாரிடம் வழங்குவார். அதைப் பெற்ற பெண்ணின் தகப்பனார் பெண்ணின் தாய் மாமாவிடம் அந்தப் பெட்டியைக் கொடுப்பார். சில ஊர்களில் பரிசத்தட்டை மாற்றும் உரிமையும் தாய்மாமனுக்கே.


தாய்மாமன் பரிசப்பெட்டியை பெண் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்வார். மணப் பெண் தன் முந்தானையை விரித்து ஏந்தி அந்தப் பரிசப் பெட்டியை வாங்கிக் கொள்வாள். பெண்கள் குலவையிட்டு அதை வரவேற்பார்கள். பெண் தன் பரிசப் புடவையை அணிந்து கொள்வாள்.

சுமங்கலி பெண்களுக்கு இதன்பிறகு சந்தனம் குங்குமம் வழங்கப்படும். பிறகு நாட்டாண்மைக்கும் வந்திருக்கும் பெரியோர்களுக்கும் தாம்பூலம் வழங்கிய பிறகு அனைவரும் விடை பெற்றுக் கொள்வார்கள்.

இது முடித்த ஓரிரு நாட்களில் பெட்டியிலிருந்த நெல்லை மாவாக்கி, அதை அனைவருக்கும் வழங்குவார்கள். இத்துடன் பரிசச் சடங்கு முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar