சனி, 17 செப்டம்பர், 2016

சாலிய செட்டியார்கள்




கண்டறியப்பட்ட கல்வெட்டு
**



மாயவரம் போன்ற பகுதிகளில் சாலியர்கள், சாலிய செட்டியார்கள் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரிந்ததே. அதை மெய்பிக்கும் வகையிலான செய்தி.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு 20 கிமீட்டர் தூரத்தில் மேல்மலையனூர் என்ற ஊர் உள்ளது.  இங்குள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்த அம்மன்.
இங்கு திருப்பணிக்காக ஆராயும் போது பழங்கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.

கல்வேட்டின் எழுத்து அமைப்பில் ஸ்ரீ மன் மகா மண்டலேசுவரம் என்று எழுதப்பட்டிருப்பதால், இது  விஜயநகர காலத்தைச் சேர்ந்தது என்று ஆய்வில் தெரிய வந்தது.

இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கூறும்போது, "ஸ்ரீ வேங்கடபதி  மகாதேவராயர் (கி.பி.1582-1619) காலத்தில், வாணாதராய முதலியார் (கி. பி.1587-1597) வேட்டவலம் நிலப்பகுதியின் பாளையக்காரராக இருந்தார். இந்த  பாளையக்காரர்கள் கட்டுப்பாட்டின்கீழ் மேல்மலையனூரும் இருந்து வந்திருக்கிறது  என்பதை புதிய கல்வெட்டின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

வாணாதராய முதலியாரின் பிரதிநிதியாக எல்லப்பிள்ளை என்பவ்ர் நியமிக்கப்பட்டு இவ்வூரில் குடிமை, நெசவு சம்மந்தப்பட்ட வரிகள் வசூலிக்கப்பட்டதை இந்தக் கல்வெட்டு எடுத்துக்கூறுகிறது. வசூலிக்கப்பட்ட வருவாயில் ஒரு பகுதியை ஊரில் அமைந்துள்ள இளையநாயனார் (ஸ்ரீமுருகப்பெருமான்) வழிபாட்டுக்குச்  செலவிடப்பட்டுள்ளது. மலையனூரில் நெசவுத் தொழிலை நெசவுக் குடியான மும்மடி செட்டியார் மற்றும் சாலிய செட்டியார் ஆகிய பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் ஊரில் குடியிருப்பவர்களிடமும், நெசவுக்குடிகளிடமும், பாவுக்கும் முழுத்தறிக்கும் முறையே அரைப்பணம், முக்கால் பணம், ஒரு பணம் என வரி வசூலித்துள்ளனர். இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும். கல்வெட்டை கொத்தியவன் கணக்கு எல்லப்பன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு இது.

1 கருத்து:

  1. சாலியர்/ பத்மசாலியர் செட்டியார் வகைகளுள் ஒன்றாகுமா? தயவு கூர்ந்து விளக்கவும். நன்றி

    பதிலளிநீக்கு

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar